Published:Updated:

சாக்கு மூட்டையில் கிடத்தப்பட்ட மொழிப்போர் தியாகி வீரப்பன் சிலை... மணிமண்டப திறப்பில் அரசியல்!

சாக்கு மூட்டையில் கிடத்தப்பட்ட மொழிப்போர் தியாகி வீரப்பன் சிலை... மணிமண்டப திறப்பில் அரசியல்!
சாக்கு மூட்டையில் கிடத்தப்பட்ட மொழிப்போர் தியாகி வீரப்பன் சிலை... மணிமண்டப திறப்பில் அரசியல்!

``இப்போது நம் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காகப் போராடினால் ஆட்சியில் இருக்கிறவங்க சுட்டுக்கொல்றாங்க. நம்முடைய மொழியைக் காக்க, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட தியாகியின் மணிமண்டபத்தைத் திறக்க விடாமல் அவரின் சிலையைச் சாக்குச்சுற்றி மூலையில் வைக்கும்படி செய்துவிட்டார்கள் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்களும், அ.தி.மு.க அரசும். இதுக்கு விமோசனம் இல்லையா?" என்று வெடிக்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது தெற்கு அய்யம்பாளையம். இந்தக் கிராமத்தில் ஆசிரியராக இருந்து, 1965-இல் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்திக்கொண்டு உயிர் நீத்தவர் தியாகி வீரப்பன். அவருக்காக, அந்தப் பகுதி மக்கள், ஐந்து லட்சம் ரூபாய் செலவில் மணி மண்டபமும், சிலையும் அமைத்தனர். ஆனால், பி.ஜே.பி-யைச் சேர்ந்த லோக்கல் புள்ளிகள் மற்றும் இப்போதைய அ.தி.மு.க அரசு அதிகாரிகளின் முட்டுக்கட்டையால் கடந்த இரண்டு வருடங்களாக, அந்த மணிமண்டபத்தைத் திறக்க முடியாமலும், வெண்கலச் சிலையை நிறுவ முடியாமலும் தெற்கு அய்யம்பாளையம் கிராம மக்கள் அல்லாடி வருகிறார்கள். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த புலவர் கருப்பையா வீட்டுக்குள் சாக்கில் சுற்றப்பட்டு ஒரு மூலையில் பரிதாபமாகக் கிடக்கிறது தியாகி வீரப்பனின் வெண்கலச் சிலை.

இதுபற்றி நம்மிடம் பேசிய தெற்கு அய்யம் பாளையத்தைச் சேர்ந்த புலவர் கடவூர் மணிமாறன், ``தியாகி வீரப்பனுக்குச் சொந்த ஊர் உடையார்பட்டி. ஆனால், இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது எங்க ஊரில் அவர் ஆசிரியராகப் பணியாற்றினார். பள்ளிக் கரும்பலகையில், `தமிழ் வாழ்க...இந்தி ஒழிக' என்று எழுதி வைத்துவிட்டு, காவல்துறைக்குத் தனியாக ஒரு கடிதம், தமிழ் மொழி மீதான தன்னுடைய காதல் குறித்து தனிக் கடிதம் ஆகியவற்றை எழுதி வைத்துவிட்டு, அதிகாலையில் தன்னுடைய உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி கொளுத்திக் கொண்டார். இந்தச் சம்பவம் 11.02.1965-இல் நடந்தது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும், அவர் உயிர்நீத்த நாளன்று எங்கள் ஊரில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடத்த ஆரம்பிச்சோம். அதன்பிறகு 2015- ம் ஆண்டு அவருக்கு எங்க ஊரில் தியாகி வீரப்பனுக்கு மணிமண்டபம் அமைக்க முடிவு பண்ணி, நிதி வசூல் பண்ணினோம். நான்கு லட்ச ரூபாயில் மணிமண்டபமும், ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயில் வெண்கலச் சிலையும் உருவாக்கினோம். 2016-ம் ஆண்டு ஜனவரி 30- ம் தேதி திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியனையும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியையும் வைத்து, மணி மண்டபத்தைத் திறக்க ஏற்பாடு செய்தோம். கடவூர் காவல்நிலையம், அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர்-னு எல்லார்கிட்டயும் முறையா அனுமதி வாங்கித்தான் மணிமண்டபத் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால், எல்லாரும் வந்து நிகழ்ச்சி நடந்தது. மணிமண்டபத்தைத் திறக்கப் போனப்ப, கரூர் மாவட்ட பி.ஜே.பி. பொதுச் செயலாளர் கைலாசம், கடவூர் ஒன்றியத் தலைவர் அண்ணாவி இருவரும் பிரச்னை பண்ணாங்க. அதனால், போலீஸூம் மணிமண்டபம் திறப்பதற்குத் தடை போட்டுட்டாங்க" என்றார்.


 

சிலை அமைப்புக் கமிட்டி கௌரவத் தலைவர் மேலை.பழனியப்பன் கூறுகையில்,

``விழா நடந்தபோது, கரூர் கலெக்டராக இருந்த கோவிந்தராஜை பலமுறைப் பார்த்து, மணிமண்டபத்தையும், வீரப்பன் சிலையையும் திறக்க அனுமதி கேட்டோம். அவர் அனுமதி தரவேயில்லை. முதல்வரின் தனிப்பிரிவுக்கும் பலமுறை மனு போட்டோம். ஒண்ணும் நடக்கலை. இதனால், வீரப்பன் சிலையை, சாக்கில் சுற்றி புலவர் கருப்பையா வீட்டில் வைத்துவிட்டோம். இப்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க அரசு, தியாகி வீரப்பனுக்குச் சிலை அமைக்க விரும்பலை. பி.ஜே.பி-யுடன் கூட்டுச் சேர்ந்துக்கிட்டு, இப்படிச் சிலையைத் திறக்க அனுமதி மறுக்கிறாங்க. இப்போதுள்ள கலெக்டர் அன்பழகனாவது மணிமண்டபத்தை திறக்க அனுமதி தரணும். வீரப்பன் போன்றவர்களின் உயிர்த் தியாகத்தில்தான் அ.தி.மு.க போன்ற கட்சிகள் வளர்ந்திருக்கு. ஆனால், அதுபோன்ற தியாகிகளுக்குச் சிலை அமைக்கவோ, மணிமண்டபம் அமைக்கவோ அ.தி.மு.க தடையாக இருப்பது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. தூத்துக்குடியில் வாழ்வாதாரப் பிரச்னைக்காக மக்கள் போராடினால் சுட்டுக் கொல்றாங்க. இப்படி மொழிக்காகப் போராடிய ஒரு மாபெரும் தியாகியின் மணிமண்டபத்தைத் திறப்பதற்குத் தடையாக இருக்கிறாங்க. இந்த ஆட்சி எதைத்தான் அனுமதிக்கும்?" என்ற `சுருக்' கேள்வியோடு முடித்தார்.

தி.மு.க. மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், ``தியாகி வீரப்பனின் மணிமண்டபம் மற்றும் வெண்கலச் சிலை திறப்புக்குத் தடையாக பி.ஜே.பி-யும், ஆளுங்கட்சியும் இருப்பதாகச் சொல்கிறார்கள். வீரப்பன் போன்றோரின் தியாகங்களையும், தமிழகப் போராட்ட வரலாற்றையும், திராவிடக் கட்சிகள் வளர்ந்த பாதையையும் அ.தி.மு.க அரசு, மறுதலிக்கப் பார்க்கிறது என்பதையே இந்தச் செயல் வெளிப்படுத்துகிறது. வீரப்பனின் மணிமண்டபத் திறப்புக்கு முறையான அனுமதி கிடைக்கவில்லையென்றால், நீதிமன்றம் மூலமாகவோ, போராட்டம் நடத்தியோ அனுமதி பெறுவோம். அதன்பிறகு எங்கள் செயல்தலைவர் ஸ்டாலினை அழைத்து, அவரது கரங்களால் மொழிப்போர் தியாகி வீரப்பனின் மணிமண்டபத் திறப்பு விழாவை நடத்துவோம்" என்றார் அதிரடியாக!.

பி.ஜே.பி.-யின் கரூர் மாவட்டத் தலைவர் முருகானந்தத்திடம் பேசினோம்.

``நாங்க வீரப்பன் மணிமண்டபம் மற்றும் சிலையைத் திறப்பதற்கு எதிர்ப்பெல்லாம் தெரிவிக்கவில்லை. வீரப்பன் சிலை அமைக்க, பி.ஜே.பி. மாவட்ட பொதுச் செயலாளர் கைலாசமும், கடவூர் ஒன்றியத் தலைவர் அண்ணாவியும் நிதி கொடுத்திருக்கிறார்கள். அப்படி இருக்கையில், நாத்திகம் பேசுபவர்களை அழைத்து, அந்தச் சிலையைத் திறக்க முயன்றதால் குரல் எழுப்பியுள்ளனர். மத்தபடி சிலைத் திறப்பு நிகழ்ச்சியைத் தடுக்கவெல்லாம் இல்லை. இப்போதும் வீரப்பனின் சிலையைத் திறக்க  பி.ஜே.பி. எதிரியாகவெல்லாம் இல்லை. ஆனால், நாத்திகம் பேசுபவர்களை வைத்து வீரப்பன் சிலையைத் திறப்பதை அந்த ஊர் மக்களே விரும்பவில்லை என்பதுதான் உண்மை" என்றார்.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் பேசினோம். ``இப்போதுதான் என் கவனத்துக்கு இந்த விஷயம் வந்துள்ளது. என்னன்னு பார்க்கச் சொல்கிறேன்" என்று கூறி முடித்துக்கொண்டார்.

எதை எதையோ மறந்து போகும் ஆளும் அ.தி.மு.க-வுக்கு, வீரப்பன் போன்ற தியாகிகளின் உயிர்த் தியாகங்களும் மறந்துபோவதில் ஆச்சர்யமில்லைதான்...!