Published:Updated:

'கைதுப் படலம் முடியவில்லை!'

பிரகடனம் செய்த ஜெ. பீதியில் தி.மு.க.!

##~##
'கைதுப் படலம் முடியவில்லை!'

புதிய ஆட்சி அமைந்து முதல் தடவையாகக் கூடியது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு. புதிய முதல் வரைச் சந்திக்கப்போகிறோம் என்ற பதற்றமும் உற்சாகமுமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வந்திருந்தார்கள். கடந்த 13, 14 தேதிகளில் நடந்த மாநாடு, வரும் ஐந்து ஆண்டு காலம் ஆட்சியின் போக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு அடையாளமாக இருந்தது! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் லஞ்சம் பெறுவதோ முறைகேடுகளோ இருக்கக் கூடாது'' என்று தீர்க்கமான குரலில் முதல்வர் ஜெயலலிதா தனது முன்னுரையில் சொன்னார். பல்வேறு விஷயங்களைப் பேசினாலும் அவர் குறிப்பால் உணர்த்த நினைத்தது, தடங்கல் இல்லாத நிர்வாகம்தான்!

இன்று தமிழகத்தைக் கலக்கிக்கொண்டு இருக்கும் நில அபகரிப்புக் கைதுகள் தொடர்பாக, தனது நடவடிக்கைகளை பட்டவர்த்தனமாக முதல்வர் சொல்லியது பல அதிகாரிகளுக்கே திகிலைக் கொடுத்தது!

''தமிழகத்தில் நில அபகரிப்பாளர்கள் மீதான நடவடிக்கை தொடரும்...'' என்று சொன்ன முதல்வர் இது தொடர்பான சில டெக்னிக்கல் விளக்கங் களையும் சொன்னாராம்.

'கைதுப் படலம் முடியவில்லை!'

கைதான சிலர் உடனடியாக வெளியே வந்து விடுவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பில் ஈடுபட்டுக் கைதாகிறவர்கள், தற்போதைய நடைமுறைச் சட்டத்தில் உள்ள சந்து பொந்துகளைப் பயன்படுத்தித் தப்பிச் செல்கிறார்கள். சட்டத்தில் இருக்கும் சாதக அம்சங்களை வைத்து சில மாதங்களில் ரிலீஸ் ஆகிவிடுகிறார்கள். இதற்காகக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் உள்ள பிரிவில் சிறு திருத்தம் கொண்டுவர வேண்டும். தமிழக போலீஸ் துறையின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை சேலம் போலீஸ் கமிஷனர் மாஹாளி, மாநாட்டில் முதல்வரிடம் சொன்னாராம்.

''குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள சட்டப் பிரிவுகளில் குடிசைப் பகுதி நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லி வழக்கு போட வேண்டிருக்கிறது. இதையே நில அபகரிப்பு என்று பொதுவாகத் திருத்தம் செய்தால், எங்களுக்கு உதவியாக இருக்கும். இதேபோல், மிகப் பெரியக் குற்றச் செயல்களில் யாராவது ஈடுபட்டால், உடனே அவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயிலில் போட நினைக்கிறோம். ஆனால், இங்கேயும் சட்டச் சிக்கல். அந்த நபர் தொடர் குற்றங்களைச் செய்வது வருவராக இருந்தால் மட்டுமே, அதாவது, ஹேபிச்சுவல் அஃபெண்டர் (லீணீதீவீtuணீறீ ஷீயீயீமீஸீபீமீக்ஷீ) என்று போலீஸ் ரெக்கார்டுகளில் ஏற்கெனவே இருந்தால் மட்டுமே, குண்டர் தடுப்புச் சட்டத்தில் போட முடிகிறது. இதிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும்'' என்றார்.

உடனே முதல்வர் சட்டத் துறை செயலாளரிடம், ''இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?'’ என்று கேட்டார். அவர் சொன்ன விளக்கத்தைப் புரிந்து கொண்டு, ''தேவைப்பட்டால் ஆலோசனை செய்து மாஹாளி சொல்கிற மாற்றங்களைக் கொண்டுவாருங்கள்'’ என்று உத்தரவிட்டார். இதைக் கேட்ட மற்ற போலீஸ் அதிகாரிகள் முகங்களில் மகிழ்ச்சி ரேகை பரவியது. அப்போது சில போலீஸ் அதிகாரிகள் அருகில் இருந்த சக அதிகாரிகளிடம்,  ''பெரும்பாலான வழக்குகளில் சரியாக வாதாடத் தெரியாமல் குழப்புகிறவர் தமிழக அரசின் சட்டத் துறையின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர். அவரிடம் எவ்வளவுதான் ஆதாரங்களை எடுத்துக் கொடுத்தாலும், அவர் அதை சட்டை செய்வதில்லை. டாஸ்மாக் துறைக்கு எதிராகத் தனியார் ஒருவரால் தொடரப்பட்ட சிறு வழக்கில் தேவை இல்லாமல் இவரே நேரில் ஆஜராகி ஆதாரங்களை எடுத்துவைக்காமல் விட்டதன் விளைவு வழக்கு தோற்றுவிட்டது. அவரை மாற்றி வேறு யாரைப் போட்டாலும் சந்தோஷம்'' என்று பேசிக்கொண்டார்களாம்.

'கைதுப் படலம் முடியவில்லை!'

ராமநாதபுர மாவட்ட கலெக்டர் அருண் ராய் பேசும்போது, '' எங்கள் மாவட்டத்தில்  1993-ம் ஆண்டு முதல் ஒர் உத்தரவு அமலில் இருக்கிறது. இங்கே மீனவ படகுகளுக்கு ஒரு நாள் காலக்கெடுவுடன் மீன் பிடிக்க டோக்கன் கொடுக்கப்படுகிறது. அதனால், முழுமையாக மீன் பிடிக்க நேரம் இல்லாமல் அவசரக்கோலத்தில் கரைக்குத் திரும்புகிறார்கள். இதனால் மீனவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். முன்பு உத்தரவு போடப்பட்டபோது, விடுதலைப் புலிகள் நடமாட்டம் இருந்தது.  இப்போது நிலைமை மாறிவிட்டது. ஆனால், அந்த உத்தரவு மட்டும் அப்படியே இருக்கிறது'' என்று குறிப்பிட, அதைக் கேட்டு ஆச்சர்யப்பட்ட முதல்வர் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரியிடம் விசாரித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய சொன்னார்.

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பேசும்போது, ''2002-ல் நக்சலைட் நடமாட்டம் இருந்தது. அதன் பிறகு இல்லை'' என்று பேசிக்கொண்டே போக, முதல்வர் ஜெயலலிதாவின் முகம் மாறியது. ஏனென்றால், 2002-ல் முதல்வராக இருந்தவரும் இவர்தான். அந்த எஸ்.பி-யிடம், ''ஏன் 2007, 08, 09 - ம் ஆண்டுகளில்கூட நக்சலைட் நடமாட்டம் இருந்ததாக நோட்டீஸில் பார்த்தேனே? நீங்கள் அதைச் சொல்லவில்லையே...'' என்று கேட்க... அந்த எஸ்.பி. கொஞ்சம் தயங்கி. ''அந்தப் பகுதிகள் தர்மபுரி மாவட்டத்தில் வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லை'’ என்று சொல்லவும் அமைதியானார் முதல்வர்.

''நில அபகரிப்புப் புகார்கள் அதிகம் பதிவாகின்றன. அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. நில அபகரிப்புப் புகார் பிரிவை இன்னும் செம்மைபடுத்த வேண்டும்'' என்று பெரும்பாலானவர்கள் பேசினார்கள்.

''நில அபகரிப்புப் புகாரில் இரண்டு தரப்பையும் தீர விசாரித்த பிறகே உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும். வழக்கு போடுவதோடு முடிந்து விடாமல் தண்டனை வாங்கிக் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களின் நிலத்தை மீட்டுக் கொடுக்கும்போது இந்த ஆட்சியின் மீது மக்களின் நம்பிக்கை அதிகமாகும்'' என்று பதில் சொன்னார் ஜெயலலிதா.

''போலீஸ் அதிகாரிகள் தங்களுக்கு வரும் உளவுத் தகவல்களை கலெக்டர்களுடன் பகிர்ந்துகொண்டு முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கை மேற் கொண்டாலே, மாவட்டங்களில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளைச் சமாளித்துவிடலாம்'' என்று இடையில் யோசனை தெரிவித்தார் ஜெயலலிதா.

கடலோர மாவட்டங்களில் இருக்கும் கலெக்டர் கள், மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள் காணாமல் போவது பற்றியும் இலங்கை கடற்படையால் தாக்கு தலுக்கு உள்ளாவது பற்றியும் குறிப்பிட்டார்கள். ''இப்படி அடிக்கடி ஏற்படும் மீனவப் பிரச்னையால் இப்போது பாதிப்பு இல்லை என்றாலும், வரும் காலங்களில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாக உருவெடுக்கலாம். அதற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். நமது கடலோரப் பாதுகாப்பு படையில் போதுமான அளவுக்கு ரோந்து படகுகள், நவீன கருவிகள் போன்ற வசதிகள் இல்லை. மீனவர்களைத் தேடும் பணியை கடற்படை மட்டுமே செய்வதால், தொய்வு ஏற்படுகிறது. காவல் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு தரும் நிதியில் ஹெலிகாப்டர் போன்றவற்றை நாம் வாங்கலாம்.'' என்று யோசனை தெரிவித்தார்கள். ''அதற்கான நிதி இப்போது நம்மிடம் இல்லை. தேவை ஏற்பட்டால், ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளுங்கள்'' என்றார் ஜெயலலிதா. மாநாட்டின் முடிவில் இதுவே அறிவிப்பாக வெளியானது.

கலெக்டர்கள், எஸ்.பி-கள் மாநாட்டின் முதல் நாளான 13-ம் தேதி முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அனைவருக்குமான பொதுவான கூட்டமாக இருந்தது. 14-ம் தேதியன்று காலையில் கலெக்டர்கள், அனைத்துத் துறைச் செயலாளர்கள் கூட்டமும், மதியத்துக்கு மேல் போலீஸ் அதிகாரிகள் கூட்டமும் நடந்தது. இரு நாட்களும் கோட்டையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்ட முதல்வர், முக்கால் மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள், எப்போதும் இல்லாதவாறு மிகவும் கடுமையாக இருந்தன. கோட்டைக்கு உள்ளேயே இருக்கும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவுகூட இல்லாத மாநாட்டுக் கூட்டம் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு, ஜெயலலிதா வந்தபோது எல்லாம் இரு மருங்கிலும் ஓவர் அலெர்ட் காட்டினர். முதல் நாள் ஞாயிறன்று தலைமைச் செயலக ஊழியர்கள் யாரும் வராததால், அவர்கள் தப்பித்தார்கள். மறு நாள் காலையில் வழக்கம்போல, 10 மணி அளவில் எல்லா ஊழியர்களும் வரும்போது, 'முதல்வர் வருகிறார்’ என்று சொல்லி, ஊழியர்களின் நுழைவாயிலை போலீஸார் தடுக்க, பதற்றம் ஏற்பட்டது.

  வழக்கமாக இது போன்ற மாநாடுகளில் அனைத்துப் புகைப்படக்காரர்களும் சில நிமிடங்களாவது படம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இம்முறை குறிப்பிட்ட சில பத்திரிகைகளின் போட்டோ கிராபர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது. முதல்வரின் அறிமுக உரையின்போது எப்போதும் நிருபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் இம்முறை அனுமதிக்கப்படவில்லை.

இன்னமும் நில அபகரிப்பு தொடர்பாக ஜெயலலிதா காட்டிவரும் தீவிரம் தி.மு.க. புள்ளி களுக்கு பீதியைக் கிளப்பி இருக்கிறதாம்.

- சூர்யா, எம்.பரக்கத் அலி, இரா.தமிழ்கனல்

அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன்