Published:Updated:

ஜல்லிக்கட்டு தடை... பின்னணியில் இருக்கும் உணவு அரசியல்!

ஜல்லிக்கட்டு தடை... பின்னணியில் இருக்கும் உணவு அரசியல்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜல்லிக்கட்டு தடை... பின்னணியில் இருக்கும் உணவு அரசியல்!

எருதுப் புரட்சி!

ஜல்லிக்கட்டு தடை... பின்னணியில் இருக்கும் உணவு அரசியல்!

பெரும் உணர்ச்சிக்கொந்தளிப்பில் தகிக்கிறது தமிழகம். ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு போராட்ட அனலை தமிழகத்தில் உருவாக்கி உள்ளது. எந்தவிதக் குழப்பமும் இன்றி ஒற்றுமையாக தங்கள் பண்பாட்டு உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்கள் தமிழக இளைஞர்கள். 1965-ல் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு தன்னெழுச்சியாக ஒட்டுமொத்த இளைஞர் சக்தியும் ஒருங்கிணைந்து நிற்கும் ஒரு களமாக தமிழகம் மாறியிருக்கிறது.

பல நூறு ஆண்டுகளாகத் தென் தமிழக மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த ஜல்லிக்கட்டுக்கு முதல் தடை விழுந்தது, 2006-ல்தான். 2006 மார்ச் மாதத்தில், கீழக்கரை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தனியன்கூடம் கிராமத்தில் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி வண்டிப்பந்தயம் (ரேக்ளா ரேஸ்) நடத்த அனுமதி கேட்டு முனியசாமி தேவர் என்பவர் காவல் துறையிடம் விண்ணப்பித்தார். காவல் துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பானுமதி, ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகளில் விலங்குகள் துன்புறுத்தப் படுவதால் அவற்றைத் தடை செய்வதாகத் தீர்ப்புக் கூறினார்.

ஜல்லிக்கட்டு தடை... பின்னணியில் இருக்கும் உணவு அரசியல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து தென் மாவட்டங்களில் மிகவும் கொதிப்பான சூழல் உருவானது. உடனடியாக தமிழக அரசு, ‘பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்’ என்று மதுரை நீதிமன்றக் கிளையில் ஒரு அஃபிடவிட் தாக்கல் செய்தது. இதே நேரத்தில், ‘ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கூடாது’ என்று, ஜல்லிக்கட்டில் மாடு பிடித்தபோது இறந்த ஒரு வீரரின் தந்தையான நாகராஜன் மனுத்தாக்கல் செய்தார். அனைத்தையும் சேர்த்து விசாரணை செய்த, நீதிபதி எலிப்பி தர்மராவ் தலைமையிலான பெஞ்ச், காளைகளைத் துன்புறுத்தக்கூடாது என்ற நிபந்தனையோடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது. இதையடுத்து வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடந்தது.

இதன்பின் நேரடியாக விலங்குகள் நல வாரியம் களத்தில் இறங்கியது.  இந்த சட்டப் போராட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா நிறுவனம், பிராணிகள் நல வாரியம், ப்ளூகிராஸ் இண்டியா போன்ற சில அமைப்புகளும் இணைந்்தன. 2014, மே மாதம், உச்ச நீதிமன்றம் ‘இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966-ன்படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 51 A (g) மற்றும் (h) படியும் காளைகளை ஜல்லிக்கட்டில் அனுமதிக்க முடியாது’ என்று தீர்ப்பளித்தது. மேலும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டமானது, இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966-க்கு எதிர்மறையாக உள்ளது என்று கூறி அதையும் செல்லாது என்று அறிவித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சட்டப் போராட்டங்கள் தொடரும் நிலையில் இந்த ஆண்டு, எவரின் வார்த்தையையும் நம்பாமல் இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் களத்தில் குதித்துள்ளனர். மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிற குதிரைப் பந்தயம் போன்ற நிகழ்ச்சிகளில் குதிரைகள் பெரும் கொடுமைகளை சந்திக்கின்றன. நாள்தோறும் பல்லாயிரம் விலங்குகள் உணவுக்காகக் கொல்லப்படுகின்றன. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டாவும் விலங்குகள் நல ஆர்வலர்களும் ஆர்வம்காட்டுவது ஏன்?

ஜல்லிக்கட்டு தடை... பின்னணியில் இருக்கும் உணவு அரசியல்!

‘இதன் பின்னால் மிகப் பெரிய வணிக அரசியல் இருக்கிறது’ என்கிறார்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்.

“இந்தியாவில் சுமார் 120 கோடி பேர் வாழ்கிறார்கள். அவர்களது உணவுத் தேவை பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புமிக்கது. அதைக் கைப்பற்ற நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாகத்தான் இங்கிருக்கும் விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் செயல்படுகிறார்கள்” என்று குற்றம்சாட்டுகிறார் விலங்குகள் நல ஆர்வலரும் தேசிய விலங்குகள் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினருமான ஹௌகர் அசீஸ்.

“ஜல்லிக்கட்டை எதிர்க்கும் எவருக்கும் நம் மக்களின் வாழ்க்கை முறை பற்றித் தெரியாது. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நமக்குத் தொழில் இல்லை; நம் வாழ்க்கையில் ஓர் அங்கம். 90 சதவிகிதம் விவசாயிகள் வீட்டில் கால்நடைகள் இருக்கும். பண்டிகைகள், வழிபாடுகள் எல்லாவற்றிலும் கால்நடைகள் இடம்பெறும். ஜல்லிக்கட்டைத் தடைசெய்ய வேண்டும் என்பவர்கள் தமிழர்கள் நடத்தும் மாட்டுப்பொங்கல் நிகழ்ச்சியைப் போய்ப் பார்க்க வேண்டும். குழந்தைகளைப் போல மாடுகளைப் பராமரித்து உணவூட்டுவார்கள். மாடுகள்தான் விவசாயத்தின் ஜீவன். மாடுகள் இல்லாவிட்டால் விவசாயம் இருக்காது. டிராக்டர்கள் சாணம் போடாது. ‘மாடுகளைக் கட்டாயம் வளர்க்க வேண்டும்’ என்ற உணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்களுக்கு கால்நடைகளோடு ஒரு பந்தத்தை உருவாக்கவுமே ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகள் ஆண்டாண்டு காலமாக நடத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டுக்குப் பயன்படுத்தப்படும் பொலிகாளைகள்தான் அந்தப் பகுதியின் இனப்பெருக்கத்துக்கான மூலம். பசுக்களும் இந்தக் காளைகளும் சேர்ந்து காடு கரைகளுக்கு மேயச் செல்லும். அப்போது இயற்கையாகவே இனப்பெருக்கம் நடைபெறும். இயற்கையான மூலிகைகளைச் சாப்பிட்டு இயற்கையான முறையில் கருத்தரிப்பதே நம் கால்நடை வளர்ப்பின் அடிப்படை.

இதில் கைவைப்பதுதான் விலங்குகள் நல அமைப்புகள் என்று சொல்லிக்கொள்பவர்களின் நோக்கம். ஜல்லிக்கட்டு போன்ற கேளிக்கைகளைத் தடுத்துவிட்டால் யாரும் காளைகள் வளர்க்கப் போவதில்லை. காளைகள் அழிந்துவிட்டால் இனப்பெருக்கம் இருக்காது. நாட்டு மாடுகள் அழிந்துவிட்டால், கலப்பின மாடுகளை இறக்குமதி செய்யலாம். அவற்றுக்கான மருந்துகளை, அதிகம் பால்கரக்கச் செய்யும் ஹார்மோன்களை, செயற்கையாகக் கருத்தரிக்க விந்தணுக்களை பெட்டி பெட்டியாக இறக்குமதி செய்யலாம். இந்தியாவின் பால் சந்தையை, இறைச்சிச் சந்தையை மொத்தமாக ஆட்கொள்ளலாம். இதுதான் ஜல்லிக்கட்டு எதிராகப் போராடுபவர்களின் திட்டம்” என சொல்லும் ஹௌகர் அசீஸ், அதற்கு ஓர் உதாரணத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.

ஜல்லிக்கட்டு தடை... பின்னணியில் இருக்கும் உணவு அரசியல்!

“இந்தியாவுக்குக் கலப்பின காளை மாடுகளைத் தருவிக்கும் பணிகள் அதி தீவிரமாக நடந்து வருகின்றன. ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பெரும் தன்னெழுச்சிப் போராட்டம் நடந்துவரும் நிலையில், கடந்த 17-ம் தேதி டென்மார்க்கில் இருந்து 59 காளைகளை இறக்குமதி செய்திருக்கிறது தேசிய பால் வளர்ச்சி வாரியம் (NATIONAL DAIRY DEVELOPMENT BOARD). சென்னை விமான நிலையம் வழியாகக் கொண்டு வரப்பட்ட காளைகள், பள்ளிக்கரணையில் உள்ள மத்திய அரசின் அனிமல் குவாரன்டைன் சர்டிபிகேஷன் சர்வீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. ‘இந்தக் காளைகளின் விந்தணுக்களை எடுத்து இங்குள்ள பசுக்களோடு கலப்பு செய்யும்போது ஒரு நாளைக்கு 30 லிட்டருக்கு மேல் பால் கறக்கும் புதிய ரகங்களை உருவாக்க முடியும்’ என்று தேசிய பால் வளர்ச்சி வாரியத்தின் இயக்குநர் தெரிவிக்கிறார். இந்தக் காளை இறக்குமதிக்கு உலக வங்கியும் நிதி உதவி செய்கிறது. இதன்மூலம் இதன் பின்னால் இருக்கிற சர்வதேசப் பின்னணி தெரியவரும்” என்கிறார் ஹௌகர் அசீஸ்.

“வெளிநாடுகளில் இருந்து மாடுகளை இறக்குமதி செய்வது இயல்புதான். டென்மார்க்கில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள இந்தக் காளைகள் ஒரு மாதம் இங்கு வைத்து பரிசோதிக்கப்படும். பிறகு இனப்பெருக்கத்துக்காக இந்தியா முழுவதும் அனுப்பப்படும்” என்கிறார், மத்திய அரசின் அனிமல் குவாரன்டைன் சர்டிபிகேஷன் சர்வீஸ் நிறுவனத்தின் மண்டல இயக்குநர் டாக்டர் டி.கே.சாகு.

“பீட்டாவின் முற்கால வரலாறுகளையும், இந்தியாவில் பீட்டாவின் இப்போதைய செயல்பாட்டையும் பார்க்கிறபோது, உண்மையில் இதற்குப்பின் மிகப் பெரும் வணிக அரசியல் இருப்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது” என்கிறார் சூழலியலாளரும், எழுத்தாளருமான நக்கீரன்.

“பால் உற்பத்தியில் உலக அளவில் இந்தியாவே முதன்மை வகிக்கிறது. இந்தியாவின் பால் உற்பத்தி பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளைச் சார்ந்தே இருக்கிறது. நாம் பாலுக்கும் தயிருக்கும் சர்வதேச நிறுவனங்களைச் சார்ந்து இல்லை. வீட்டிலேயே வெண்ணெய் உருக்கி நெய் எடுக்கிறோம். இதெல்லாம் சர்வதேச பால் பொருள் விற்பனை நிறுவனங்களை உறுத்துகின்றன. இந்தியப் பால் வணிகத்தின் மதிப்பு, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்.

அதேபோல், இறைச்சி உற்பத்தியிலும் இந்தியாதான் முன்னிலை வகிக்கிறது. இந்த இரண்டையும் பெரிய பெரிய நிறுவனங்கள் இலக்குவைத்து செயல்படுகின்றன. அந்த நிறுவனங்களுக்கு பீட்டா போன்ற அமைப்புகள் துணைபோகின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் பீட்டாவுக்கு வெவ்வேறு அசைன்மென்ட்கள் உண்டு. இங்கே, ஜல்லிக்கட்டு. பால் தொழிலை சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து பறித்து, பெரு நிறுவனங்கள் கையில் தருவதற்கான ஒரு யுக்தி இது. பால் தொழில் என்பதில் வெறும் பால் மட்டுமல்ல. சாக்லேட், பனீர், நெய், வெண்ணெய் போன்ற மதிப்பு கூட்டுப்பொருட்கள், மாடுகளுக்கான தீவனங்கள், மருந்துகள், ஊசிகள்... இவற்றின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள். 

இவற்றைக் கைப்பற்றுவதற்கான முகாந்திரங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தொடங்கிவிட்டன.  இந்தியாவின் பால் உற்பத்தியில் கலப்பின மாடுகளின் பங்களிப்பு உயர்ந்துகொண்டே போகிறது. இன்னும் அதிகமாக்க, தடையாக இருப்பவற்றை எல்லாம் ஏதேனும் காரணம்கூறி அழிக்க வேண்டும். அந்த வேலையைத்தான் இந்த விலங்குகள் நல அமைப்புகள் செய்கின்றன.

இந்தியாவில் இப்போது கலப்பின மாடுகள் சராசரியாக தினமும் 14 லிட்டர் பால் கறக்கின்றன. அதற்குக் காரணமாக இருப்பது செயற்கை ஹார்மோன். இந்த ஹார்மோனை முதலில் விற்பனைக்குக் கொண்டுவந்தது மான்சான்டோ நிறுவனம். விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைத்து விவசாய உற்பத்தியின் அளவை அதிகரித்ததைப் போல, மாடுகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பாலின் அளவை அதிகரிப்பதுதான் இதன் பின்னுள்ள திட்டம். Posilac என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட இந்த ஹார்மோன், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாத மருந்துகளின் பட்டியலில் இருக்கிறது. ஆனால், நம்மவர்கள் சர்வ சாதாரணமாக வாங்கி பசுக்களுக்கு உணவு மூலமாகவும், ஊசி மூலமாகவும் பயன்படுத்துகிறார்கள். இதைப் போடும் ஒவ்வொரு முறையும் பசு பிரசவ வலியைச் சுமக்கும்.  

ஜல்லிக்கட்டு தடை... பின்னணியில் இருக்கும் உணவு அரசியல்!

அடுத்து செயற்கைக் கருத்தரிப்பு. இது மிகப் பெரும் வணிகம். நம் நாட்டு மாட்டைப் பொறுத்தவரை கன்று போட்டு 7 மாதம் கழித்தே திரும்பவும் இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். கலப்பின மாடுகளில் செயற்கை ஹார்மோன் கொடுத்து மூன்று மாத இடைவெளியில் செயற்கைக் கருத்தரிப்பு செய்து விடுவார்கள். கருத்தரித்த பிறகும் கூட 7 மாதத்துக்கு அந்த மாடு பால் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

பசுவை ஒரு பால் தொழிற்சாலை மாதிரி மாற்றுகிறார்கள். காளைகளே தேவையில்லை. இந்தியாவில் உள்ள சில கார்ப்பரேட் பால் நிறுவனங்களில் காளைக்கன்றுகளைக் கொன்று இறைச்சிக்கு அனுப்பப்படுவதாகவும் தகவல் உண்டு.

ஜல்லிக்கட்டை மிருகவதை என்று போராடும் மிருக நல ஆர்வலர்கள் இதையெல்லாம் கண்கொண்டே பார்ப்பது இல்லை. மேற்கு வங்காளத்தில், குஜராத்தில், ஆந்திராவில் இன்னும் பல்வேறு இந்திய மாநிலங்களில் ஏராளமான விலங்குகள் பலி கொடுக்கப்படுகின்றன. பல பெயர்களில் வதைக்கப்படுகின்றன. ஆனால், அங்கெல்லாம் கை வைக்காமல், தமிழர்களுடைய ஜல்லிக்கட்டில் கை வைப்பதற்குக் காரணம், தமிழர்கள் மீதான வன்மம். பண்பாட்டு ஆதிக்கம்” என்கிறார் நக்கீரன்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆ.முத்துக்குமார்,  ரா.ராம்குமார்