Published:Updated:

‘‘எதிர்த்துப் பார்... மீண்டும் வருவோம்! அழித்துப் பார்... மீண்டு வருவோம்!” - நடராச சபதம்

‘‘எதிர்த்துப் பார்... மீண்டும் வருவோம்! அழித்துப் பார்... மீண்டு வருவோம்!” -  நடராச சபதம்
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘எதிர்த்துப் பார்... மீண்டும் வருவோம்! அழித்துப் பார்... மீண்டு வருவோம்!” - நடராச சபதம்

‘‘எதிர்த்துப் பார்... மீண்டும் வருவோம்! அழித்துப் பார்... மீண்டு வருவோம்!” - நடராச சபதம்

‘‘எதிர்த்துப் பார்... மீண்டும் வருவோம்! அழித்துப் பார்... மீண்டு வருவோம்!” -  நடராச சபதம்

வ்வோர் ஆண்டும் தஞ்சையில் நடைபெறும் தமிழர் கலை இலக்கிய திருவிழாவில் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மிகவும் சாதுர்யத்தோடு பேசுவார் ம.நடராசன். ஜெயலலிதா இருந்ததுவரை அவரது பேச்சில் அரசியல் வெளிப்படையாக இருக்காது. ஆனால், இந்தமுறை அவர் பேசிய பேச்சு, தமிழக அரசியல் தலைவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அனல் கக்கிய அந்தப் பேச்சிலிருந்து சில பகுதிகள் இங்கே...

‘‘குடும்ப அரசியல் செய்வோம்!’’

 ‘‘இந்த ஆண்டு தமிழர் கலை இலக்கிய திருவிழாவை நடத்துவதா... வேண்டாமா என்பதில் குழப்பம், மனப்போராட்டம், சஞ்சலம் இருந்தது. ஏனென்றால், நாங்கள் போற்றி வளர்த்த புரட்சித்தலைவி இன்று நம்முடன் இல்லை. ஒரு தாய் தனது பிள்ளைகளைக் குளிக்கவைத்து பள்ளிக்கு அனுப்புவதைப் போல, ஜெயலலிதாவுக்கு வேண்டியதெல்லாம் செய்து அனுப்புவார் சசிகலா. எம்.ஜி.ஆர் மறைவைக்கூட ஜெயலலிதாவிடம் யாரும் சொல்லவில்லை. நான்தான் என் மனைவியிடம் (சசிகலாவிடம்) தகவலைச் சொல்லி, போயஸ் தோட்டத்துக்கு அனுப்பிவைத்தேன். அவருடன் தினகரனும் சென்றார். ராமாவரம் தோட்டத்துக்கு ஜெயலலிதா வந்தபோது... அவரை, சிலர் ஓர் அறையில் வைத்துப் பூட்ட நினைத்தார்கள். தினகரன்தான் அதை எதிர்கொண்டு ஜெயலலிதாவை அழைத்துவந்தார். ராஜாஜி மண்டபத்தில் எம்.ஜி.ஆர் உடல் அருகே ஜெயலலிதா நின்றபோது... பெண்கள் ஊக்கால் குத்தியபோதும், ஆண்கள் பூட்ஸ் காலால் மிதித்தபோதும் அவரைப் பாதுகாத்தவர்கள் நான், சசிகலா, தினகரன், திவாகரன் ஆகியோர் மட்டும்தான். அன்று, இந்த நான்கைந்து பேரைத் தவிர, ஜெயலலிதாவுக்கு வேறு யார் கதி? இன்று அந்தக் குடும்பத்தைத்தான், ‘குடும்ப அரசியல் செய்கிறார்கள்’ என்று சொல்கிறார்கள். ஆமாம், குடும்ப அரசியலைச் செய்துகாட்டுவோம். 30 ஆண்டு காலம் ஜெயலலிதாவை, என்னுடைய மனைவி சசிகலா தோளில் சுமந்தாளே. ‘அவரைக் கொலை செய்துவிட்டோம்’ என்று சொல்கிறீர்களே... உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

‘‘காங்கிரஸ், பூஜ்ஜியத்தை எட்டியிருக்கிறது!’’

‘எல்லாப் பதவிகளிலிருந்தும் விலகுகிறேன்’ என்று ஜெயலலிதா கடிதம் எழுதியதைப் பிடுங்கி, அவரைக் காப்பாற்றியவன் இந்த நடராசன். அந்தக் கடிதத்தை வெளியிட்டு வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி. அதைவைத்து என்னைக் கைதுசெய்தவர்தான் கருணாநிதி. இவ்வளவு வரலாற்றை மனதில் போட்டு மறைத்து வைத்திருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்னையில் செய்த சதியால் காங்கிரஸ் கட்சி பூஜ்ஜியத்தை எட்டியிருக்கிறது. திராவிடர்களின் ஒட்டுமொத்த உழைப்பால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வீழ்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பித்தவர் கருணாநிதி. காந்தி, நேரு வழியில் இந்திரா காந்தி முன்னெடுத்துச் சென்ற காங்கிரஸ் பேரியக்கம், தற்போது இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டது. அப்படிப்பட்ட காங்கிரஸ் பேரியக்கத்தால் முடியாத ஒன்றையா, காவிச்சட்டையால் முடித்துவிட முடியும்? அதையும் பார்த்துவிடுவோம். சாமான்யனும் சரித்திரம் படைக்கலாம் என்று நிரூபித்ததால் மோடியை பாராட்டுகிறேன். சாமான்யர் வர்க்கத்திலிருந்து வந்ததால் இந்தியா உங்களை ஆதரிக்கிறது. விஷமிகளை நம்பி, சாதி, மத, இன வேறுபாடுகளை வைத்து அரசியல் விளையாட்டு செய்து நீங்கள் ஆட்சியை மாற்ற வேண்டுமென நினைத்தால், அது உங்கள் தலையெழுத்து. நாங்கள் என்ன செய்ய முடியும்? 96 சதவிகிதத்தை 3 சதவிகிதத்தைக் கொண்டு வீழ்த்திவிடலாம் என்று நினைக்கிறீர்களா, மோடி? அது முடியாது. தமிழக ஆட்சியையும், அ.தி.மு.க-வையும் உடைக்கப் பார்க்கிறீர்களா? அதை உடைக்க உங்களால் முடியாது. 

‘‘எதிர்த்துப் பார்... மீண்டும் வருவோம்! அழித்துப் பார்... மீண்டு வருவோம்!” -  நடராச சபதம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘கலைத்துப் பார்”

உச்ச நீதிமன்றம் உத்தரவுபோட்டும் தண்ணீர் தர மறுக்கின்ற கர்நாடக அரசை, ஏன் உங்களால் டிஸ்மிஸ் செய்ய முடியவில்லை? அங்கே ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சி செய்கிறாரா, மோடி? ஆனால், இங்கே ‘மாடு பிடிப்பதை நிறுத்தாவிட்டால் ஆட்சியைக் கலைத்துவிடுவோம்’ என்று சொல்கிறார் மமதை பிடித்த சுப்பிரமணியன் சுவாமி. கலைத்துப் பார். ‘ஏறுதழுவுதல் தமிழரின் பண்பாடு’ என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ் இலக்கியங்களைப் படித்திருந்தால்தானே உங்களுக்குப் புரியும். நம் கலாசாரத்தோடு ஊறிப்போன ஒன்றை எப்படி மாற்ற முடியும்? நம் கலாசாரத்தில் எந்த அரசு கை வைக்கிறதோ, அந்த அரசாங்கம் தூக்கி எறியப்படும் என்பதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம்.

‘‘ஜெயலலிதாவை பிராமணராகப் பார்த்தோமா?”


அப்போலோ முன்னால் 3,000 பேர் கூடியிருக்கிறார்கள்... 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாமே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ‘பதிவு செய்திருப்பதைக் காட்டு... காட்டு’ என்று சொல்கிறார்களே. ஒரு தலைவிக்கு, அவர் விரும்புகிறபடியான விஷயங்களைத்தான் பக்கத்தில் இருப்பவர்கள் செய்ய முடியும். அதுபோல புரட்சித்தலைவி யாரைப் பார்ப்பது, எதைச் செய்ய வேண்டும் என மனதில் நினைக்கிறாரோ, அவரைத்தான் பார்ப்பார்... அதைத்தான் செய்வார். கடைசிவரை அப்படித்தான் இருந்தார். ‘என்னை யாரும் போட்டோ எடுக்கக் கூடாது, சந்திக்கக் கூடாது’ என்று டாக்டர்களுக்கு உத்தரவு போட்டுவிட்ட நிலையில், சசிகலா என்ன செய்ய முடியும்... நான் என்ன முடியும்... யார்தான் என்ன செய்ய முடியும்? ஜெயலலிதாவை, ‘பிராமணர் சமுதாயம்’ என்று பார்த்தோமா? அண்ணா படம் போட்ட திராவிடக் கட்சியின் தலைவராக, முதல்வராக 30 வருடங்கள் ஏற்றுக்கொண்டோமே. ஆனால், 30 நாட்கள்கூட எங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே உங்களால்? அப்படி என்ன எங்கள்மீது உங்களுக்கு வெறுப்பு? இதற்குப் பதில் சொல்லுங்கள்.

‘‘தைரியம் இருந்தால் நேரில் வாருங்கள்!’’

 எந்த சுப்பிரமணியன் சுவாமியாக இருந்தாலும் சரி... ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி என எந்த பெயர் வைத்துக்கொண்டு வந்தாலும் சரி, தனி ஆளாக நான் வரத் தயார். மோடியை வைத்துக்கொண்டு மோடி வித்தை காட்டாதீர்கள். தமிழகம் பாலைவனமாக மாறி இருக்கிறது. அதைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு அருகதை இல்லை. வடநாட்டில் இருப்பவர்கள் தமிழனை வேறுபடுத்திக் காட்டினால் நாங்கள் உங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? ‘தமிழ்நாட்டில் ஜெயலலிதா இறந்துவிட்டார்... கருணாநிதியும் ஓய்ந்து கிடக்கிறார். இதுதான் நல்ல தருணம். நாம் புகுந்துவிட வேண்டும்’ என்று திட்டம் போடுகிறீர்களே, வெட்கமாக இல்லையா?

கட்டபொம்மன் வரலாற்றிலே, ஓர் ஊரே கோயிலுக்குச்  சென்றிருந்த சமயத்தில்... எல்லோரையும் தாக்கிவிடலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களுக்கும், உங்களுக்கும் என்ன வேறுபாடு? தைரியம் இருந்தால் நேரில் வாருங்கள். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோலக் குத்துகிறீர்களே? நாங்கள் அரிவாளை எடுத்தால், நீங்கள் என்ன ஆவீர்கள்? எங்களையா நீங்கள் விரட்டப் பார்க்கிறீர்கள்? இந்தியாவிலிருந்து நீங்கள் விரட்டப்பட்டு விடுவீர்கள். எச்சரிக்கை செய்கிறோம், எதிர்த்துப் பார்... மீண்டும் வருவோம்; அழித்துப் பார்... மீண்டு வருவோம். சசிகலாவைத் தவிர, தமிழ்நாட்டில் எவருக்கும் ஜெயலலிதாவைப் பற்றிப் பேசுவதற்கு எந்த உரிமையும், தகுதியும் கிடையாது. சசிகலா, பதவியில் இருந்தாரா... கிடையாது. 30 ஆண்டுகாலம் அவர் வாழ்க்கையைத் தியாகம் செய்துகொண்டது எதற்காக? நான் எட்டி நின்றேனே... எதற்காக? தமிழகத்தை, தி.மு.க தலைவர் சூறையாடிவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் பொறுத்துக்கொண்டு இறுதிவரை காத்து நின்றோம். எல்லாவற்றிலும் துரோகம் செய்த கும்பல் நீங்கள்தான். நாங்கள் அல்ல!’’

நடராஜ தாண்டவம் ஆரம்பம் ஆகிவிட்டது!   

- ஏ.ராம்

படங்கள்: கே.குணசீலன், செ.ராபர்ட்

‘‘எதிர்த்துப் பார்... மீண்டும் வருவோம்! அழித்துப் பார்... மீண்டு வருவோம்!” -  நடராச சபதம்

நடராசன் பேச்சை ஜெ. கேட்கவில்லை!

வி
ழாவில் பேசிய லண்டன் டாக்டர் தனபாலன், ‘‘ஜெயலலிதாவை, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலத்துக்கு முன்பே சிகிச்சைக்காக லண்டனுக்கு அனுப்ப முயற்சி செய்தார், நடராசன். அவருக்கு அங்கிருக்கும் பிரபல மருத்துவர்கள் சிகிச்சை செய்யத் தயாராக இருந்தார்கள். அம்மா மட்டும் கேட்டிருந்தால், சிகிச்சை செய்திருக்கலாம். அவரைக் காப்பாற்றி இருக்கலாம்’’ என்றார்.