Published:Updated:

தலையிடும் கவர்னர்... தவிக்கும் முதல்வர்!

தலையிடும் கவர்னர்... தவிக்கும் முதல்வர்!
பிரீமியம் ஸ்டோரி
News
தலையிடும் கவர்னர்... தவிக்கும் முதல்வர்!

புதுச்சேரி கச்சேரி

யூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிகாரம் என்று டெல்லியில் நடந்த மோதலின் லேட்டஸ்ட் வெர்ஷன் தற்போது புதுச்சேரியில் அரங்கேறி வருகிறது. துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், அமைச்சரவைக்கும் இடையிலான அதிகாரப் போட்டி புதுச்சேரியில் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2016 மே மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணிவைத்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. யார் முதல்வர் என்று இவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்ததைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மத்திய அரசு, கிரண் பேடியை ஆளுநராகக் களம் இறக்கிக் காய் நகர்த்தியது. புதிய அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்பே பொறுப்பேற்றுக்கொண்ட கிரண் பேடியின் அதிரடி அறிவிப்புகள் மக்களைக் கவர்ந்தன. அதிகாரிகள் கூட்டம், அரசுத் துறைகளில் ஆய்வுகள், பொதுமக்கள் சந்திப்பு என்று சுழலத் தொடங்க, கோரிக்கை மனுவோடு அவரிடம் செல்லத் தொடங்கினார்கள் மக்கள். சபாநாயகர் தொடங்கி, ஆளும் கட்சி அமைச்சர்களும்,   எம்.எல்.ஏ-க்களுமே தொகுதிப் பிரச்னைக்காக ஆளுநர் மாளிகை நோக்கி அணிவகுக்கும் அளவுக்கு அரசு எந்திரத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் கிரண் பேடி.

தலையிடும் கவர்னர்... தவிக்கும் முதல்வர்!

தேர்தலை சந்திக்காமல் முதல்வரானதால் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வரை எதுவும் ரியாக்ட் பண்ணக்கூடாது என்று முடிவெடுத்தார் நாராயணசாமி. இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றதும் அமைச்சரவைக்கும் கிரண் பேடிக்கும் உரசல் ஆரம்பித்தது. ‘‘மத்திய அரசிடம் போய் 2,000 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கி வாருங்கள்” என்று கிரண் பேடியை சீண்டிய அமைச்சர் கந்தசாமி, “துறைமுகத் தூர்வாரும் திட்டம் முடங்கியதால் ஏற்பட்ட 25 கோடி ரூபாய் இழப்புக்கும் ஆளுநர்தான் காரணம்” என்று குற்றம்சாட்டினார்.

தான் நிர்வகித்த அதிகாரிகள் வாட்ஸ் அப் குழுவில் ஆபாச வீடியோவை அனுப்பியதாகக் கூட்டுறவு சங்கங்களில் பதிவாளரான ஏ.எஸ். சிவக்குமார் என்பவரை சஸ்பெண்ட் செய்ததோடு காவல்துறைக்கும் புகார் அனுப்பினார் கிரண் பேடி. ‘சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்குக்கூட தெரிவிக்காமல் ஒரு பி.சி.எஸ் அதிகாரியை எப்படி சஸ்பெண்ட் செய்து இரவு முழுக்க காவல்நிலையத்தில் வைக்கலாம்’ என்று கொதித்துப்போனார்கள் அமைச்சர்கள். தொடர்ந்து நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு விவகாரங்களை சமூக வலைதளங்களில் பகிரக் கூடாது என்றும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி உத்தரவிட, ‘புதுச்சேரி வளர்ச்சிக்கு சமூகவலைதளம் அவசியமான ஒன்று’ என்று சொல்லி அந்த உத்தரவை கிரண் பேடி ரத்துசெய்ய, ஆடிப்போனது அமைச்சரவை. விதிகளை மீறி செயல்படும் கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு புகார் அனுப்பினார்கள் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள்.

இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று முதல்வர் நாராயணசாமி கையைப் பிசைந்துகொண்டிருந்த நேரத்தில், அடுத்த குண்டை வீசினார் கிரண் பேடி. பொதுமக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‘புதுச்சேரி நிர்வாகத்துக்கு நானே பொறுப்பு. ஆளுநர் மாளிகையை வெறும் தபால் நிலையங்களாக மட்டுமே செயல்பட விடமாட்டேன். 2018-ம் ஆண்டு மே 29-ம் தேதி எனது பதவிக் காலம் முடிந்தவுடன் நான் வெளியேறிவிடுவேன். அதுவரை என்னை மாற்ற முடியாது” என அடுத்த அதிரடியைத் தொடங்கிவைத்தார்.

அனைத்து மாநிலங்களைப் போல புதுச்சேரியிலும் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. ஆனால் வருகின்ற 24-ம் தேதி தொடங்கும் இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் கவர்னர் உரையை காங்கிரஸ் அரசு புறக்கணித்திருந்தது. தொடர்ந்து சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்று, தான் உரை நிகழ்த்த இருப்பதாக அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார் கவர்னர் கிரண் பேடி. ஆனால், “இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் கவர்னர் உரை இருக்காது. அவரும் அனுமதி கேட்டிருக்கிறார் அதுகுறித்து சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுவைக் கூட்டி முடிவெடுக்கப்படும்” என்று பதிலளித்தார் முதல்வர் நாராயணசாமி.

விடுவாரா கிரண் பேடி? ‘‘மாநில நிர்வாகியான கவர்னருக்கு சட்டமன்றத்தில் உரை நிகழ்த்த அனைத்து உரிமையையும் சட்டம் வழங்கியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தில் தனது உரை மூலம் கவர்னர் உரிய செய்தியை வழங்குவது வழக்கமானது” என்று கிரண் பேடி பேட்டி கொடுக்க, கடும் உஷ்ணத்தில் இருக்கிறது புதுச்சேரி அரசியல்.

‘‘ஏற்கெனவே கடும் நெருக்கடியைக் கொடுத்துவரும் கிரண் பேடி சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றும்போது அரசை விமர்சித்துப் பேசிவிட்டால் அது ஆட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று நினைப்பதால் எப்படியாவது கவர்னர் உரையை தவிர்த்துவிட வேண்டும் என்று நாராயணசாமி நினைக்கிறார்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் மத்திய பி.ஜே.பி அரசு கவர்னர்கள் மூலம் தொல்லைகள் கொடுத்து வருகிறது என்று தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்துவரும் நேரத்தில், புதுச்சேரியில் நடக்கும் இந்த மோதல் கவனிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது.

- ஜெ.முருகன்
படம்: அ.குரூஸ்தனம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz