Published:Updated:

பீட்டாவின் பின்னணி என்ன?

பீட்டாவின் பின்னணி என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
பீட்டாவின் பின்னணி என்ன?

எருதுப் புரட்சி!

பீட்டாவின் பின்னணி என்ன?

ல்லிக்கட்டுக்கு இணையாக தமிழகம் முழுக்க இப்போது ட்ரெண்டிங் ஆகியிருக்கும் வார்த்தை, ‘பீட்டா’. ‘ஜல்லிக்கட்டு நடக்காமல் போகக் காரணமாக இருந்த பீட்டாவைத் தடைசெய்ய வேண்டும்’ என்பது தமிழகம் முழுக்க வீதிக்கு வந்த மாணவர்கள் எழுப்பிய முழக்கங்களில் ஒன்று! ஜல்லிக்கட்டைத் தடைசெய்ய ஓவர்டைம் போட்டு வேலை பார்த்த பீட்டா, பலரும் நினைப்பது போல ஒரு தொண்டு நிறுவனமோ, சேவை அமைப்போ அல்ல. அது கம்பெனிகள் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பெனி.

பீட்டாவின் பின்னணி என்ன?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz‘நாம் உண்பதற்கும், உடுத்துவதற்கும், சோதனை செய்வதற்கும், பொழுதுபோக்கு பொருளாக்குவதற்கும், வன்கொடுமை செய்வதற்கும் விலங்குகள் நமது உரிமையல்ல’. ‘பீட்டா’ இதுதான் (People for the Ethical Treatment of Animals -PETA)வின் முழக்கம். 1980-ம் ஆண்டு் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இப்போது உலகம் முழுக்க 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

தொழிற்சாலைத் தேவைகளுக்காக விலங்குகளை வளர்ப்பது, அதன் தோலுக்காக வேட்டையாடுவது, பிராணிகளை வைத்து நிகழ்த்தப்படும் பரிசோதனைகள், பிராணிகள் மீது நிகழ்த்தப்படும் சித்ரவதைகள், கோழிச்சண்டை, நாய்ச்சண்டை, எருது விளையாட்டு மற்றும் சர்க்கஸ் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்துக்கும் எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காய்கறிகளை ஆடையாக அணிவது, உடலில் ரத்தம் பூசிக்கொண்டு ஆடைகளே இல்லாமல் பொது இடங்களில் படுத்திருப்பது என ‘பீட்டா’வின் பல பிரசாரங்கள் ஆபாசமாக இருப்பதாக சர்ச்சைக்கு ஆளானதுண்டு. ஆனால், ‘‘செக்ஸ்தான் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. அதனால்தான் இப்படிச் செய்கிறோம்’’ என இதை நியாயப்படுத்துகிறார், இந்த நிறுவனத்தின் தலைவி இங்க்ரிட் நியூகிர்க்.

பீட்டாவின் பின்னணி என்ன?

பீட்டாவின் இந்தியக் கிளை கடந்த 2000-வது ஆண்டில்தான் தொடங்கப்பட்டது. மும்பையில் இதன் தலைமையகம் இருக்கிறது. அமெரிக்காவில் பிறந்த இந்தியரான பூர்வா ஜோஷிபுரா என்ற 40 வயதுப் பெண்தான் இதன் தலைமைச் செயல் அதிகாரி.

ஜல்லிக்கட்டு தவிர இன்னும் பல சர்ச்சைக்குரிய விஷயங்களையும் தொட்டிருக்கிறது பீட்டா. கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகள் ஊர்வலம் நடக்கும். இது, புகழ்பெற்ற திருவிழா. இதில் யானைகள் சித்ரவதை செய்யப்படுவதாக சர்ச்சை கிளப்பியது பீட்டா. ‘மூங்கிலால் 30 யானை பொம்மைகளை பிரமாண்டமாக உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்துங்கள். செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என கேரள அரசுக்கு பீட்டாவின் சார்பாக நடிகை பமீலா ஆண்டர்சன் கடிதம் எழுதினார். கேரள உயர் நீதிமன்றத்தில் பீட்டா பொதுநல வழக்கும் போட்டது. ஆனால், அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

அடுத்து, வட இந்தியாவில் புகழ்பெற்ற கொண்டாட்டமான ‘நாக பஞ்சமி’யில் கை வைத்தது பீட்டா. பாம்புகளுக்கு பூஜை செய்து பால் வைக்கும் இந்த சடங்குகளின்போது பாம்புகள் சித்ரவதை செய்யப்படுவதாகப் புகார் கிளப்பியது பீட்டா. ஆனால், அதை யாரும் காதில் வாங்கவில்லை.

2014-ம் ஆண்டில் ‘வெஜிடேரியன் பக்ரீத்’ கொண்டாடச் சொல்லி பிரசாரத்தில் இறங்கியது பீட்டா. இதற்காக போபாலில் ஒரு மசூதி அருகே பீட்டா சார்பில் சிலர் பிரசாரம் செய்தபோது, அவர்கள் மீது கடும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. மத துவேஷத்தைத் தூண்டியதாக பீட்டா மீது வழக்கு போட்டார்கள்.

பீட்டாவின் பின்னணி என்ன?

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டை போடுவதைத் தமிழகத்தில் ஆரம்பித்து பல மாநிலங்கள் இப்போது பின்பற்றுகின்றன. ‘வளரும் குழந்தைகளுக்குப் போதுமான புரதச்சத்து கிடைக்க முட்டை சாப்பிடுவது அவசியம்’ என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். சத்துக்குறைவால் லட்சக்கணக்கான குழந்தைகள் அவதிப்படும் இந்தியாவுக்கு இது மிக அவசியம். ஆனால், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘அசைவம்’ என்பதற்காக பள்ளிகளில் முட்டையைத் தடை செய்தார். இதை எதிர்த்து மருத்துவர்கள் குரல் எழுப்ப, பீட்டாவோ சவுகானுக்கு விருது தந்தது.

பீட்டாவின் பின்னணி என்ன?


சன்னி லியோன், அலியா பட், சோனாக்‌ஷி சின்ஹா, தியா மிர்சா, ஷில்பா ஷெட்டி, மலாய்கா அரோரா, எமி ஜாக்சன், த்ரிஷா, தமன்னா, ஜான் ஆபிரகாம், மாதவன், சானியா மிர்சா மற்றும் மோி கோம் என பல பிரபலங்கள் பீட்டா விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பீட்டா, ஜல்லிக்கட்டுக்கு எதிராக 2007-ல் களம் இறங்கியது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வந்த வழக்கு ஒன்றில், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்தார் நீதிபதி. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வரை சென்ற சட்டப்போராட்டம், அங்கு தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.

‘நம் நாட்டு மாடு இனங்களை அழித்து, அந்நிய மாடுகளின் இறக்குமதியை நம் நாட்டில் பெருகச் செய்யவும், சர்வதேச பால் நிறுவனங்கள் இங்கு காலூன்றவுமே ஜல்லிக்கட்டு எதிர்ப்பு பிரசாரம் பயன்படுகிறது’ என பீட்டா மீது குற்றச்சாட்டு தொடர்ச்சியாக எழுப்பப்படுகிறது. பீட்டாவின் போராட்டங்களுக்கு நிதி கொடுப்பது யார் என்ற கேள்வியும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களால் எழுப்பப்படுகிறது. இந்தியாவில் வேறு பல விஷயங்களை எதிர்த்து ஒப்புக்காகப் பல போராட்டங்களை நடத்திய பீட்டா, ஜல்லிக்கட்டு எதிர்ப்பில் மட்டும் இவ்வளவு உறுதியாக இருப்பது ஏன்? இதற்குப் பின்னால் யாருடைய அரசியல் இருக்கிறது?

ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் பிரபலங்களை எதிர்த்து சில மணி நேரங்களில் அறிக்கை வெளியிடும் பீட்டா, இந்த சந்தேகங்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. 

- ஐஷ்வர்யா

கொலை செய்யும் பீட்டா!

ருணைக் கொலை செய்வதை பல நாட்டு நீதிமன்றங்கள் கூட குற்றமாகத்தான் கருதுகின்றன. ஆனால், விலங்குகள் நலனில் அக்கறை காட்டும் பீட்டா அமைப்பு, பல விலங்குகளைக் கொல்கிறது என்று சொன்னால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் நார்ஃபோல்க் என்ற இடத்தில் பீட்டா அமைப்பு ஒரு காப்பகம் வைத்திருக்கிறது. வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் வீதியில் நிராதரவாக விடப்படும் விலங்குகளைப் பராமரித்து, வேறு யாருக்கேனும் தத்து கொடுப்பதற்காகத் தொடங்கப்பட்ட காப்பகம் இது. ‘இங்கு வரும் பெரும்பாலான விலங்குகள் கொல்லப்படுகின்றன’ என ‘பீட்டா’வுக்கு எதிரானவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கடந்த 2014-ம் ஆண்டு இந்தக் காப்பகத்துக்கு 1,595 பூனைகள் கொண்டுவரப்பட்டன. இவற்றில் 1,536 பூனைகள் கருணைக்கொலை செய்யப்பட்டன. இதேபோல இங்கு வந்த 1,020 நாய்களில் 788 நாய்கள் கொல்லப்பட்டன. வெறும் 16 பூனைகளும் 23 நாய்களும் மட்டுமே தத்துக் கொடுக்கப்பட்டன. 43 பூனைகளையும் 209 நாய்களையும் வேறு காப்பகங்களுக்கு அனுப்பிவிட்டார்கள். ஒவ்வோர் ஆண்டும் இப்படித்தான் கொலைகள் நிகழ்கின்றன. தங்களிடம் அடைக்கலமாகத் தரப்படும் விலங்குகளில் 1 சதவிகிதத்தைக்கூட இவர்கள் காப்பாற்றி தத்துக் கொடுப்பதில்லை. ‘‘ஒதுக்கப்பட்ட, நேசிக்கப்படாத விலங்குகளுக்கு இந்த உலகிலிருந்து வலியற்ற விடுதலையை நாங்கள் தருகிறோம். மனிதர்கள் தங்கள் வீடுகளிலோ, மனங்களிலோ இடம் தராத இந்த உலகில் அவை ஏன் வாழ வேண்டும்?’’ என இந்தக் கொலைகளை நியாயப்படுத்துகிறார் பீட்டா நிறுவனத்தின் தலைவர் இங்க்ரிட் நியூகிர்க். ஆனால், ‘‘அமெரிக்காவில் செல்லப்பிராணி விற்பனை என்பது பல ஆயிரம் கோடிகள் புரளும் பிசினஸ். பீட்டா இந்த விலங்குகளைக் கொன்றால்தானே புதிய விலங்குகள் விற்கும்? அதற்காகத்தான் கருணைக்கொலை நடக்கிறது” என்கிறார்கள் பீட்டா எதிர்ப்பாளர்கள்.

ஒரு கொசுறு தகவல்: 2014-ம் ஆண்டில் நன்கொடைகள் மூலம் பீட்டாவுக்குக் கிடைத்த தொகை, 343 கோடி ரூபாய். இதை வைத்து உங்களால் எத்தனை நாய், பூனைகளைக் காலம் முழுக்கக் காப்பாற்ற முடியும் என கணக்கு போட்டுப் பாருங்கள்!