Published:Updated:

விஜயேந்திர பிதாரி பற்ற வைத்த தீ!

விஜயேந்திர பிதாரி பற்ற வைத்த தீ!
பிரீமியம் ஸ்டோரி
News
விஜயேந்திர பிதாரி பற்ற வைத்த தீ!

எருதுப் புரட்சி!

விஜயேந்திர பிதாரி பற்ற வைத்த தீ!

ரு சிறு தீக்குச்சி காட்டையே எரிப்பது போல, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வெடித்துக் கிளம்பியுள்ள போராட்டத்துக்கு, அலங்காநல்லூரில் போராடியவர்கள் மீது மதுரை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி தலைமையில் போலீஸார் மேற்கொண்ட அடக்குமுறைகள்தான் காரணம். ஏற்கெனவே கூடங்குளம் போராட்டக்களத்தில் திருநெல்வேலி எஸ்.பி-யாக அவர் நிகழ்த்திய ‘அதிரடி’கள் தமிழகம் அறிந்தவை. அதே ஸ்டைலில் இங்கும் அவர் அதிகாரத்தைக் காட்ட, இப்போது தமிழகமே கொந்தளித்துக் கிடக்கிறது.

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு ஆகியவற்றைத் தொடர்ந்து அலங்காநல்லூரிலும் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். மற்ற இடங்களைப்போல இங்கேயும் அவர்களைப்

விஜயேந்திர பிதாரி பற்ற வைத்த தீ!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பயமுறுத்தித் துரத்திவிடலாம் என்று போலீஸ் நினைத்தது.

அலங்காநல்லூருக்கு வருகிற அனைத்துச் சாலைகளிலும் தடைகளை ஏற்படுத்தியது. அதனால், குறுக்கு வழிகளில் கிராமங்களுக்குள் புகுந்து அலங்காநல்லூரை மாணவர்கள் அடைந்தனர். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் இளைஞர்கள் வரஆரம்பித்தனர்.

 வாடிவாசலைச் சுற்றி தடுப்புகளை ஏற்படுத்தி, மூன்று டி.எஸ்.பி-க்கள் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். அருகிலேயே தற்காலிக கன்ட்ரோல் ரூம் ஒன்றையும் அமைத்து இருந்தனர். அதோடு, பல்வேறு உளவுப் பிரிவுகளைச் சேர்ந்த போலீஸார், மப்டியில் மக்களோடு மக்களாகக் கலந்து, போராட்டக்காரர்களின் மூவ்களைக் கண்காணித்தனர்.

‘‘மீடியாக்காரங்களை அப்புறப்படுத்திட்டா, ஒரு நிமிஷத்துல அவனுங்க எல்லாரையும் அடிச்சு விரட்டிடலாம் சார்’’ என வாக்கி டாக்கியில் சொல்லிக்கொண்டிருந்தார் டி.எஸ்.பி கார்த்திகேயன்.  இவர்தான், போராட்டக்காரர்களை அசிங்கமாகத் திட்டுவதும், மீடியாக்காரர்களை மிரட்டுவதுமாக அன்று முழுவதும் அட்ராசிட்டியை அரங்கேற்றிக்கொண்டிருந்தவர்.

அங்கே, கிராமத்து மக்களுடன் திரைப்பட இயக்குநர் அமீர் நின்றுகொண்டிருந்தார். நடிகர் ஆர்யாவும் ஜல்லிக்கட்டுப் பற்றிய புரிதலுடன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். மாணவர்களுடன் அமர்ந்து கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருந்தார் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி. “இங்கிருந்து போய்விடுங்கள்” என்று அமீரிடம் போலீஸார் சொல்ல, ‘‘அமைதியான முறையில் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். வாடிவாசலில் காளைகளை அழைத்துவர மட்டும் அனுமதி தாருங்கள்’’ என்று அமீர் கேட்க... பதில் சொல்ல முடியாமல் திணறியது போலீஸ். 

விஜயேந்திர பிதாரி பற்ற வைத்த தீ!

இந்த நிலையில், போலீஸ் படைகளையும் மீறி வாடிவாசலுக்கு வெளியே சாலையில் மூன்று மாடுகளை இளைஞர்கள் ஓடவிட்டனர். அதைக்கண்டு அதிர்ந்துபோன போலீஸ், அவர்கள் மீது தடியடி நடத்தியது. மேலும், கூட்டமாக வந்த இளைஞர்களை போலீஸார் நான்கு முறை கொடூரமாகத் தாக்கினர்.

 மாலை 5 மணி ஆகியும் கூட்டம் கலையவில்லை. சாப்பிடாமலும், வெயிலைப் பொருட்படுத்தாமலும் பீட்டாவுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். ஊர்க் கமிட்டி மூலம், போராட்டக்காரர்களுக்கு நன்றி சொல்லி, ‘இத்துடன் முடித்துக்கொள்வோம்’ என்று மைக் மூலம் சொன்னார்கள். அதை இளைஞர்கள் ஏற்கவில்லை. இருள் சூழ்ந்த பிறகும் போராட்டம் தொடர்ந்தது. அவர்களுக்கு ஊர்க்காரர்கள் உணவு சமைக்க ஆரம்பித்தனர். அதைத் தடுக்க போலீஸார், மின்சாரத்தைத் தடை செய்தனர். போராட்டக்காரர்களுக்கு அரணாகப் பெண்கள் கூடிநின்றதால், தடியடி நடத்த போலீஸ் தயக்கம் காட்டியது. இரவு 11 மணிக்கு எம்.எல்.ஏ. கருணாஸ் வந்துசென்றார். போராட்டக்காரர்கள் அங்கேயே உறங்கினர். அவர்களுக்குப் ‘பாதுகாப்பாக’ போலீஸ் நைட் ட்யூட்டி பார்த்தது.

விஜயேந்திர பிதாரி பற்ற வைத்த தீ! அதிகாலையில், போராட்டக்காரர்களின் வாகனங்களில் காற்றைப் பிடுங்கிய போலீஸார், அனைவரையும் கைதுசெய்ய ஆரம்பித்தனர். மூன்று பெண்கள் உட்பட 250 பேரை வாடிப்பட்டியில் மண்டபம் ஒன்றில் அடைத்துவைத்தனர். கைது நடவடிக்கைக்கு எதிராக ஊர் மக்கள் கொந்தளித்தனர். போலீஸைக் கண்டித்து சாலையில் அமர்ந்தனர். இவர்களுக்கு ஆதரவாகப் பக்கத்துக் கிராம மக்களும் அலங்காநல்லூர் வந்து சேர்ந்தனர். அங்கு வந்த, சோழவந்தான் அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ மாணிக்கத்தை இளைஞர்கள் விரட்டினர்.

தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பி.தியாகராஜன் ஆகியோரிடம், ‘‘அரசியல் பேச வேண்டாம்’’ என்றனர். ‘நாம் தமிழர்’ சீமான், நடிகர் ஜி.வி.பிரகாஷ், திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் அங்கு வந்தனர். போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாடிப்பட்டியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீஸாருக்கு உணவு வழங்கப்படாததால், அவர்கள் சோர்ந்துபோயினர்.
 போராட்டத்தைக் கலைக்க போலீஸார் பல தந்திரங்களைக் கையாண்டனர். ‘‘இந்தப் போராட்டத்தில் நக்சலைட்கள் கலந்துள்ளனர்; தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். அவர்கள், ஏதாவது கலகம் செய்தால் உங்களைத்தான் கைதுசெய்வோம். எனவே, அவர்களுக்கு ஆதரவு கொடுக்காதீர்கள்’’ என அலங்காநல்லூர் ஊர் பிரமுகர்களை போலீஸார் மிரட்டினர். ஆனால், அவர்கள் அசரவில்லை. ‘வாடிவாசல் திறக்கப்படாமல் வீடு வாசல் செல்ல மாட்டோம்’ என போராட்டம் தொடர்ந்தது.

அலங்காநல்லூரில் நடந்த மாணவர்கள் போராட்டத்தையும், அவர்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி உள்ளிட்ட தாக்குதல்களையும் தொடர்ந்துதான், சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் திரள ஆரம்பித்தனர். அதையடுத்து, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துக்கிளம்பியது. இந்தப் போராட்டங்களுக்குத் தீ மூட்டிய பெருமை மதுரை எஸ்.பி-யான விஜயேந்திர பிதாரியையே சேரும்!

 - செ.சல்மான், சே.சின்னதுரை

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்