``பெ.மணியரசன் மீதான தாக்குதல் தமிழகத்தின் புதுவகை அடக்குமுறை!'' - குற்றஞ்சாட்டும் சமூக ஆர்வலர்கள் | Social activists blames intelligence department on maniarasan issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:58 (18/06/2018)

கடைசி தொடர்பு:13:58 (18/06/2018)

``பெ.மணியரசன் மீதான தாக்குதல் தமிழகத்தின் புதுவகை அடக்குமுறை!'' - குற்றஞ்சாட்டும் சமூக ஆர்வலர்கள்

மணியரசன்

மிழர்களின் வாழ்வுரிமைக்காக மிகத் தீவிரமான போராட்டங்களை நடத்திவரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கடந்த ஜூன் 10-ம் தேதி தஞ்சையில் தாக்கப்பட்டார். கட்சி சார்பற்று இது அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்களும், தமிழ்த் தேசிய இயக்கத்தினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

பெ.மணியரசன் மீதான தாக்குதல் குறித்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன், கடந்த ஜூன் 11-ம் தேதி தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றுகொண்டிருந்த மணியரசனை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோதியதால் அவர் நிலை தடுமாறி விழுந்ததாகவும் இதைப் பயன்படுத்தி அவரிடம் இருந்த கைப்பையைப் பறித்துக்கொண்டு அவர்கள் தப்பித்து சென்றுவிட்டதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன'' என்றார். 

இந்தத் தாக்குதல் சம்பவத்தை, வழிப்பறி எனத் தமிழக அரசும் காவல் துறையும் திசைதிருப்புவதாகத் தமிழின உணர்வாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

போராளிகள், மணியரசன்

இதுகுறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வநாயகம், ``காவிரி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய - மாநில அரசுகள் செய்யும் தூரோகத்தை மிகவும் துல்லியமாகவும் துணிச்சலாகவும் பெ.மணியரசன் அம்பலப்படுத்தி வருகிறார். குறிப்பாக, பி.ஜே.பி., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் செய்யும் மோசடிகளைக் கடுமையாகக் கண்டித்து வருகிறார். இந்த நிலையில்தான் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தஞ்சையிலிருந்து சென்னைக்குச் செல்ல ரயில் ஏறுவதற்காக, எங்களது இயக்கத்தைச் சேர்ந்த சீனிவாசனோடு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார் மணியரசன்.

வழக்கறிஞர் செல்வநாயகம்

மற்றோர் இருசக்கர வாகனத்தில் இருவர் பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள். பின்னால் அமர்ந்திருந்தவர், மணியரசனை கொலைவெறியோடு கீழே தள்ளியிருக்கிறார். இவரது கைப்பையைப் பறிக்க அவர்கள் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை. சிறிது தூரம் சென்றவர்கள், தங்களது வாகனத்தைச் சற்று நிறுத்தி, மணியரசன் எந்த நிலையில் இருக்கிறார் எனத் திரும்பிப் பார்த்திருக்கிறார்கள். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்கள். பலத்த காயமடைந்த மணியரசனை, பதற்றத்தோடு சீனிவாசன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதன்பிறகுதான் கீழே விழுந்துகிடந்த கைப்பையை வேறு யாரோ எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஓடுகிற வாகனத்திலிருந்து கீழே தள்ளினால், பலத்த காயமடைந்து உயிர்போகும். அப்படியும் இல்லையென்றால், பின்னால் வரக்கூடிய வாகனம் மணியரசன்மீது ஏறி உயிர்போகட்டும் என்ற திட்டத்துடன் கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது. வழிப்பறிக்காக இந்தத் தாக்குதல் நடந்திருந்தால், மணியரசனிடமிருந்து கைப்பையைப் பறித்துச் சென்றிருப்பார்கள். அவர்கள் வழிப்பறி திருடர்கள் என்றால், நின்று நிதானமாகத் திரும்பிப் பார்ப்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. தமிழக முதல்வரும் காவல் துறையினரும் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் நேர்மையில்லாமல் நடந்துகொள்கிறார்கள். நயவஞ்சகமாக வழிப்பறித் தாக்குதல்போல் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். எனவே, உளவுத்துறையினருக்குத் தெரியாமல் இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடக்க வாய்ப்பே இல்லை” என்றார். 

இந்த நிலையில் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெ.மணியரசன், ``இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் எங்களை நெருங்கி வந்தனர். அந்த வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர், என் கையைப் பிடித்து இழுத்து இரண்டுமுறை கீழே தள்ள முயன்றார். மூன்றாவது முறை அந்த நபர், மூர்க்கத்தனமாக என் கையை ஆவேசத்துடன் இழுத்து கீழே தள்ளிவிட்டார். நான் அமர்ந்திருந்த வாகனத்தை ஓட்டிவந்த சீனிவாசன் என்னைத் தூக்கிவிட்டு, தெற்குக் காவல் நிலையம் அழைத்து வந்தார். அதன்பிறகு மருத்துவமனை சென்றோம். அங்கு சென்ற பிறகுதான் எனது கைப்பையைத் தேடினோம். நாங்கள் இங்கு வந்தபிறகு சாலையில் சென்ற வேறு யாராவது அதை எடுத்துச் சென்றிருக்கலாம். என்னைத் தாக்கியவர்கள், திசை திருப்புவதற்காகவும் எடுத்துச் சென்றிருக்கலாம். என்னை முடக்கி அச்சுறுத்துவதற்காகவும், இதன்மூலம் வாழ்வுரிமை போராட்டங்களை நடத்தக்கூடிய மற்றவர்களை அச்சுறுத்துவதற்காகவும் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்” என்றார். 

வெங்கட்ராமன்இதுதொடர்பாகத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், ``இது, திட்டமிட்ட தாக்குதல் எனத் தெளிவாக உணர முடிகிறது. ஆனால், இதை வழிப்பறித் தாக்குதல் என வழக்கை முடிக்க, காவல் துறை காட்டும் முனைப்புதான் எங்களது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தற்போது புதுவகை அடக்குமுறை கையாளப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் மணியரசன் மீதான தாக்குதல். இந்தப் புதுவகை அடக்குமுறை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் வெட்டவெளிச்சமாகவே தெரிந்தது. தடியடி, கல் எறிதல், துப்பாக்கிச் சூடு போன்றவற்றிலும் சீருடை அணியாத காவல் துறையினர் மற்றும் அடியாட்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரில் பெரும்பாலானோர் இப்போராட்டத்தில் முனைப்புக் காட்டிய முன்னணிச் செயல்பாட்டாளர்கள். இதுபோன்றவர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களும் ஒன்றாக இணைந்து, இந்தப் புதிய வகை அடக்குமுறை கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்” என்றார்.     


டிரெண்டிங் @ விகடன்