தினகரனின் சமாதானப் பேச்சுவார்த்தை... ராஜினாமா முடிவைக் கைவிட்டாரா தங்க தமிழ்ச்செல்வன்?

தினகரனுடனாத சுமுகப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவைக் கைவிட்டா தங்க தமிழ்ச்செல்வன் முடிவுக்கு வந்துள்ளார்.

தினகரனின் சமாதானப் பேச்சுவார்த்தை... ராஜினாமா முடிவைக் கைவிட்டாரா தங்க தமிழ்ச்செல்வன்?

தினகரன், தங்க.தமிழ்செல்வன்

``தினகரன் அணி உடைகிறது; தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களை எடப்பாடி அணிக்குத் இழுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்" என, கடந்த சில நாள்களாகவே உறுதிப்படுத்தப்படாதத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வனுக்கும், டி.டி.வி. தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும், இடைத்தேர்தலைச் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார் தங்க தமிழ்ச்செல்வன். 

தங்க தமிழ்ச்செல்வனின் இந்த தனி `ட்ராக்' தினகரன் அணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வனை சமாதானப் படுத்தியிருக்கிறார் தினகரன். இதுகுறித்து, தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான திருப்போரூர் கோதண்டபாணியிடம் பேசினோம்.

``தகுதி இழப்பு செய்ததற்குப் பிறகு தொகுதி மக்களைச் சந்திப்பதில் பிரச்னை உள்ளதா?" 

``தினமும் மக்களைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். மக்களும் எங்களைப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்க நிதியை மக்களுக்குப் பயன்படுத்த முடியவில்லை. தொகுதி பிரச்னைகளுக்காக எந்த நிதியையும் கேட்டுப் பெறமுடியவில்லை. ஏற்கெனவே, அம்மா ஆட்சியில் இருந்த திட்டங்களுக்கெல்லாம் நிதியைக் குறைத்து விட்டார்கள். இந்த ஆட்சி சரியில்லை. நீங்கள் எடுத்த முடிவு சரிதான் என மக்கள் எங்களிடம் தெரிவிக்கிறார்கள். என்னை நம்பி வரும் தொகுதி மக்களுக்கும், மாணவர்களுக்கும் சிபாரிசு செய்வதில் பிரச்னை இருக்கிறது. அவர்களும் அதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்".

``இரண்டு கட்சிகளுக்குள்ளும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறதே?" 

``கட்சிப் பொறுப்பு சின்னம்மாவிடம் வந்துவிட்டால் அ.தி.மு.கவில் பிரச்னை இருக்காது. எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் இல்லாத ஆட்சியைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் இல்லையென்றால் அ.தி.மு.க-வில் எந்தச் சிக்கலும் இருக்காது. அவர்களைத் தவிர்த்து, வேறு யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். அப்படி வேறொருவரிடம் முதல்வர் பதவியோ, கட்சிப் பதவியோ வந்தால் அவர்களை ஆதரிக்கத் தயாராக இருக்கிறோம்". 

கோதண்டபாணி, திருப்போரூர் எம்.எல்.ஏ

``எடப்பாடி பழனிசாமி தரப்பினர், தினகரன் ஆதரவாளர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறதே?" 

``உளவுத்துறையை வைத்துப் பூதாகரமான பிரச்னைகளைக் கிளப்பிவிட்டால், ஒன்றிரண்டு எம்.எல்.ஏ-க்களாவது வர மாட்டார்களா என்ற ஆதங்கம் அவர்களுக்கு இருக்கிறது. அதற்கான வேலைகளைத்தாம் தற்போது செய்து வருகிறார்கள். மற்றபடி 18 பேரும் தினகரன் அணியில் தொடர்ந்து பயணிப்போம். ஓ.பி.எஸ்., பழனிசாமி எதிர்ப்பு மனநிலையில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம்". 

``தினகரனுக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் கருத்து வேறுபாடு உருவாகி விரிசல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்களே?" 

``தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வந்தபிறகு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான். அதன் பிறகே அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். இரு தினங்களுக்கு முன் தினகரன் வீட்டுக்குத் தங்க தமிழ்ச்செல்வன் வந்திருந்தார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் முடிவு குறித்து, தினகரனுடன் அவர் ஆலோசனை நடத்தினார். `பதவி போய்விட்டால் மீண்டும் தேர்தலில் நிற்க முடியாது என்று சட்டம் இருக்கிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்டால் ஐந்து வருடம் தேர்தலில் நிற்கத் தடை விதித்தால் என்ன செய்வீர்கள்?’ எனத் தினகரன் கேட்டார். அதன் பிறகு தங்க தமிழ்ச்செல்வன் சமாதானமாகி விட்டார். இதனால் அந்தப் பிரச்னை ஓய்ந்துவிட்டது. தற்போது இருவருக்குள்ளும் எவ்வித மனக்கசப்பும் இல்லை".

``18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாம் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்து உங்களின் திட்டம் என்னவாக இருக்கும்?"

``நாங்கள் நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கிறோம். இந்தமுறை நியாயமான தீர்ப்பு வரும் என நம்புகிறோம். தீர்ப்புக்குப் பிறகுதான் அடுத்தகட்ட முடிவு இருக்கும்".  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!