Published:Updated:

ஜூ.வி சொன்னதும் ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும்!

ஜூ.வி சொன்னதும் ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும்!
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி சொன்னதும் ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும்!

ஜூ.வி சொன்னதும் ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும்!

ஜூ.வி சொன்னதும் ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும்!

ஜூ.வி சொன்னதும் ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும்!

Published:Updated:
ஜூ.வி சொன்னதும் ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும்!
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி சொன்னதும் ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும்!

மெரினா! இளைஞர்களும் மாணவர்களும் கடற்கரை சாலையில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். மணற்பரப்பும் நிரம்பி வழிகிறது. அங்கே ஒருவர், ஒரு பிடி மணலை அள்ளி காகிதத்தில் மடித்து சட்டையில் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தார். அவரிடம், ‘‘எதற்கு மணல்?” என்றோம். ‘‘என் காலத்தில் இப்படியொரு எழுச்சியைக் கண்டது இல்லை. என் வாரிசுகளுக்கு வரலாற்றைச் சொல்ல... ‘ஜல்லிக்கட்டுப் புரட்சி வெடித்த இடத்தின் மணல் இது’ என காட்டுவதற்காக சேகரித்திருக்கிறேன்’’ என்றார் உணர்ச்சிப் பொங்க.

நள்ளிரவிலும் இடைவெளி இல்லாமல் தொடர் போராட்டம் நடைபெற்றதால், அவசரத் தேவைக்கு மருந்துகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழு என தயார் நிலையில் வைத்திருந்தார்கள். குழந்தைகளுக்கு பால் அவசியம் என தாயைப்போல சிந்தித்தார்கள். ‘‘குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும். யாராவது பால்புட்டி வைத்திருந்தால் தாருங்கள்’’ எனப் போராட்டக் களத்தின் மைக்கில் இருந்து வார்த்தைகள் வந்து விழுகின்றன. பெண்களின் உதிரப் போக்குக்கு உதவ எண்ணி, சானிட்டரி நாப்கின்கள் சேகரித்து வைத்திருந்தது எல்லாம் எந்தப் போராட்டக் களமும் பார்க்காத அதிசயம். இதையெல்லாம் செய்த இளைஞர்கள்தான் ‘பயங்கரவாதிகள்!’ இதைப் பார்த்துதான் ‘பயந்தவாதிகள்!’ ஆனார்கள் ஆட்சியாளர்கள். மணற்பரப்பில் பள்ளம் எடுத்து, சுற்றிலும் துணிகளை மறைப்பாகக் கட்டி கழிவறை அமைத்தார்கள். வெஸ்டர்ன் டாய்லெட்டுகளுக்கு பழக்கப்பட்டுப்போன பெண்கள்கூட அதைப் பயன்படுத்தினார்களே... இப்படியான தியாகங்களுக்கு தீ வைத்துவிட்டது அரசு.

ஜூ.வி சொன்னதும் ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும்!

‘ரத்த வெறியாட்டத்தின் நேரடி வாக்குமூலங்கள்’ என்ற தலைப்பில் கடந்த ஜூ.வி. இதழ் முழுவதும் பதிவு செய்திருந்தோம். பின்லேடன் விவகாரம் தொடங்கி வன்முறையாளர்கள் வரையில் சட்டசபையில் சொன்ன ஓ.பன்னீர்செல்வம் உதடுகள் இப்போது ‘‘விசாரணைக் கமிஷன் அமைக்கிறோம்... மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்’ என பேச ஆரம்பித்திருக்கின்றன.

திருச்சியில் போலீஸோடு மாணவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டாட, துணை கமிஷனர் மயில்வாகனன் போராட்டத்தை அமைதியாக முடித்ததைப் பற்றி ஜூ.வி-யில் குறிப்பிட்டிருந்தோம். அந்த மயில்வாகனனை  அழைத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும் முதல்வரும் பாராட்டியிருக்கிறார்கள். ‘அடைக்கலம் தந்ததால் தாக்கப்பட்ட குப்பங்கள்’ என்ற தலைப்பில் வந்த செய்திக்கட்டுரையில்தான் நடுக்குப்பம் மீன் மார்க்கெட் எரிக்கப்பட்டதையும் எழுதியிருந்தோம். ‘அந்த மீன் மார்க்கெட்டுக்கு பதிலாக 70 லட்சம் ரூபாயில் புதிய மீன் சந்தை அமைக்கப்படும். அதுவரையில் தற்காலிக மீன் விற்பனைச் சந்தை ஏற்படுத்தப்படும். மீனவர்களின் சேதமடைந்த உபகரணங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்’ எனவும் சொல்லியிருக்கிறார் முதல்வர். பொய் வழக்குகள் போடப்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லியிருந்தார்கள். மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர். ‘‘வாகனங்களுக்கும் குடிசைகளுக்கும் தீ வைக்கும் போலீஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்’’ என பலரும் சொல்லியதை ஜூ.வி-யில் பதிவு செய்திருந்தோம். அதன்படி ‘‘ தீ வைத்தல், வன்முறை செயல்களில் போலீஸார் ஈடுபட்டது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்” எனவும் அறிவித்திருக்கிறார் முதல்வர். வன்முறைச் சம்பவம் நடந்த உடன் ஓ.பன்னீர்செல்வம் பேசிய பேச்சுக்கும் இப்போது அவர் பேசும் பேச்சுக்கும் நிறைய மாற்றங்கள் தெரிவது ஆறுதல்.

‘சட்டசபையில் முதல்வர் காட்டிய பின்லேடன் படம் போட்ட இருசக்கர வாகனம் வேறு சம்பவத்தில் எடுக்கப்பட்டது’ என்ற விஷயத்தை ‘தடா’ ரஹீம் பேட்டியுடன் கட்டுரையாக வெளியிட்டு இருந்தோம். இதுபற்றி சட்டசபையில் மனிதநேய ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ. தமிம் அன்சாரி சுட்டிக்காட்டியபோது, ‘‘அதுபற்றி விசாரணை நடத்தப்படும்’’ என சட்டசபையில் சொல்லியிருக்கிறார் ஓ.பி.எஸ். அப்படியென்றால் விசாரிக்காமலேயே அந்தப் படத்தை சட்டசபையில் முதல்வர் எப்படிக் காட்டினார்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜூ.வி சொன்னதும் ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும்!

காவல் துறை மீதான குற்றச்சாட்டுகளாக எவற்றையெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் இருந்து சொன்னோமோ, அவற்றையெல்லாம் இப்போது அரசாங்கம் ஒப்புக்கொள்வது மாதிரி விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.
முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் மாறுதல் தெரிகிறது. இந்த மாறுதல் இத்தோடு முடிந்துவிடக் கூடாது.

‘மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தத் தடை. 144 உத்தரவு’ என்று  சொல்லியிருக்கிறார் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ். குன்ஹா தீர்ப்பில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டபோது அதே கடற்கரையில், எம்.ஜி.ஆர் சமாதி அருகேதானே அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அத்தனை பேரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். அப்போது எங்கே போயிருந்தீர்கள் காக்கிகளே? போராட்டத்தில் நள்ளிரவில்கூட மெரினாவுக்கு இளம்பெண்கள் வந்தார்கள். அங்கேயே தங்கினார்கள். இன்றைக்கு இவ்வளவு போலீஸ் குவிக்கப்பட்டும் பகலில் போகக்கூட பெண்கள் அச்சப்படுகிறார்களே... இந்தக் கறையைக் கழுவ கடல்நீர் போதாது ஜார்ஜ்! குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிராக நடந்்த வெறியாட்டங்களை எல்லாம் டி.ஜி.பி-யிடம் அனுமதி வாங்கித்தான் அ.தி.மு.க-வினர் நடத்தினார்களா? அன்றைக்கு அறிவிக்கப்படாத பந்த்போல தமிழகம் காட்சி அளித்ததற்கு காரணகர்த்தாக்கள் யார்? அப்போது சாலை, ரயில் மறியலை நடத்தியவர்களைக் கலைந்துபோகச் செய்யாமல், காக்கிகள் கள்ள மெளனம் காத்தார்களே... எதற்காக? கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமியின் உருவப் பொம்மைகள் கொளுத்தப்பட்டபோதும், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு காஞ்சிபுரம், கோவை, அம்பத்தூர் ஏரியாக்களில் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட் டபோதும் போலீஸ்காரர்கள் வேடிக்கைதானே பார்த்தீர்கள். அப்போது எந்த சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தார்கள்? ‘தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா?’ என்று பேனர்கள் வைத்தவர்களையும் நீதிபதி குன்ஹாவை மோசமாக சித்தரித்து ஃபிளக்ஸ் வைத்தவர்களையும் கைது செய்யவில்லையே?

ஜூ.வி சொன்னதும் ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும்!

போராட்டத்தில் தன்னுடைய போட்டோ பயன்படுத்தப்பட்டதைக் காட்டி வருத்தப் பட்டிருக்கிறார் முதல்வர். ‘‘ஆசை தோசை அப்பளம் வடை. பன்னீர் வாயில மிக்சரை துடை’’ என பன்னீரை மட்டுமா பதம் பார்த்தார்கள்? ‘‘ஊரைச் சுத்தி வேப்ப மரம். எங்கே போன கட்டுமரம்... நமக்கு நாமேனு சொன்னியே. நாமத்தைதான் போட்டியே...’’ என மோடி, கருணாநிதி, ஸ்டாலின் போன்ற ஒருவரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லையே. 

ஆட்சியில் நேரடியாக பங்கு வகிக்காத சசிகலாவும் வறுபட்டாரே. ‘‘கலாசலா கலாசலா... எங்கே போனார் சசிகலா... சின்னம்மா சின்னம்மா ஓ.பி.எஸ் எங்கம்மா... நேற்று வரைக்கும் ஆயாம்மா. இன்னைக்கு என்ன சி.எம்.மா?’’ என எழுந்த கோஷங்களுக்கான கோபம் என்ன? ஜெயலலிதாவின் மர்ம மரணம், அவசரமாகப் பொதுச்செயலாளராக மணிமுடி தரிப்பு எல்லாம் சேர்ந்துதானே சசிகலா மீதான வெறுப்பாக வெளிப்பட்டது.

காவிரி ஏமாற்றம், விவசாயிகள் மரணம், முல்லைப் பெரியாறு இழப்பு, மீத்தேன், கெயில், மணல் கொள்ளை என போராட்டத்தின் வடிவம் மாறியதுதானே ஆட்சியாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது. ‘‘ஓட்டு கேட்டு வருவ இல்ல. ஓட விடுவோம் தெருவுல’’ என்ற கோஷம் எழுந்தபோதே, கோட்டையில் இருந்தவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. அன்னிய நாட்டு குளிர்பானங்களுக்கு எதிராகவும் கொதித்தார்கள் இளைஞர்கள். போராட்டத்தில் பெப்சி, கோக் பாட்டில்களையே பார்க்க முடியவில்லை. இளநீர்தான் வந்து இறங்கியது. அடுத்து அன்னிய குளிர்பானங்களுக்குத் தடை கேட்பார்கள். டாஸ்மாக்கை மூடச் சொல்லி வீதிக்கு வருவார்கள். அப்படி வந்தால் மிடாஸ் கம்பெனியை மூட வேண்டி வரும் என்பதால்தானே போராட்டத்துக்கு வன்முறைச் சாயம் பூசப்பட்டது. உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இளைஞர்களின் புரட்சி, வரலாற்றில் அழுத்தி பதியப்பட்டுவிடக் கூடாது என்கிற ஆத்திரம்தானே அடக்குமுறையை ஏவிவிட்டது?

ஜூ.வி சொன்னதும் ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும்!

‘‘போராட்டத்தில் பின்லேடன் படத்தை வைத்திருந்தார்கள்’’ எனச் சொல்லும் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைவி ஜெயலலிதாதான் ‘விஸ்வரூபம்’ படத்துக்குத் தடை போட்டவர். கிட்டத்தட்ட, பின்லேடன் இயக்கத்தை அழிக்கும் கதைக்களம் கொண்டதுதான் ‘விஸ்வரூபம்’ திரைப்படம். படத்தில் பின்லேடன் கேரக்டரும் உண்டு. பயங்கரவாதி பின்லேடனை எதிர்ப்பவர்கள், ‘விஸ்வரூபம்’ படத்துக்கு ஆதரவு அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? அப்போது அ.தி.மு.க அரசு எடுத்த நிலைப்பாட்டுக்கு என்ன பெயர்? பின்லேடன் கொல்லப்பட்ட போது அவருக்கு ஆதரவாக தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டனவே, அப்போது போலீஸ் எங்கு போயிருந்தது?

போலீஸ் சொல்வதை திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையாக இருக்காதீர்கள் பன்னீர்!

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism