
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; காவலர் உயிரிழப்பு!
ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் முதல்முறையாக அனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், மாநில காவல்துறையினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு காவலர் உயிரிழந்தார். தீவிரவாதிகள் இரண்டுபேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் நௌஷேரா கிராமத்தில் நேற்று போலீஸார் ஒரு வீட்டை முற்றுகையிட்டு அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். அந்த வீட்டுக்குள் நான்கு தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாகவும், பாதுகாப்புப் படையினர் நடத்தியத் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
அனந்தநாக் நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் நடந்த இந்த மோதல் மற்றும் உயிரிழப்பு குறித்து, மாநில காவல்துறை தலைமை இயக்குநர் வாய்டு உறுதி செய்தார். இந்த மோதலில் பொதுமக்கள் தரப்பில் 2 பேரும், பாதுகாப்புப் படையினர் 4 பேரும் காயம் அடைந்ததாகவும் அவர் கூறினார். தப்பியோடிய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் போலீஸாருடன், ராணுவத்தினரும் இணைந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஶ்ரீநகர், அனந்தநாக் மாவட்டங்களில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.