'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்!' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங்க.தமிழ்ச்செல்வன் | Reason behind thanga. tamilselvan and Dinakaran clash

வெளியிடப்பட்ட நேரம்: 14:23 (22/06/2018)

கடைசி தொடர்பு:15:00 (22/06/2018)

'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்!' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங்க.தமிழ்ச்செல்வன்

'சசிகலாவை சந்திக்கும் அளவுக்கு தினகரன், தங்க.தமிழ்ச்செல்வனுக்கும் இடையில் என்ன நடந்திருக்கும் என்பதுதான் மிகப் பெரிய கேள்வி' என்கிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி ஒருவர்.

'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்!' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங்க.தமிழ்ச்செல்வன்

தங்க.தமிழ்ச்செல்வன்

தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையிலான பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. ' பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்திக்கச் சென்ற தங்க தமிழ்ச்செல்வனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. தினகரன் போட்டு வைத்துள்ள அரணைத் தாண்டி அவர் சசிகலாவைச் சந்திக்கச் சென்றதன் பின்னணியில் சில விஷயங்கள் உள்ளன' என்கின்றனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள். 

தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு, தினகரன் அணியில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றன. ' 18 எம்.எல்.ஏ-க்களும் என்னுடன்தான் உள்ளனர். அவர்கள் யாருக்கும் விலை போகாதவர்கள் ' என தினகரன் தெரிவித்த அதேநேரத்தில், 'இந்த வழக்கில் என்னுடைய மனுவை மட்டும் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். நிரந்தர எம்.எல்.ஏ இல்லாமல் என்னுடைய தொகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். தொகுதிக்கு நிரந்தர எம்.எல்.ஏ வேண்டும் என்ற காரணத்தால், மனுவை வாபஸ் பெறுகிறேன். தினகரனுடன் விவாதித்த பிறகே இப்படியொரு முடிவை எடுத்தேன்' என்றார் தங்க தமிழ்ச்செல்வன். இதற்குப் பதில் அளித்த தினகரனும், ' மற்றவர்கள் போராடுகிறார்கள். தங்க.தமிழ்ச்செல்வன் வாபஸ் பெறுகிறார். மூன்றாவது நீதிபதி நியமிக்கப்பட்ட பிறகு அவரிடம் மனு கொடுக்குமாறு அவருக்குத் தெரிவித்திருக்கிறேன்' என்றார்.

நேரடியான இந்தப் பேட்டிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, தினகரனுக்குத் தெரிவிக்காமல் கடந்த இரண்டு நாள்களாக பெங்களூரில் முகாமிட்டிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். கர்நாடக புகழேந்தி மூலம் சசிகலாவைச் சந்திக்கும் முயற்சியில் அவர் இறங்கினார். ஆனால், அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த கொந்தளிப்பில் இருக்கிறார் தங்கம். ``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலோ 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கிலோ எந்த சந்தேகம் இருந்தாலும் தினகரனிடம்தான் ஆலோசனை பெற வேண்டும். ` தினகரன் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும்' என சசிகலாவும் உறுதியாகக் கூறிவிட்டார். ஆனால், அவரிடம்கூட சொல்லாமல் தங்க தமிழ்ச்செல்வன் பெங்களூருக்குப் பயணப்பட்டதை தினகரன் ரசிக்கவில்லை" என விவரித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி ஒருவர், 

தினகரன்`` இந்தச் சம்பவத்தால் தங்கம் மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார் தினகரன். `எடப்பாடி பழனிசாமியிடம் பேசிக்கொண்டிருக்கிறார் தங்கம்' எனத் தகவல் பரவுவது குறித்து, அவரிடமே கேட்டார் தினகரன். இதற்குப் பதில் அளித்தவர், ` நாங்கள் 18 பேரும் எப்பவும் உங்ககூடத்தான் இருப்போம். நீங்கள்தான் எங்களைத் தவிக்க விடுகிறீர்கள். இந்த வழக்கில் இருந்து எங்களை நீங்கள் காப்பாற்றியிருக்கலாம். தகுதிநீக்க வழக்கின் தீர்ப்புக்கும் நீங்கள் பெரிதாக ரியாக்ட் பண்ணவில்லை' என வருத்தப்பட, இதற்குப் பதில் அளித்த தினகரனோ, ' சட்டரீதியாகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்வது குறித்து, ஆண்டிபட்டி தொகுதி மக்களிடம் ஏன் கருத்து கேட்கச் சென்றீர்கள்? நீங்கள் இப்படிச் செய்தால் மற்றவர்களும் இதைத்தானே ஃபாலோ செய்வார்கள்?' என வருத்தப்பட்டிருக்கிறார். இதை எதிர்பார்த்த தங்கமோ, ` நான் அப்பவே சொன்னேன். ஜக்கையன் கூப்பிடறார். மறுப்புக் கடிதம் கொடுப்போம் எனக் கூறியபோது நீங்கள்தான் என்னை நம்பவில்லை. எம்.எல்.ஏ பதவியில் நாங்கள் இருந்திருந்தால் உங்களுக்கு வலிமையாக இருந்திருப்போம். இப்போது எதுவும் இல்லாமல்தானே இருக்கிறோம்' எனக் கூற, ' சரி..நீங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டீர்கள். யார் கேட்டாலும் என்னைக் கலந்தாலோசித்து செய்ததாகச் சொல்லுங்கள்' எனக் கூறிவிட்டார். 

இந்த வாக்குவாதத்துக்குப் பிறகும், தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்துச் சொல்வதற்காகத்தான் சசிகலாவைச் சந்திக்கச் சென்றிருக்கிறார் தங்கம். அவருக்குப் பதில் அளித்த சிறைத்துறை அதிகாரிகளோ, ' 15 நாள்களுக்கு ஒருமுறைதான் சசிகலாவை சந்திக்க முடியும். கடந்த ஐந்து நாள்களுக்கு முன்புதான் விவேக் ஜெயராமன், சந்தித்துவிட்டுச் சென்றார்' எனக் கூறியுள்ளனர். இதன்பிறகு விவேக்கைத் தொடர்புகொண்டு, ' சின்னம்மாவை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா?' எனக் கேட்டார். விவேக்கிடம் இருந்து அவருக்குச் சாதகமான பதில் வரவில்லை. சசிகலாவை சந்திக்கும் அளவுக்கு தினகரனுக்கும் தங்கத்துக்கும் இடையில் என்ன நடந்திருக்கும் என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. தினகரனைத் தவிர்த்துவிட்டு பெங்களூரு கிளம்பிப் போனதன் மர்மம்தான் புரியவில்லை. இது டி.டி.விக்குக் கூடுதல் கோபத்தை உருவாக்கியிருக்கிறது" என்றார் விரிவாக. 

அதேநேரம், தங்க தமிழ்ச்செல்வனின் மோதலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது ஆளும்கட்சி. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், `` அ.தி.மு.கவுக்குத் தங்க தமிழ்ச்செல்வன் சென்றால், ' அவருடன் நான்கு தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களும் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன' என்பதை அறிந்துதான் அதிர்ச்சியில் இருக்கிறார் தினகரன். 'ஆளுநரிடம் மனு கொடுத்தால் பதவி போய்விடும்' என்பதை அப்போது தினகரனுக்கு ஆதரவாளராக இருந்த தோப்பு வெங்கடாச்சலம் அறிவுறுத்தினார். இதனை தினகரன் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தோப்புவும் டி.டி.வியை விட்டு ஒதுங்கிச் சென்றுவிட்டார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு பரம எதிரியாக இருந்த ஜக்கையன், எடப்பாடி பக்கம் செல்வார் என தினகரன் எதிர்பார்க்கவில்லை. அவரைத் தொடர்ந்து சசிகலாவுக்கு விசுவாசியாக இருந்த நவநீதகிருஷ்ணனும் எடப்பாடியை நாடிச் சென்றார். ' இவர்களை இவரால் தக்க வைக்க முடியவில்லையே... கட்சியை எப்படி வழிநடத்துவார்?' என்ற கேள்வி எழுந்தது. இவர்களை ஒதுக்குவதற்குக் காரணம், 'தன்னைத்தவிர கட்சிக்குள் வேறு யாரும் முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது என்பதுதான் தினகரனின் எண்ணம்' என்பதை சீனியர்கள் புரிந்துகொண்டனர். இதன் நீட்சியாகவே தங்க தமிழ்ச்செல்வனையும் அவர் ஓரம்கட்டுகிறார். எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் முட்டல், மோதல்கள் அதிகரித்தால் தங்க தமிழ்ச்செல்வனுக்கான வாய்ப்புகள் தேடி வரும்" என்றார் விரிவாக.