Published:Updated:

“சசிகலா எனும் நான்!”

சசிகலா
News
சசிகலா

24-வது நாளில் பொதுச்செயலாளர்... 62-வது நாளில் முதல்வர் தேர்வு!

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லையா? என்ன கொடுமை சின்னம்மா!

 மன்னார்(குடி) அன் கம்பெனி!

‘அக்கா நீங்கள் கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா?? மதியம் சாப்பிட என்ன வேண்டும்!’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குனி என்றால் விழுகிற கேவலத்தை விட இது மேல். நல்லவேளை நான் பெரியகுளத்துல பிறக்கல.

ட்ரம்ப், மோடி, சசிகலா!

இதை இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது!

எல்லோரும் ஓடுங்க... அவங்க நம்மள நோக்கிதான் வர்றாங்க!

ஜெயலலிதா மரணத்திலிருந்த மர்மம் ஒரு வழியாக இன்று தீர்க்கப்பட்டுவிட்டது!

ஜெயலலிதாவை இரண்டாவது முறை குழி தோண்டிப் புதைத்த நாள் இது.

- சசிகலா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட கணத்தில் இருந்து ஃபேஸ்புக்கில் கிளம்பிய அரசியல் மொழிகள் இவை.

“சசிகலா எனும் நான்!”

அறுபது நாட்களில் ஆட்சியைப் பிடிப்பது எப்படி?

 ஜெயலலிதா 75 நாட்கள் அப்போலோவில் வாசம் செய்து... அவர் இறந்த 24-வது நாளில் பொதுச்செயலாளர் ஆகி... 62-வது நாளில் முதல்வராகத் தேர்வாகியிருக்கிறார் சசிகலா. 33 ஆண்டு காத்திருப்புக்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது சசிகலாவுக்கு.

போயஸ் கார்டன் மந்திராலோசனை!

ஒரு வார இடைவெளிக்குள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-கள் கூட்டம் என்றதுமே ‘அடுத்த முதல்வர் சசிகலா’ என பேச்சுகள் கிளம்பிவிட்டன. ‘‘தொகுதிகளின் குறைகள், பிரச்னைகளை எழுதிக் கொண்டு வாருங்கள்’’ என ஒரு உத்தரவு மட்டும்தான் அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-களுக்குப் போனது. அதை ஃபைல் போட்டு தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு வந்தார்கள். கூட்டம் பிற்பகலில்தான் நடந்தது. ஆனால், முற்பகலில் போயஸ் கார்டனில் மந்திராலோசனை நடந்து கொண்டிருந்தது. முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் அங்கே ஆஜர். சசிகலாவிடம், ‘‘கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒருவரே தலைவராக இருக்க வேண்டும். அதனால், நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ எனச் சொன்னார் ஓ.பி.எஸ். அதன்பிறகு ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் காட்டினார். பிறகு, அதை கவர்னர் மாளிகைக்கு அனுப்பினார். “உங்கள் வருகைக்காக எம்.எல்.ஏ-க்கள் காத்திருக்கிறார்கள். உங்களை முதல்வராகத் தேர்வு செய்ய நினைக்கிறோம்’’ என்றார் பன்னீர். அப்படியான எந்த அறிவுரையும் எம்.எல்.ஏ-க்களுக்கு சொல்லப்படாத நிலையில், ‘அவர்கள் காத்திருக்கிறார்கள்’ என ஓ.பி.எஸ் சொன்னதும், அமைச்சர்கள் அவரை ஆச்சர்யத் தோடு பார்த்தனர். முன்கூட்டியே பன்னீரும் சசிகலாவும் இதுபற்றி பேசி இருக்கிறார்கள் என்பது அமைச்சர்களுக்கே அப்போதுதான் தெரிந்தது.

எம்.எல்.ஏ-க்களுக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவித்து, அவர்களை ரெடி செய்ய அமைச்சர்கள் அனைவரும் தலைமை அலுவலகத்துக்குப் போய்விட... பன்னீர்செல்வத்தோடு சசிகலா ஒரு மணி நேரத்துக்கும் மேல் தனியாக ஆலோசனை நடத்தினார்.

“சசிகலா எனும் நான்!”

கையெழுத்து சம்பிரதாயம்!

‘இரண்டு மணிக்குக் கூட்டம்’ என அறிவித்திருந்தபோதும் ஒரு மணிக்கே எல்லோரும் ஆஜர். கையில் ஃபைல்கள். தங்கள் தொகுதியில் இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், இனி நிறைவேற்ற வேண்டிய பணிகள் பற்றிய விவரங்கள் எல்லாம் அந்த ஃபைல்களில் இருந்தன. உள்ளே நுழைந்த எல்லோரிடமும் கையெழுத்து வாங்கினார்கள். அ.தி.மு.க கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற, மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தனியரசு ஆகிய மூவருக்கும் அழைப்பு போனது. அவர்களுக்கும் அதே தொகுதி பிரச்னைகள்தான். அவர்களை நேராக கார்டனுக்கு அழைத்துக் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள்.

கையெழுத்து நேரம் மதியம் 1.41 மணி!

கட்சியின் சீனியர்கள் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன், தங்கமணி போன்றவர்கள் இரண்டு மணியில் இருந்தே சசிகலாவை வரவேற்க அலுவலகத்தின் வாயிலில் காத்திருந்தனர். அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கோகுல இந்திரா, உற்சாகம் பொங்க நின்று கொண்டிருந்தார். முகத்தில் வழக்கத்துக்கு மாறாக ஏறியிருந்த பவுடர், வியர்வையில் வழிய ஆரம்பித்தது. இரண்டரை மணிக்கு ஓ.பி.எஸ் வந்து சேர்ந்தார். கூட்டம் நடக்கும் முதல் மாடிக்குச் சென்று அமர்ந்து கொண்டார். மூன்று மணி ஆகியும் சசிகலா வரவில்லை. ராஜினாமா கடிதத்தில் பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டபோது நேரம், மதியம் 1.41. மணி. அது போய்ச் சேர்ந்த தகவல் உறுதியான பிறகுதான், அவர் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அதற்குள் அவரது ராஜினாமா செய்திகள் கசிய ஆரம்பித்தன. ‘‘பொருளாளராகிய நான் கழகத்தின் சட்டமன்ற கட்சித் தலைவராக சின்னம்மா அவர்களை முன்மொழிகிறேன். முதல் அமைச்சர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன்” என எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அறிவித்தார் பன்னீர்செல்வம். இந்தப் பேச்சு அப்படியே ஜெயா டி.வி.யில் லைவ் ஆனது. சசிகலா வராமலேயே அறிவிப்பு முதலில் வெளியானது. ‘அ.தி.மு.க சட்டமன்றக் கட்சி தலைவராக வி.கே.சசிகலாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறோம்’ என்கிற வாசகம் எழுதப்பட்ட பேப்பரில் எம்.எல்.ஏ-களிடம் கையெழுத்துப் பெறும் படலம் நடந்தது.

‘‘எல்லாம் ரெடி.. நீங்க வரலாம்மா’’

அறிவிப்பு வெளியானதும், செங்கோட்டையன் கார்டனைத் தொடர்பு கொண்டார். “இங்கு எல்லா ஃபார்மாலிட்டிகளும் முடிந்துவிட்டன. சின்னம்மா கிளம்பி வரலாம்’’ எனச் சொல்ல... அதன்பிறகு சசிகலாவின் கார், கார்டனில் இருந்து தலைமை அலுவலகம் நோக்கிக் கிளம்பியது. மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போடப்பட்டிருந்ததால் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்க ஆட்கள் குவிக்கப்பட்டிருந்தனர். சசிகலாவுடன் டாக்டர் வெங்கடேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் வந்திருந்தார்கள். ஜெயலலிதாவுக்குப் பிடித்த பச்சை கலர் சேலையை சசிகலா அணிந்திருந்தார். ஜெயலலிதாவைப் போலவே தன்னை அலங்கரித்துக் கொண்டு, அவர் போலவே சிரிக்கவும் கைகளை அசைக்கவும் சசிகலா முயற்சி செய்தாலும், ஜெயலலிதா வந்தால் தொண்டர்களிடம் இருக்கும் உற்சாகம் சசிகலாவுக்கு மிஸ்ஸிங்.

“சசிகலா எனும் நான்!”

சசி அருகில் ஓ.பி.எஸ்!

ஏற்கெனவே ஜனவரி 27-ம் தேதிதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்தது. அதற்குள் அடுத்த கூட்டம். முந்தைய கூட்டத்தில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை தனது பக்கத்தில் உட்கார சசிகலா அனுமதிவில்லை. அதனால் எதிரில் எம்.எல்.ஏ-க்களோடு கூட்டத்தில் ஒருவராகத்தான் அவர் அமர்ந்திருந்தார். ஆனால், 5-ம் தேதி கூட்டத்தில் சசிகலாவுக்கு அருகில் பன்னீர்செல்வத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் பேசிய சசிகலா, “அம்மா இறந்தவுடனே கட்சிப் பொறுப்பையும் முதல்வர் பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்று பன்னீர்செல்வம் என்னிடம் வற்புறுத்தினார். அப்போதைய மனநிலையில் நான் சம்மதம் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து அனைவரும் வற்புறுத்துவதால் உங்கள் கோரிக்கையை நான் ஏற்கிறேன். அம்மாவின் வழியில் இந்த ஆட்சி செயல்படும் என்ற உறுதிமொழியைத் தருகிறேன்” எனப் பேசினார். சசிகலா அங்கிருந்து கிளம்பியபோது, “முதல்வர் சின்னம்மா” என்ற கோஷம் புதியதாக ஒலிக்கத் தொடங்கியது.

சசிகலாவின் திட்டம்தான் என்ன?

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். வரும் ஜூலை மாதம், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைகிறது. நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி-க்கள், மாநில சட்டமன்றங்களின் எம்.எல்.ஏ-க்கள்தான் ஓட்டுப் போட்டு ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பார்கள். ஜூலை மாதம் இந்தத் தேர்தலை நடத்த வசதியாக, காலியாக இருக்கிற தொகுதிகளில் எல்லாம் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி உட்பட காலியான தொகுதிகளின் தேர்தலை ஜூன் மாதத்துக்குள் நடத்தி முடித்துவிடும் தேர்தல் கமிஷன். அதன்பிறகுதான் ஜனாதிபதி தேர்தல் பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கும்.

“சசிகலா எனும் நான்!”

ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்களும் எம்.எல்.ஏ-க்களும்தான் வாக்காளர்கள். சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு, அவரவர் மாநில மக்கள்தொகை மற்ற சட்டமன்றங்களின் பலத்தைப் பொறுத்து மாறும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பு தோராயமாக 176. தமிழக எம்.எல்.ஏ-க்களின் மொத்த ஓட்டு மதிப்பு (234*176) 41,184. ஒரு எம்.பி-யின் ஓட்டு மதிப்பு 708. 543 மக்களவை எம்.பி.க்களும், 233 ராஜ்யசபா எம்.பி-க்களும் மாநில எம்.எல்.ஏ-க்களும் சேர்ந்து மொத்தமாக 4 ஆயிரத்து 896 ஓட்டுப் போடுவார்கள். மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அந்தக் கட்சியை சேர்ந்தவருக்குத்தான் ஜனாதிபதி சான்ஸ் அடித்து வருகிறது. அந்த வகையில் தாங்கள் நினைக்கும் நபர்களை பெரிய எதிர்ப்பின்றி ஜனாதிபதி பதவியிலும், துணை ஜனாதிபதி பதவியிலும் அமர வைக்க நினைக்கிறது பி.ஜே.பி. அ.தி.மு.க-வுக்கு 134 எம்.எல்.ஏ-க்களும் 49 எம்.பி.களும் இருக்கிறார்கள். இவர்களின் ஆதரவை முழுமையாகப் பெற நினைக்கிறது பி.ஜே.பி. ‘‘ஜெயலலிதா இல்லாத நிலையில் அ.தி.மு.க.வை அடிபணிய வைப்பதில் பி.ஜே.பி-க்கு அதிக சிரமம் இல்லை. அதன் வெளிப்பாடுதான் ஜெயலலிதா எதிர்த்த உதய் திட்டம், மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை என பல விஷயங்களில் பி.ஜே.பி-க்கு தலையாட்ட வேண்டிய கட்டாயத்தில் சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. இருக்கிறது. தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டிலும் தலைமைச் செயலகத்திலும் துணை ராணுவத்தை வைத்து மத்திய அரசு சோதனை போட்டபோதுகூட வாய் மூடியிருந்தது அ.தி.மு.க. இது எல்லாமே ஜனாதிபதி தேர்தலைக் குறி வைத்து செய்யப்பட்டதுதான். ஜனாதிபதி தேர்தலில் பிஜே.பி-க்கு நிபந்தனையற்ற ஆதரவை சசிகலா தருவார் அதற்கான டீலிங்தான் முதல்வர் பதவியில் சசிகலா அமர்வது’’ என்கிறார்கள் அ.தி.மு.க.வி-ன் முக்கியப் புள்ளிகள்.

பொம்மை ஆட்சியா?

பீகாரில் அசைக்க முடியாத செல்வாக்கோடு இருந்த காங்கிரஸை வீழ்த்திவிட்டு ஆட்சியில் அமர்ந்தவர் லாலு பிரசாத் யாதவ். அங்கே அவரின் கொடி பறந்த காலக்கட்டம் அது. 1997-ம் ஆண்டு கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு சிக்கினார். அந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு முதல்வர் பதவியை இழந்து சிறைக்குப் போனார். ‘அடுத்த முதல்வர் யார்’ என்ற கேள்வி எழுந்தபோது திடீர் திருப்பமாக தன் மனைவி ராப்ரிதேவியை முதல்வராக்கினார் லாலு. இளம் வயதில் அரசியலில் தீவிரமாக லாலு ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது லாலு ஏழைதான். பால்காரரின் மகன் லாலுவுக்கு ராப்ரிதேவியை திருமணம் செய்து வைத்தார்கள். ராப்ரிதேவியின் குடும்பம் வசதி படைத்தது. திருமணம் நடந்தபோது ராப்ரி தேவிக்கு 14 வயதுதான் இருக்கும். அவருக்கு அரசியல் புரிதல் சொல்லிக் கொள்ளும்படி இருக்கவில்லை. காரணம், அவருக்கு எழுதக்கூட தெரியாது. ‘‘ராப்ரி எப்படி ஆட்சி நடத்துவார்’’ என லாலுவிடம் கேள்வி எழுப்பினார்கள் பத்திரிகையாளர்கள். ‘‘முதலமைச்சராக சிறப்பாக செயல்பட மனைவி ராப்ரிக்கு இரண்டுநாள் பயிற்சி கொடுத்திருக்கிறேன். அவர் தரும் சிறப்பான ஆட்சியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்’’ என சிரிக்காமல் சொன்னார் லாலு. சிறை கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபடியே நிழல் முதல்வராக நீடித்தார் லாலு.

“சசிகலா எனும் நான்!”

தான் சிறைக்குப் போனாலும் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள லாலு போட்ட திட்டங்கள் ஏராளம். அதில் ஒன்றுதான், அதிருப்தியாளர்கள் உருவாகிவிடாமல் இருக்க பலருக்கும் அமைச்சர்கள் பதவியை வாரிக் கொடுத்தது. ராப்ரி அமைச்சரவையில் 74 பேர் அமைச்சர்கள். அந்த அமைச்சர்களின் ஒரு சிலரின் பெயர்கள்கூட ராப்ரிக்கு தெரியாது. ‘‘அமைச்சர்கள் அனைவரின் பெயர்களையும் ராப்ரி சரியாகச் சொன்னால் அரசியலை விட்டே ஒதுங்கிவிடுகிறேன்’’ என எதிர்க்கட்சியினர் சவால்விட்டார்கள். கையெழுத்துப் போடக்கூடத் தெரியாத ராப்ரி முதல்வராக இருந்து ஃபைல்களை எல்லாம் பார்த்தது எல்லாம் பீகார் அரசியலின் காமெடி பக்கங்கள். அந்த பொம்மை ஆட்சிதான் இப்போது தமிழகத்தில் அரங்கேறுகிறது. நடராசன் பின்னால் இருந்துகொண்டு சசிகலாவை இயக்கும் காட்சிகள்தான் அரங்கேறும்.

ராப்ரி தேவியைப் போலவே சசிகலாவுக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அது, இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் வெளிப்பட்டது. இந்தியா டுடே பத்திரிகை தமிழில் நிறுத்தப்பட்ட விஷயம்கூட தெரியாமல், அந்தப் பத்திரிகை சிறப்பாக வருகிறது எனச் சொன்னவர் அவர். சசிகலா பொம்மைதான். ஆட்டுவிக்கும் கயிறு நடராசன் கையில் இருக்கும். எனவே, பல விநோதக் காட்சிகளை இனி தமிழகத்தில் அடிக்கடி பார்க்கலாம்!

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர் 
படங்கள்: சு.குமரேசன், கே.ஜெரோம்