Published:Updated:

“ஜல்லிக்கட்டு போராட்டம் மிக உன்னதமானது!” - மயில்வாகனன் நெகிழ்ச்சி

“ஜல்லிக்கட்டு போராட்டம் மிக உன்னதமானது!” - மயில்வாகனன் நெகிழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
News
“ஜல்லிக்கட்டு போராட்டம் மிக உன்னதமானது!” - மயில்வாகனன் நெகிழ்ச்சி

“ஜல்லிக்கட்டு போராட்டம் மிக உன்னதமானது!” - மயில்வாகனன் நெகிழ்ச்சி

‘‘மாணவர் போராட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், என்னை நேரில் அழைத்துப் பாராட்டினார். காவல்துறை வரலாற்றில், ஒரு அதிகாரி செய்த பணியை திறந்த நீதிமன்றத்தில் பாராட்டியதை மிகப்பெரிய விஷயமாகக் கருதுகிறேன். அதேபோல் தமிழக முதல்வரும் பாராட்டியது நெகிழ்வான தருணம். ‘பேசியே மாணவர்களைக் கலைந்து போக வைத்திருக்கிறீர்கள். சரியான அணுகுமுறை. மாணவர்கள் மனதைத் தொடும்படியான உங்கள் பேச்சு நன்றாக இருந்தது’ என முதல்வர் பாராட்டினார். இந்தப் பாராட்டுக்கள் பொறுப்புணர்வைக் கூட்டி இருக்கின்றன’’ என்கிறார் மயில்வாகனன். தமிழகமே தகித்தபோதும், திருச்சியில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை அமைதியாக முடித்த போலீஸ் அதிகாரி. ‘தமிழக காவல்துறை வரலாற்றில்,  ஓர் அதிகாரியின் நற்பணிக்கு இப்படி ஓர் அங்கீகாரம் கிடைத்ததே இல்லை’ என மெய்சிலிர்க்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனனை சந்தித்தோம்.

‘‘இந்தப் போராட்டத்தை மாணவர்களும் ஊடகமும் சேர்ந்து கொண்டாடத் தயாராக இருந்தார்கள். அதற்கான வாய்ப்பு பல இடங்களில் கிடைக்கவில்லை. திருச்சியில் கிடைத்தது. இ்தை முதன்முதலில் அங்கீகரித்தது விகடன்தான். விகடனுக்கு என் நன்றிகள்” என்றபடி நம் கேள்விகளை எதிர்கொண்டார் அவர்.

“ஜல்லிக்கட்டு போராட்டம் மிக உன்னதமானது!” - மயில்வாகனன் நெகிழ்ச்சி

“இந்த மாணவர் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“மாணவர்களின் இந்தப் போராட்டம் மிக உன்னதமானது. மதுரை கூடுதல் எஸ்.பி-யாக இருந்தபோது, 15 ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குப் பாதுகாப்பு கொடுத்துள்ளேன். ஜல்லிக்கட்டு தமிழர்களின் உணர்வு சார்ந்தது. உலகத்திலேயே ஓர் இனம் தங்கள் பண்பாட்டை மட்டுமே மையமாக வைத்து ஒன்றிணைந்து குரல் கொடுத்தது இதுதான் முதன்முறை. குறிப்பிட்ட ஒரு பிரிவினர் என இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் போராடி னார்கள். தமிழர்கள் அல்லாதவர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். இதுதான் பெரிய வெற்றி.

மாணவர்களுக்கு இந்தப் போராட்டம் பல புரிதல்களைத் தந்துள்ளது. இப்போது மாணவர்கள் பாரம்பரியம், பண்பாடு, இயற்கை உள்ளிட்டவை குறித்து பேசுகிறார்கள். இது பெரிய விஷயம் இல்லையா? இந்தப் போராட்டம் எது நல்லது, எது கெட்டது என அவர்களுக்கு உணர்த்தியுள்ளது. போராடிய மாணவர்கள், இளைஞர்கள், அந்த ஆற்றலை நல்ல முறையில் இனி பயன்படுத்த வேண்டும். திருச்சியில் போராடிய மாணவர்கள், இப்போது மரம் நட ஆரம்பித்துள்ளார்கள். அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டுமானால், மாணவர்கள் மரங்களை நடவேண்டும். முக்கியமாக நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.”

“இவ்வளவு பெரிய போராட்டத்தை அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் நல்லபடியாக முடிக்க எப்படி முடிந்தது?”

“ஆரம்பம் முதலே போராடிய மாணவர்களுக்கும், எங்களுக்குமான உறவு சரியாகவே இருந்தது. அவர்களின் நோக்கத்தை எல்லா காவலர்களும் உணர்ந்தோம். அவர்களுக்கு உதவினோம். மாணவர்கள் எங்களை நம்பினார்கள். அதேபோல் மாணவர்களைக் கையாளும் இடத்தில் இருக்கும் நான், சிறிதும் கோபப்படக்கூடாது என உறுதியாக இருந்தேன். இறுதியாக, மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். ‘இந்தப் போராட்டம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. சிறு வன்முறை ஏற்பட்டாலும் அது மாணவர்களைப் பொறுப்பாளிகள் ஆக்கும்’ என்பதை உணர்த்தினோம். உண்மையில் பாராட்டுக்குரியவன் நானல்ல, மாணவர்கள்தான்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


“மாணவர்களை காலை 10 மணிக்குள் கலைத்துவிடவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இருந்ததாமே?”

“அப்படி எந்தவித உத்தரவும் எங்களுக்கு வரவில்லை.”

“சென்னையிலும் இதுபோன்ற ஒரு அணுகுமுறையைக்  கடைபிடித்திருந்தால், ஒரு பெரிய வரலாற்றுக் கறையைத் தவிர்த்திருக்கலாமே?”

“திருச்சி சூழலை சென்னையோடு ஒப்பிடக் கூடாது. மெரினாவில் கூடியிருந்தவர்களுக்கும், திருச்சியில் மக்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. மெரினாவுக்கு தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வந்திருந்தார்கள். அந்தச் சூழலே தனி.”

“உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?”

“நானெல்லாம் போலீஸ் அதிகாரி ஆவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. எனது மனைவி வானதி இதற்குத் துணையாக இருந்தார். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தங்கமாபுரிபட்டிணம்தான் எங்கள் கிராமம். அப்பா தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அம்மா தமிழ்நாடு மின்வாரியத்தில் பணி செய்கிறார்கள். எனக்கு மூன்று சகோதரிகள். அப்பா ரொம்ப பொறுமையாகவும் நேர்மையாகவும் இருப்பார். அதனால் நிறைய நெருக்கடிகளுக்கு ஆளானார்.

ஊரில் நடந்த சில சம்பவங்கள்தான், எனக்கு காவல்துறைமீது ஆர்வம் வரக் காரணம். எங்கள் கிராமத்தில் ‘அன்னை நண்பர்கள்’ எனும் பெயரில் இளைஞர்கள் இணைந்து 25 வருடங்களாக பல நற்பணிகளைச் செய்து வருகிறோம். டேக்வாண்டோ விளையாட்டில் எங்கள் கிராமத்தில் மட்டும் 800 மாணவர்களை உருவாக்கியுள்ளோம். சில மாதங்களுக்கு முன் தாய்லாந்தில் நடைபெற்ற உலக டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற ஜீவானந்தம், எங்கள் ஊர் மாணவன். இணையதள வசதியுடன் தரமான நூலகம், அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி மையம் ஊரில் நடத்துகிறோம். கடந்த நான்கு வருடங்களில் 22 பேர் இதன்மூலம் வேலைக்குப் போயிருக்கிறார்கள். இளைஞர்கள் உடலை உறுதியாக வைத்துக்கொள்ள ஜிம் உள்ளிட்டவற்றை உருவாக்கி உள்ளோம். ஒவ்வொருவரும், தாங்கள் பிறந்த கிராமத்துக்கு ஏதாவது திருப்பிச் செய்யவேண்டும். இது சமூகக் கடமை.”

- சி.ய.ஆனந்தகுமார்
படம்: என்.ஜி.மணிகண்டன்