Published:Updated:

கல்லறைப் புரட்சி! - மெரினாவில் வீசிய ‘பன்னீர்’ புயல்!

கல்லறைப் புரட்சி! - மெரினாவில் வீசிய ‘பன்னீர்’ புயல்!
பிரீமியம் ஸ்டோரி
News
கல்லறைப் புரட்சி! - மெரினாவில் வீசிய ‘பன்னீர்’ புயல்!

ஜெ. சமாதி

மெரினாவில் உள்ள ஜெயலலிதா வின் நினைவிடத்தில் வைத்தே, மன்னார்குடி குடும்பத்தை அசைத்துப் பார்த்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா இறந்த பிறகு முதல்வர் பதவியில் அமர்ந்தவர், திடீரென சசிகலாவுக்காகப் பதவியை ராஜினாமா செய்த அன்று, ஓ.பி.எஸ் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையில் எப்போதும் இல்லாத அளவுக்குப் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனாலும், ‘சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் திரும்புவதற்கான வாய்ப்பே இல்லை’ என்றே இவரது ஆதரவாளர்கள் சொல்லி வந்தார்கள். நம்பினார்கள். ஆனால், அனைத்தையும் தவிடுபொடியாக்கி மனதில் உள்ளதை எல்லாம் ஜெ. சமாதி முன்னால் போட்டு உடைத்துவிட்டார்.

பதவியை ராஜினாமா செய்த ஞாயிற்றுக்கிழமை, அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு வீட்டுக்குப் போன பன்னீர்செல்வம், மறுநாள் வரை வெளியில் வரவில்லை. செல்போனையும் அணைத்து வைத்துவிட்டார்.

கல்லறைப் புரட்சி! - மெரினாவில் வீசிய ‘பன்னீர்’ புயல்!

7-ம் தேதி காலையில், தனது ஆதரவாளர் களுடனும், குடும்பத்தினருடனும் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது குறித்துப் பேசி இருக்கிறார். சிலரது கருத்துகளையும் கேட்டு இருக்கிறார். அன்று மதியம் வழக்கமாகச் சாப்பிடும் காய்கறி உணவையும் எடுத்துக் கொள்ளவில்லை. ஜூஸ் கூட குடிக்க மறுத்துவிட்டார். மாலை 6 மணிக்கு மேல் குளித்துவிட்டு, வீட்டில் உள்ள ஜெயலலிதா படத்துக்கு பூ தூவி வணங்கியவர், நிதானமாக வெளியே செல்லத் தயாரானார்.

நெற்றியில் திருநீறு குங்குமம், சட்டைப் பையில் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்துக்கொண்டு தனது TN 06 Z 2345 வாகனத்தில் இரவு எட்டரை மணி வாக்கில் ஏறினார். ‘எங்கு போகப் போகிறார்?’ என உதவியாளர்களுக்குக்கூட சொல்லவில்லை. காரில் ஏறியவர்,  மெரினாவுக்குச் செல்லும் வழியை சைகையிலேயே காட்டி இருக்கிறார். கூடவே, அவரது பாதுகாப்பு வாகனமும் வந்திருக்கிறது. காரில் வரும்போது கூட யாருடனும் ஓ.பி.எஸ் பேசவில்லையாம். காரில் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பார்த்தபடியே வந்திருக்கிறார். சரியாக, 8.49 மணிக்கு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவு இடத்துக்கு அவரது கார் வந்தடைந்தது. ‘அம்மாவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருப்பார்’ என்றே உதவியாளர்கள் நினைத்தார்கள்.

ஜெயலலிதா நினைவு இடத்தைக் காண வந்த மக்கள்... திடீரென ஓ.பி.எஸ்-ஸைப் பார்த்ததும், மொபைலில் போட்டோக்கள் எடுக்க ஆரம்பித்தார்கள். எதையுமே சட்டை செய்யாமல், ஏதோ நினைவுகளில் மூழ்கியபடி ஜெ. சமாதிக்குள் நுழைந்தார். முன்கூட்டியே யாரிடமோ சொல்லி வைத்திருப்பார் போல... ஒருவர் மலர் வளையத்தோடு அங்கு தயாராகக் காத்திருந்தார். அதை வாங்கி வைத்துவிட்டு, சமாதியைத் தொட்டு வணங்கியவர், ஒரு சுற்றுச் சுற்றிவந்து மெளனமாக கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். தியானத்தில் அமர்ந்த துறவி போல, இரு கைகளையும் தனது மடி மீது வைத்து மெளனத்தில் ஆழ்ந்தார்.

தகவல் கிடைத்து அங்கு வந்த உளவுத்துறை அதிகாரிகள், ஓ.பி.எஸ்-ஸின் ஒவ்வொரு அசைவையும் போயஸ் கார்டனுக்கு அனுப்பியபடி இருந்தார்கள். ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும் நிருபர்களுக்கும் இந்தத் தகவல்கள் கிடைக்க, பலரும் மெரினாவை நோக்கி விரைந்தார்கள். முதலில் வந்தவர்களில், ஜெயா டி.வி டீமும் அடக்கம்.

ஓ.பி.எஸ்-ஸின் தியான நிமிடங்கள் நீடிக்கவே, ஏதோ விபரீதத்தை உணர்ந்தது போலீஸ். பொதுமக்களையும், கட்சிக்காரர்களையும் மெரினாவில் இருந்து வெளியேற்றத் துவங்கியது. ஆனால், அங்கிருந்து வெளியேறாமல் பலர் முரண்டுபிடித்தார்கள். இவர்களில் சிலர், பன்னீருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். ‘‘அம்மாவின் உண்மைத் தொண்டர் நீங்கள். நீங்கள் தலைமைக்கு வாருங்கள். மக்களின் முதல்வர் நீங்கள்தான்” என சவுண்டு விட, பன்னீருடன் வந்தவர்கள் பதறினார்கள். “சத்தம் போடாதீங்க... சத்தம் போடாதீங்க” எனப் பணிவாகச் சொன்னார்கள். ஆனாலும், அவர்கள் கேட்கவில்லை. அதற்குள் காவலர்கள் மெரினாவைச் சுற்றிக் குவிக்கப்பட்டார்கள். முக்கிய அதிகாரிகளும் வந்து சேர்ந்தார்கள்.

தியானத்தில் இருந்த பன்னீர், நடுநடுவே கண்களைத் திறந்து பார்த்தார். லேசாகக் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வந்தது. அதைத் தனது கைகளால் துடைத்தபடியே அமர்ந்திருந் தார். பன்னீர்செல்வத்தின் இந்த 40 நிமிட மெளன அமைதி... ஒட்டுமொத்த தமிழகத்தையுமே பரபரப்பு ஆக்கியது. மெளனம் கலைந்து எழுந்து, மீண்டும் ஒருமுறை ஜெ. சமாதியைச் சுற்றி வந்தார். மீண்டும் வணங்கி எழுந்தார்.

நெருங்கி நின்ற மீடியாவிடம் பன்னீர் பேச விரும்புவது அவரது உடல்மொழியிலேயே தெரிந்தது. ‘பன்னீர் என்ன சொல்லப்போகிறார்?’ என்ற ஆர்வமும் பதற்றமும் அங்கிருந்த நிருபர்கள், காவலர்கள், தொண்டர்கள், தொலைக் காட்சிகளில் இதை நேரலையாகப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் என அனைவருக்குமே இருந்தது. ஓ.பி.எஸ் முன், சரமாரியாக மைக்குகள் நீட்டப் பட்டன. அப்போது லேசாக தள்ளுமுள்ளு ஏற்பட்ட... “கொஞ்சம் தள்ளிப்போய் மைக் போடுங்க’’ என காவல் துணை உயரதிகாரி  ஒருவர் உத்தரவிட்டார். ஜெ. சமாதியில் இருந்து 10 அடி தூரத்தில் ஒரு தடுப்பரண் இருந்தது. அதில் மைக்குகளை எல்லாம் கொண்டுவந்து வைத்தார்கள். ஓ.பி.எஸ் நிருபர்கள் முன் வந்தார்.

ஒருவர் பேசுவதை இன்னொருவரால் கேட்கமுடியாத அளவுக்கு அந்த இடம் சத்தமாக இருந்தது. “அமைதி... அமைதி” என காவலர்களும், பத்திரிகையாளர்களும் சொன்னதை யாருமே கேட்கவில்லை. மைக் முன் வந்தார் முதல்வர். சில விநாடிகளில் இரைச்சல் குறையும் எனக் காத்திருந்தார். கடல் காற்று சில்லென்று வீசிக்கொண்டிருக்க, தனது மனதில் மட்டுமேவைத்துக் குமுறிக்கொண்டிருந்த அனைத்தையும் வரிசையாகச் சொன்னார். ‘திடீரென ஏன் ஜெயலலிதா சமாதிக்கு வந்தீர்கள்?’ என ஒரு கேள்வியைத்தான் எழுப்பினார்கள் அங்கிருந்த நிருபர்கள். அதற்கு தொடர்ந்து 27 நிமிடங்கள் தனது மனதில் இருந்ததைக் கொட்டிவிட்டார்.

“என் மனசாட்சி உந்தியதால் இங்கு வந்தேன். அம்மாவின் ஆன்மா என்னை அழைத்தது. கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கழக உடன்பிறப்புகளுக்குச்் சொல்ல வந்தேன்” என ஆரம்பித்து ஓ.பி.எஸ் சொன்னது அனைத்துமே பரபரப்பின் உச்சம். சசிகலாவுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றியவர், “கட்சி நிர்வாகிகளும், மக்களும் விரும்பினால் எனது ராஜினாமாவைத் திரும்பப் பெறுவேன். என் முடிவில் உறுதியாக இருப்பேன். தனி ஆளாக நின்று போராடத் தயாராக இருக்கிறேன்” என்றார் தீர்க்கமாக.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கல்லறைப் புரட்சி! - மெரினாவில் வீசிய ‘பன்னீர்’ புயல்!

அமைதியாக அங்கிருந்து கிளம்பியவருக்கு இப்போது மக்கள் செலுத்திய ‘வணக்கம்’ வழக்கத்தைவிட வித்தியாசமாக இருந்தது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது ‘தென்பெண்ணை’ இல்லத்துக்கு அவர் சென்றபோது, அங்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் குவிந்து இருந்தனர். பட்டாசுகளை வெடித்து அவரை வரவேற்றார்கள். கொண்டாடினார்கள். சில தொண்டர்கள் ஆட்டோவில் ஸ்பீக்கர் கட்டி, “நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற”  என்ற பாடலை ஓடவிட்டு நடனம் ஆடி மகிழ்ந்தார்கள். ஓ.பி.எஸ் வீட்டின் முன் ஒட்டப்பட்டு இருந்த சசிகலா போஸ்டர்களை எல்லாம் வெறிகொண்டு கிழித்து எறிந்தார்கள். சசிகலாவை சிலர் வார்த்தைகளால் வசைபாடினார்கள்.

வீட்டுமுன் இருந்த தொண்டர்களுக்கு இரட்டை இலை சின்னத்தைக் காண்பித்துவிட்டு வீட்டுக்குள் சென்றார் பன்னீர். தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு ஒருமுறை வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து இரட்டை இலை சின்னத்தைக் காண்பித்து, வணக்கம் வைத்தபடியே இருந்தார். நள்ளிரவு 2 மணி வரை இது தொடர்ந்தது. இடையில் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து அவரை நீக்கிய தகவல், ஓ.பி.எஸ் இல்லத்தில் இருந்தவர்களுக்கு வந்தது. ‘‘அம்மா பேருல புதுக்கட்சி தொடங்குங்க. நீங்க அந்த சசிகலாவை கட்சியைவிட்டு நீக்குங்க’’ என கோரஸாகப் பலர் கொந்தளித்தார்கள்.

“அம்மாதான் என்னைப் பொருளாளர் பதவிக்கு நியமித்தார். என்னை யாரும் அந்தப் பதவியில் இருந்து நீக்க முடியாது” என பன்னீர் பதில் தந்தபோது, அவர் இல்லத்தில் ராஜ்யசபா எம்.பி மைத்ரேயன், பி.ஜே.பி-யின் எஸ்.வி.சேகர், த.மா.கா இளைஞர் அணித் தலைவர் யுவராஜ் என சிலர் இருந்தனர். இரவு 2 மணிக்கு ஓ.பி.எஸ் தூங்கப்போகிறார் என்ற தகவலை அவரது உதவியாளர் வெளியில் காத்திருப்பவர்களிடம் சொன்னார். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அரை மனதோடு கலைய ஆரம்பித்தார்கள்.

அந்த இரவில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பன்னீர் நிம்மதியாகத் தூங்கியிருக்கக்கூடும்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: மீ.நிவேதன், தே.அசோக்குமார்