Published:Updated:

கடற்கரைச் சாலை... காவலில் எம்.எல்.ஏ-க்கள்!

சசிகலா
News
சசிகலா

போயஸ் கார்டன் - அ.தி.மு.க தலைமை அலுவலகம்

‘‘நான் சொன்னது வெறும் 10 சதவிகிதம் தான். சொல்லாதது 90 சதவிகிதம் மிச்சமிருக்கிறது’’- பத்திரிகையாளர்கள் முன் பன்னீர்செல்வம் உதிர்த்த இந்த ‘பஞ்ச்’ சமூக வலைதளங்களில் ஹிட்டடிக்கிறது என்றால், சசிகலா வட்டாரத்தையோ ஹீட்டாக்கியிருக்கிறது.

மெரினாவில் ஜெயலலிதா சமாதியின் முன்பு, 40 நிமிடங்களுக்கு மேலாக முதல்வர் பன்னீர்செல்வம் மௌன அஞ்சலி செலுத்தியபோதே... ‘ஏதோ நடக்கப்போகிறது’ என்ற உள்ளுணர்வு மக்கள் மனதில் அலையடிக்க ஆரம்பித்தது. அதன்படியே மௌனம் கலைத்த பன்னீர்செல்வம், ‘‘ராஜினாமா செய்யச் சொல்லி என்னை வற்புறுத்திக் கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். முதல்வர் என்றுகூட பாராமல் அவமானப்படுத்தினார்கள்’’ என்று சசிகலா தரப்புக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போக... உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்துபோனது போயஸ் கார்டன்.

கடற்கரைச் சாலை... காவலில் எம்.எல்.ஏ-க்கள்!

சமாதியின் முன் மௌன அஞ்சலி செலுத்திய  நேரத்திலேயே, அ.தி.மு.க-வின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு போயஸ் கார்டனில் இருந்து ‘எச்சரிக்கைத் தகவல்கள்’ கொடுக்கப்பட்டன. பின், பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களிடம் பேச ஆரம்பித்த சில நிமிடங்களில்... அதிர்ச்சிக்குள்ளான கார்டன் வட்டாரம், சுதாரித்துக்கொண்டு பரபரப்பாகச் செயல்பட ஆரம்பித்தது.  போயஸ் கார்டனில் பாதுகாப்புக்காக இரவு 10 மணிவரை ஒரு சில காவலர்களே இருந்துவந்த நிலையில், 10.30 மணியளவில் அதிக அளவில் காவலர்கள் குவிக்கப்பட்டு... போயஸ் கார்டன் செல்லும் சாலைகள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டன. சரியாக இரவு 10.40-க்கு அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் கார்டனுக்குள் வரத் தொடங்கினார்கள். ‘பன்னீர் வீட்டு வாசலில் தொண்டர்கள் அதிகம் இருக்கிறார்கள். போயஸ் கார்டனில் தொண்டர்கள் இல்லை’ என தகவல் பரவியதும் அவசரமாக தொண்டர்களை இறக்குமதி செய்ததும் நடந்தது.

ஆரம்பத்தில் கோகுல இந்திரா, செந்தில் பாலாஜி, வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, சபாநாயகர் தனபால் ஆகியோர் வந்துசேர்ந்தனர். அதன்பின் இரவு 11.00 மணியிலிருந்து நள்ளிரவு 12.30 மணிவரை வரிசையாக வந்துசேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளால் கார்டன் திமிலோகப்பட்டது. பன்னீர் செல்வத்துக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினார்கள் சசிகலா ஆதரவாளர்கள். அப்போது அங்குவந்த எம்.எல்.ஏ வெற்றிவேல், கார் கண்ணாடியை இறக்கிவிட்டு... ‘‘என்னங்கடா! சும்மா கத்திக்கிட்டு இருக்கீங்க... அவன் கொடும்பாவியை எரிங்கடா’’ என்று சொல்ல... அதற்கு சசிகலா ஆதரவாளர் ஒருவர், ‘‘கொடும்பாவி எரிச்சா மட்டும் பத்தாது... வேற ஏதாவது பண்ணணும்’’ என்றார். வெற்றிவேல், ‘‘போங்கடா... எதையாவது செய்யுங்க’’ என்று உத்தரவிட்டபடியே அங்கிருந்து விரைந்தார்.

சசிகலா ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் பெரும்பாலானோர் கார்டனுக்கு வந்தவுடன் அவசர அவசரமாகக் கூட்டம் நடத்தப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பொருளாளர் பதவி பறிக்கப்பட்ட செய்தி அறிவிக்கப்பட்டதும் சசிகலாவின் ஆதரவாளர்கள் சந்தோஷத்தில் குதித்தனர். நள்ளிரவு 1.00 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு கோபத்துடன் வீட்டுக்குள் சென்றார் சசிகலா. நள்ளிரவு 1.30 மணிக்குப் பிறகு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கார்டனை விட்டு கனத்த முகத்துடன் வெளியேற ஆரம்பித்தனர்.

‘8-ம் தேதி காலை சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தலைமைக் கழகத்தில் தொடங்கும்’ என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 10.30 மணியைக் கடந்தும் எம்.எல்.ஏ-க்கள் யாரும் வராமல் அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெறிச்சோடியே காணப்பட்டது. காலை 11 மணியில் இருந்து கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்தன. ஒரே காரில் 6 எம்.எல்.ஏ-க்கள் வரையிலும் வந்திருப்பதாக சொல்லிக்கொண்டனர். ஏனெனில் வந்த கார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கடற்கரைச் சாலை... காவலில் எம்.எல்.ஏ-க்கள்!

அ.தி.மு.க. தலைமைக் கழக வாசலில் ஐவர் அணி போல, கரைவேட்டிகள் ஆளாளுக்கு கருத்துகளை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தனர். அதில் காக்கிகளும் மப்டியில் கலந்து கதை சொன்னார்கள்.

“இரவு முழுவதும் கார்டனில் தூக்கம் இல்லாமல் இருந்து காலையில்தான் எல்லோரும் போனார்கள். குளித்து முடித்து அவர்கள் திரும்பியதுமே கூட்டம் தொடங்கிவிடும். நீங்களே பாருங்களேன். கூட்டம் முடிந்ததும் 134 எம்.எல்.ஏ-க்களும் சந்தோஷமாக வெளியே வருவார்கள்’’ என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.

அதன்பின்னர் நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் இரண்டு பக்க அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு உருக்கமாகவும், உறுதி காட்டியும் வாசித்துள்ளார் சசிகலா. அதில், ‘‘இத்தனைக் காலம் அம்மாவுக்காக வாழ்ந்தேன். இனி அம்மா அவர்களின் கனவுகளுக்காக வாழ்வேன்’’ என்ற வரிகளுக்கு மட்டும் அதிக அழுத்தம் கொடுத்து வாசித்துள்ளார்.

பிற்பகல் இரண்டு மணிக்கு எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் முடிவுக்கு வந்தது. இறுகிய முகத்துடன் தலைமைக் கழகத்திலிருந்து வெளியேறினார் சசிகலா. ‘‘சின்னம்மா, எங்கள் முதல்வரம்மா’’ என்ற குரல் வந்த திசை நோக்கிக்கூட கழுத்தைத் திருப்பவில்லை. கார், கார்டன் நோக்கிப் பறந்தது. கூட்டம் முடிந்ததும், வெளியே வந்த எம்.எல்.ஏ-க்களை ஊடகத்தினர் படம் பிடிக்காத அளவுக்கு ‘சிறப்பான ஏற்பாடுகள்’ செய்யப்பட்டிருந்தன.

தயார் நிலையில் நின்றிருந்த பேருந்துகளில் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஏற்றப்பட்டனர். அவர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்த அந்தப் பேருந்துகள், கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னையைக் கடந்து பயணிக்க ஆரம்பித்தன.

- ந.பா.சேதுராமன், ஜெ.அன்பரசன்
படங்கள்: சு.குமரேசன், பா.காளிமுத்து