Published:Updated:

“ ‘மன்னார்குடி மாஃபியா’னு சொல்லாதீங்க!” - மன்றாடும் மன்னை மக்கள்

“ ‘மன்னார்குடி மாஃபியா’னு சொல்லாதீங்க!” - மன்றாடும் மன்னை மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
“ ‘மன்னார்குடி மாஃபியா’னு சொல்லாதீங்க!” - மன்றாடும் மன்னை மக்கள்

“ ‘மன்னார்குடி மாஃபியா’னு சொல்லாதீங்க!” - மன்றாடும் மன்னை மக்கள்

திய நேர வெயிலின் சோம்பலோடு, சத்தம் ஏதுமின்றி அமைதியாகவே இருக்கிறது மன்னார்குடி. ஒன்றிரண்டு பேனர்களைத் தவிர தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியல் சதுரங்கத்துக்கான எந்த முகாந்திர சாயலும் இன்றி மஞ்சள் ஒளியில் மிளிர்கிறது ராஜகோபால சுவாமி கோயில்.

“ ‘மன்னார்குடி மாஃபியா’னு சொல்லாதீங்க!” - மன்றாடும் மன்னை மக்கள்

திவாகரன் வீட்டின் முன்பும் சரி, அ.தி.மு.க நிர்வாகிகள், முக்கியப் புள்ளிகள் வீட்டின் வெளியிலும் சரி எந்தவொரு கூட்டமும் இல்லாமல் வெறிச்சோடிப்போய் கிடக்கின்றது. தமிழகத்தையும், அ.தி.மு.க-வையும் கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் ‘மன்னார்குடி’ கும்பலின் சொந்த ஊரில் நடப்பது தி.மு.க ஆட்சி. ஆனால், அந்தக் கட்சியும்கூட அங்கு ஆர்ப்பாட்டமின்றி அடங்கிக் கிடப்பதுதான் வியப்பிலும் வியப்பு.

சாலையில் நடந்து செல்லும் யாரிடமாவது ‘சின்னம்மா முதல்வர் ஆயிடுவாங்களா?’ என்று கேட்டால், ‘போய் பொழப்பைப் பாருங்கப்பு’ என்பதுதான் பதிலாக வருகிறது. ‘மன்னார்குடி குடும்பம்’ என்கிற அடைமொழியுடன் தமிழக அரசியலை ஆட்டிப் படைக்கும் இந்தக் குடும்பத்துக்கு, சொந்த ஊரில் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு ரவுண்டு வந்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“ ‘மன்னார்குடி மாஃபியா’னு சொல்லாதீங்க!” - மன்றாடும் மன்னை மக்கள்

யாரிடம் சென்று கேட்டாலும் முதல் பதிலாக வருவது, `‘பத்திரிகைக்காரவுகளா? தயவுசெஞ்சு போட்டோ, கீட்டோவோ, பேரோ போட்றாதீக. உயிரோட கொளுத்தக்கூட தயங்கமாட்டாங்க’’ என்பதுதான். அந்த அளவுக்கு பயத்தின் ஊடே கரைந்து போய் கிடக்கிறார்கள் சாமன்ய மக்கள். பெண் களிடமோ சுத்தமாகவே வசவு மொழிகள்தான். ‘மன்னார்குடி குடும்பம்’ என்ற சொல்லையே அவர்கள் வெறுக்கிறார்கள்.

`‘ஜெயலலிதா முகத்தை ஒருதடவை காட்டியிருந்தாக்கூட நாங்க பேசாம இருந்துருப்போம். சசிகலாவையும் போனாப்போகுதுனு ஆதரிச்சுருப்போம். ஆனா, இவங்க அவங்களை பார்க்கவே விடாம செஞ்சதும், ஜெயலலிதா மரணத்துக்கு அப்புறம், அந்த ஈரம் காயறதுக்குள்ள இவங்க ஆடற ஆட்டமும் எங்களுக்கே சந்தேகத்தை உண்டு பண்ணுது. அதுவும் மன்னார்குடியில் இருந்து அங்கபோய் சப்போர்ட் டுக்கு இருக்கற அடிபொடிகளெல்லாம் ரொம்ப பாவம். அந்தக் குடும்பமே எச்சிக் கையால் காக்காவைக் கூட விரட்டாது. ஏதோ ஜெயலலிதா வளர்ப்பில் இருந்த ஒண்ணு, ரெண்டு பேர் மட்டும் கொஞ்சம் இரக்க மனசு கொண்டவங்க’’ என்றார் பெயர் கூற விரும்பாத ஒரு ஆசிரியை.

“ ‘மன்னார்குடி மாஃபியா’னு சொல்லாதீங்க!” - மன்றாடும் மன்னை மக்கள்

`‘சசிகலா எங்க ஊரா இருக்கலாம். அவங்க பொம்பளையா இருக்கலாம். அதுக்காக நாங்க அவங்களை ஆதரிச்சுடணுமா? ஜெயலலிதா எங்களுக்கெல்லாம் தெய்வம்னு எல்லாம் சொல்ல மாட்டோம். ஆனா, ஒரு பொண்ணா எத்தனையோ இடர்பாடுகளைத் தாண்டி அரசியலில் ஒரு தனி இடத்தைப் பிடிச்சவங்க. அவங்க கூட இருந்து கவனிச்சுகிட்ட வரைக்கும் சரி. மத்தபடி அரியணையைப் பிடிக்க நினைக்கறதும் ஜெயலலிதாவின் தோழி என்பதாலேயே முதல்வராவேன் என்பதும் நல்லாவாங்க இருக்கு?’’ கோயிலைவிட்டு வெளியில் வந்த ஒரு பெண்கள் கோஷ்டி நம்மையே திரும்பிக் கேள்வி கேட்கிறது.

“ ‘மன்னார்குடி மாஃபியா’னு சொல்லாதீங்க!” - மன்றாடும் மன்னை மக்கள்

‘`இந்த பாருங்க... இன்னொரு தடவை ‘மன்னார்குடி குடும்பம்’னு எழுதினீங்கனா நல்லாருக்காது பார்த்துக்கங்க. ஏங்க இங்க இருக்கற மத்தவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா? எப்போ பார்த்தாலும் மன்னார்குடி கோஷ்டி... மன்னார்குடி மாஃபியானு அடைமொழி கொடுத்துகிட்டு... நாங்களாம் பாவங்க. எங்களோட அன்றாட பொழைப்பை நாங்களே உழைச்சு, சம்பாதிச்சு ஓட்டிக்கிறோம். `மன்னார்குடி குடும்பம்’னு நீங்க சொல்லிடறதால தமிழ்நாட்டில் இருந்து பிரிச்சு எங்களுக்கு மட்டும் தனியா நல்லது செஞ்சுட போறாங்களா என்ன? இல்லை, நாங்க எல்லாரும் வீடு, வாசல்னு ஏகபோகமா வாழ்ந்துகிட்டு இருக்கோம்கறது உங்க நினைப்பா? மன்னார்குடி இங்கேயே இருக்கற  மக்களுக்கானது. தமிழ்நாடு எப்படி அவங்களுக்கு சொந்தமில்லையோ அப்படித்தான் மன்னார்குடியும். இனிமேலாவது ‘மன்னார்குடி குடும்பம்’னு அவங்களைக் குறிப்பிடாதீங்க.’’ -கேள்வியைக் கேட்டதும், போகிற போக்கில் விளாசித் தள்ளிவிட்டுச் சென்றார் ஒரு பெரியவர்.

ஒரு குடும்பத்தைச் சாடுவதற்கு ஓர் ஊரையே பழிப்பது சரியில்லைதான்.

- விஜயலட்சுமி