Published:Updated:

வரலாறு வாழ்த்தும் நீதியரசர்களே!

குன்கா
குன்கா

ஒரே அமர்வில் இருக்கும் இவர்கள் இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு

வரலாறு வாழ்த்தும் நீதியரசர்களே!

ரே வழக்குதான். ஒரே மாதிரி தீர்ப்புதான். ஆனால், கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கியபோது, அ.தி.மு.க-வினர் பிரார்த்தனை மனநிலைக்கு வந்தார்கள். அதே தீர்ப்பை இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகிய இருவரும் உறுதி செய்யும்போது, அ.தி.மு.க-வில் ஒரு தரப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுகிறார்கள். காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது!

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர்கள். ஒரே அமர்வில் இருக்கும் இவர்கள் இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரின் குடும்பங்களும் வழக்கறிஞர்களால் நிறைந்தது. அமிதவா ராயின் மாமனார் சலில் குமார் தத்தா, கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். பினாகி சந்திர கோஷின் தந்தை சம்பு சந்திர கோஷ், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர்.

வரலாறு வாழ்த்தும் நீதியரசர்களே!

அசாம் மாநிலம் திப்ருகாரைச் சேர்ந்தவர், அமிதவா ராய். தற்போது 63 வயதாகும் ராய், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவரின் தந்தை அணடி பூஷன் ராய், மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.  திப்ருகார் பல்கலைக்கழகத்தில் 1976-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த ராய், அதே ஆண்டில் அசாம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய பார் கவுன்சில்களில் வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்டார். 1981-ல் கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில் பணியை ஆரம்பித்தார். பிறகு, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், கவுஹாத்தி மற்றும் மாவட்ட சார்பு நீதிமன்றங்களில் பணியாற்றிய ராய் சிவில், கிரிமினல், அரசியல் சாசனம், தொழிலாளர், வருவாய் ஆகியவை தொடர்பான வழக்குகளில் ஆஜரானார். சிவில், கிரிமினல் விவகாரங்களில் நுணுக்கங்களை அறிந்தவர். 1991 முதல் 1996 வரை கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில், அருணாச்சல பிரதேச மாநில அரசின் மூத்த அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1999-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி மூத்த வழக்கறிஞராக உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டார். 2002 பிப்ரவரி 4-ம் தேதி கவுஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி ஆனார். 2013 ஜனவரி 2-ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆனார். 2015 பிப்ரவரியில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். நீதிபதிகள் அமிதவா ராய், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் ஒலிக்கப்பட வேண்டும், அப்போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும்’ என்ற உத்தரவை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு வாழ்த்தும் நீதியரசர்களே!

பினாகி சந்திர கோஷ், கொல்கத்தாவைச் சேர்ந்தவர். இவருக்கு 64 வயதாகிறது. இவரும், வழக்கறிஞர்கள் நிறைந்த பாரம்பர்யமான குடும்பம் ஒன்றில் பிறந்தவர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த ராய், 1976-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்டார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த இவர், சிவில், வர்த்தகம், அரசியல் சாசனம், நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான வழக்குகளில் ஆஜராகிவந்தார். 1997 ஜூலை 17-ல் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், பின்னர் அங்கு 2012-ல் தலைமை நீதிபதி ஆனார். 2013 மார்ச் 8-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் மே 27-ம் தேதி ஓய்வுபெற உள்ளார்.

நீதித்துறை வரலாற்றில் இவர்களின் பெயர்களும், இவர்கள் வழங்கிய தீர்ப்புகளும் நிலைத்து நிற்கும்.

- ஆ.பழனியப்பன்

‘குட்மேன்’ குன்ஹா!

பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா சொன்ன தீர்ப்பு, இப்போது சுப்ரீம் கோர்ட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தி.மு.க-வால் 21 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, இந்திய அரசியல் களத்தையே புரட்டிப் போடும்விதமாக அமைந்திருக்கிறது.

இந்த வழக்கை நீதிபதி குன்ஹா கையாண்ட விதம் அபாரமானது. நீதிமன்றத்தில், ஒவ்வொரு நாள் வழக்கு விசாரணை தொடங்கும்போதும் வழக்கறிஞர்களைப் பார்த்து அவர் ஒரு வாசகம் சொல்வார்: ‘‘நீங்களும் நானும் நீதியை நிலைநாட்டவே இங்கே கூடியிருக்கிறோம்.’’

அங்கு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு விசாரணை நடக்கும் ஒவ்வொரு நாளும் அ.தி.மு.க வழக்கறிஞர்கள் 30- 40 பேர் திமுதிமுவெனக் கூடுவர். சத்தம் போடுவர். வழக்கறிஞர்களின் நோக்கம், விவாதத்தை இழுக்கடித்து, வழக்கைத் தாமதப்படுத்துவதாக இருக்கும்... ஆனால், அதற்கான வாய்ப்பைத் தராமல் அமைதிகாப்பார் குன்ஹா. வழக்கின் விவரங்களை வழக்கறிஞர்களிடமே விளக்குமாறு கேட்டு நேரத்தை வீணடிக்காமல், முழுவிவரத்தையும் அவர் படித்து, அத்துப்படியாகத்தான் தன் இருக்கையில் வந்து அமர்வார். அதனால்தான், கீழமை நீதிமன்றத்தில் அந்த வழக்கு ஓர் ஆண்டுக்குள் முடிவுக்கு வந்தது.

மிகமிக எளிமையானவர் குன்ஹா. அவருடைய மகள் திருமணம் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அத்தனை எளிமையாக நடந்தது. இந்த வழக்கு மேல்முறையீட்டுக்குச் சென்றபோது சர்ச்சைக்குரிய தீர்ப்பு தந்த குமாரசாமியும் திருமணத்துக்கு வந்திருந்தார்.

குன்ஹா மாதிரி சிலபேர் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது!

- வீ.கே.ரமேஷ்

அடுத்த கட்டுரைக்கு