Published:Updated:

புளூ பார்டர் சேலைகள்... தட்டு... டம்ளர்... சொம்பு... போர்வை!

சசிகலா
News
சசிகலா

சிறை அத்தியாயம் ஸ்டார்ட்ஸ்!

பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலாவும் இளவரசியும் ஆஜரானது முதல், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டது வரையிலான பரபரப்பு நிமிடங்களின் பதிவு இது!

 ‘சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் சரணடைகிறார்கள்’ என்ற தகவல் வெளியானவுடன், பிப்ரவரி 15-ம் தேதி காலையிலேயே பெங்களூரு பரபரப்பானது. அந்த நீதிமன்றத்தில்தான், 2004-ம் ஆண்டிலிருந்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வந்தது. அன்றைய தினம், காலை 10 மணிக்கு பதிவாளர் ராதாகிருஷ்ணாவை, சசி தரப்பு வழக்கறிஞர் குலசேகரன் சந்தித்து, “சசிகலாவும், இளவரசியும் இன்று சரணடைகிறார்கள்” என்று தெரிவித்தார். அதையடுத்து, 48-வது நீதிமன்ற அறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அந்த அறையின் நீதிபதி அஷ்வத நாராயணாவுக்கும் இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது. மீடியாவினர் குவிந்ததால், நீதிமன்றத்துக்கு வெளியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அதனால், நீதிமன்றப் பதிவாளர் ராதாகிருஷ்ணா, ‘இந்த வழக்கு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்தார். அதையடுத்து, அனைவரும் அங்கு சென்றார்கள். மதியம் ஒரு மணிக்கு மேல் கர்நாடக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். சிறை வளாகத்துக்குள் இருந்தவர்களை வெளியேற்றினார்கள்.

 பிற்பகல் மூன்று மணிக்கு நீதிபதியும், நீதிமன்ற ஊழியர்களும் வந்தார்கள். சரியாக 5:15 மணிக்கு சசிகலாவும், இளவரசியும் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்குள் இருந்த கோர்ட்டுக்குள் சென்றனர். நீதிபதி அப்போது சேம்பருக்குள் இருந்ததால், கோர்ட் அறையையொட்டிய வராண்டாவில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அவர்கள் இருவரும் அமர்ந்தனர். அவர்கள் வந்த செய்தி, கோர்ட் ஊழியர்கள் மூலம் நீதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டது. 10 நிமிடங்களுக்குப்பின், நீதிபதி அஷ்வத நாராயணா, தன் இருக்கையில் வந்து அமர்ந்தார். கோர்ட் கிளார்க் யோகானந்த் எழுந்து நின்று வழக்கு எண்ணைச் சொல்லி, “குற்றவாளிகள் சசிகலா, இளவரசி’’ எனச் சத்தமாகக் கூப்பிட, அவர்கள் இருவரும் நீதிபதியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டவாறே கூண்டுக்குள் ஏறி நின்றார்கள்.

புளூ பார்டர் சேலைகள்... தட்டு... டம்ளர்... சொம்பு... போர்வை!

நீதிபதி: “உச்ச நீதிமன்றத்தில் உங்கள் வழக்கின் மீது தீர்ப்பு வழங்கியது பற்றி உங்களுக்குத் தெரியுமா?’’

சசிகலா: (தலையாட்டினார்)

சசி தரப்பு வழக்கறிஞர் குலசேகரன்: “தெரியும். அதனால்தான் இன்று சரண்டராகி இருக்கிறோம்.”

நீதிபதி: (சசிகலாவைப் பார்த்து) “உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?’’

சசிகலா: (தலையாட்டிக்கொண்டே) “தெரியும்.’’

நீதிபதி: (சரண்டர் ஃபார்மில் சசிகலா, இளவரசியிடம் நீதிபதி கையொப்பம் பெற்றார். கோர்ட் கிளார்க் யோகானந்திடம், சிறைத்துறைக்குக் கொடுக்க வேண்டிய படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு சொன்னார். பிறகு, சிறைத்துறை பெண் இன்ஸ்பெக்டர் அஜ்மலிடம்) “இவர்களை நீங்கள் கஸ்டடி எடுத்துக்கொள்ளுங்கள்.’’

இன்ஸ்பெக்டர் அஜ்மல்: “ஓ.கே சார்.’’

அதையடுத்து சசிகலா, இளவரசி ஆகியோரின் சரண்டர் ஃபார்மில் உள்ள அங்க அடையாளங்களைச் சரிபார்த்ததோடு... அவர்களுடைய உயரம், எடை, ரத்த வகை முதலிய பரிசோதனைகளைச் சிறைத்துறை மருத்துவர்கள் செய்தனர். இருவருக்கும் ரத்த அழுத்தம் இயல்பாக இருந்தது. ஆனாலும், இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்ததால், மீண்டும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கறிஞர் குலசேகரன்: “இவர்கள் இருவரும் சர்க்கரை நோயாளிகளாக இருப்பதால், வெளியில் இருந்து மாத்திரைகள் கொடுக்க அனுமதிக்க வேண்டும்.’’

நீதிபதி:
“இதை சிறைத் துறை டாக்டர்கள் பார்த்து பரிசீலனை செய்வார்கள்.’’

வழக்கறிஞர் குலசேகரன்: “இவர்கள் வருமான வரிக் கட்டுவதால், ஏ கிளாஸ் அறை ஒதுக்கித்தர வேண்டும்.’’

நீதிபதி:
“சிறைத்துறைக்கு என்று விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை சிறைத்துறை அதிகாரிகள் பின்பற்றுவார்கள். என்னிடம் வைத்த இந்தக் கோரிக்கையை சிறைத்துறை கண்காணிப் பாளரிடமும் வையுங்கள். அவர் செய்து தருவார். இன்னொரு குற்றவாளி எங்கே? பெண்களாகிய நீங்கள் வந்துவிட்டீர்கள். அவர் ஏன் இன்னும் வரவில்லை?’’

வழக்கறிஞர் மூர்த்தி ராவ்:
“சுதாகரன் வந்துகொண்டிருக்கிறார். வருவதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகும், மை லார்ட்.’’

நீதிபதி: “எவ்வளவு நேரம் ஆகும்?’’

வழக்கறிஞர் மூர்த்தி ராவ்: “முக்கால் மணி நேரம் ஆகும்.’’

நீதிபதி:
‘‘ஓகே, வெயிட் பண்றேன். 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை ஒவ்வொருவரும் இப்போது கட்டுகிறீர்களா?’’

வழக்கறிஞர் குலசேகரன்: “இன்றைய தேதியில் கட்டுவதற்கில்லை. சசிகலா, இளவரசி தங்கள் உறவினர்களைப் பார்த்துப் பேசுவதற்கு 15 நிமிடங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.’’

நீதிபதி: “ஓகே... பேசிக்கொள்ளட்டும்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
புளூ பார்டர் சேலைகள்... தட்டு... டம்ளர்... சொம்பு... போர்வை!

அதையடுத்து சசிகலாவும், இளவரசியும் கோர்ட் ஹாலை விட்டு வெளியே வந்தார்கள். அவர்களைச் சுற்றி சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனின் மகன் டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார், இளவரசின் மகன் விவேக் மற்றும் சிலர் கண்கலங்கியபடி நின்றனர். அவர்களுடன் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் இருந்தார். அந்தச் சமயத்தில், சசியின் கண்களில் இருந்தும் கண்ணீர் கசியத் தொடங்கியது. கண்ணீரைத் துடைத்தபடியே அங்கிருந்தவர்களிடம் பேசினார்.  

இந்த கும்பலில் ஒட்டாமல், ஒரு ஓரமாக நின்று கவனித்துக்கொண்டிருந்தார், சசிகலாவின் கணவர் ம.நடராசன். சசிகலாவும் நடராசனும் சமீப நாட்களில் பொதுவெளியில் சந்தித்துக்கொண்டது அரிது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்படி ஒரு சந்திப்பு சிறை வளாகத்தில் நிகழ்ந்தது. பொங்கி வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

சிறைத்துறை பெண் இன்ஸ்பெக்டர் அஜ்மல், மாலை 6:20 மணிக்கு சசிகலாவிடம் வந்தார். ‘‘வாங்க கிளம்பலாம். கார் எடுத்து வரச் சொல்லவா?’’ என்றார். அதற்கு, ‘‘வேண்டாம்... நடந்தே வருகிறேன்’’ என்றார் சசிகலா. நீதிமன்றத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள சிறையை நோக்கி, சசிகலாவும் இளவரசியும் சோகத்துடன் நடந்துசென்றனர். சிறைக்கதவு திறக்கப்பட்டதும், இருவரும் குனிந்தபடி சிறைக்குள் சென்றனர்.

 இதையடுத்து 6:50 மணிக்கு சுதாகரன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிபதி: “உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது பற்றி உங்களுக்குத் தெரியுமா?’’

சுதாகரனின் வழக்கறிஞர் மூர்த்தி ராவ்: “தெரியும்.’’

நீதிபதி: “ஏன் இந்தக் காலதாமதம்?’’

மூர்த்தி ராவ்: “கார் டிரைவருக்கு நீதிமன்றத்துக்கான வழி தெரியாமல் மாறிச்சென்றுவிட்டதால் காலதாமதம் ஏற்பட்டது.’’

நீதிபதி: “ஓகே. (அருகில் இருந்த இன்ஸ்பெக்டர் கிஷோரைப் பார்த்து) இவரை கஸ்டடி எடுத்துக்கொள்ளுங்கள்.’’

கிஷோர்:
“ஓகே மை லார்டு.’’

அதையடுத்து சுதாகரனுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இரவு 7:05 மணிக்கு அவரை ஆண்கள் சிறைக்குள் அனுப்பினார்கள். 7:15 மணிக்கு நீதிபதியும், நீதிமன்ற ஊழியர்களும் கிளம்பிச் சென்றார்கள். அங்கிருந்த காவல் துறையினர், சிறை வளாகத்துக்குள் இருந்தவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

சசிகலாவுக்கும் இளவரசிக்கும் கைதி எண்கள் தரப்பட்டன. சசிகலாவின் கைதி எண்: 9,234. இளவரசியின் கைதி எண்: 9,235. இவர்கள் இருவருக்கும் வெள்ளை நிறத்தில் நேவி புளூ பார்டர் வைத்த சேலைகள் (தலா மூன்று) வழங்கப்பட்டன. ஒரு தட்டு, டம்ளர், குவளை, போர்வை போன்ற பொருள்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. சுதாகரனுக்கு, 9,236 என்ற கைதி எண் தரப்பட்டு, கைதிகளுக்கான மூன்று செட் ஜிப்பாக்களும் பேன்ட்டும், ஒரு தட்டு, டம்ளர், போர்வையும் வழங்கப்பட்டன. கடுங்காவல் தண்டனை விதிக்கப்படவில்லை என்பதால், இவர்கள் யாரும் வேலைசெய்ய வேண்டிய அவசியமில்லை. விரும்பினால் செய்யலாம்.

- வீ.கே.ரமேஷ்
படம்: க.தனசேகரன்

‘ஏ கிளாஸ்’ வசதிகள்!

டேபிள், கட்டில், டி.வி., மின் விசிறி இருக்கும். வாரத்தில் இரண்டு நாட்களுக்கு அசைவ உணவுகள் வழங்கப்படும். காலை 6:30, மதியம் 11:30, மாலை 6:30 என மூன்று வேளைகள் உணவு வழங்கப்படும். மதிய உணவில் பொரியல் இடம்பெறும். மாலை நான்கு மணிக்கு ஒரு டீ கொடுக்கப்படும். ஒருவேளை மட்டும் சப்பாத்தி கிடைக்கும்.