Published:Updated:

“இனி சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பார்கள்!”

“இனி சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இனி சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பார்கள்!”

அரசியல் வாய்ஸ் கொடுக்கும் ஸ்டார்ஸ்!

மெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பையே எதிர்த்து, வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள் ஹாலிவுட் நடிகைகள். பிரதமர் மோடியை விமர்சித்து துணிச்சலாகக் கருத்து சொல்கிறார்கள் பாலிவுட் நடிகர்கள். தமிழகத்தில் அப்படி ஒரு விஷயத்தை இதுவரை பார்க்க முடிந்ததில்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாபெரும் ஆளுமைகளாக வலம்வந்த தமிழக அரசியலில், அதற்கான இடமும் இருந்ததில்லை. ‘‘கலை நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துறாங்க’’ எனக் கருணாநிதியை வைத்துக்கொண்டு ஒரு மேடையில் சொல்லிவிட்டு, அஜித் பட்ட பாட்டை எல்லோரும் அறிவார்கள்.

ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

“இனி சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பார்கள்!”

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்களும், மாணவர்களும் கிளர்ந்தெழுந்தபோதும், அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகக் காவல்துறையினர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டபோதும், சினிமா பிரபலங்கள் வெளிப்படையாகக் கருத்துகளைத் தெரிவித்தனர். அ.தி.மு.க-வுக்குள் ஓ.பி.எஸ் - சசிகலா பஞ்சாயத்து ஆரம்பமான பிறகு, அரசியல்வாதிகளுக்கு நிகராகக் கருத்துகளை வெளியிட்டனர் தமிழ் சினிமா நட்சத்திரங்கள்.  இந்த விவகாரம் உச்சத்தை அடைந்தபோது, அதுபற்றி கருத்துகளைத் தெரிவிக்குமாறு தன் சக நடிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “சத்யராஜ்... ‘பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம, இந்த நேரத்துல ஒரு dubsmash ஆவது போட வேண்டாமா? நாம் முதலில் மனிதர், then only actor. மாதவன், தமிழ்நாட்டில் உள்ள பேட் பாலிடிக்ஸ் பற்றியும் சொல்லுங்க’’ என்று தெரிவித்திருந்தார். சசிகலா சிறை சென்ற நேரத்தில், கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

நடிகர் அர்விந்த்சாமியும் தன் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினார். “ஒரு சாதாரண மனிதரைப்போல உங்கள் கருத்துகளைச் சொல்லி வருகிறீர்கள். எதுக்கும் ஜாக்கிரதையாக இருங்கள்’’ என ஒருவர் ட்வீட் மூலம் அர்விந்த்சாமியை உஷார்படுத்த, “எனக்குள் எழுந்த சாதாரண கேள்வியைத்தான் கேட்கிறேன். இப்ப எனக்கு 46 வயசு. என் மனதில் உள்ளதைப் பேசும் நேரம் இது” என்று பளிச்சென அவர் பதில் கொடுத்தார். “தனியார் விடுதியில் ஜாலியாகப் பொழுதைக் கழிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஏராளமான காவல்துறையினர் விடுதியின் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது” என்று துணிச்சலுடன் சொன்னார் அர்விந்த்சாமி. நடிகர் மாதவன், “நம்பிக்கையையும், இயல்பு வாழ்க்கையும் திரும்ப வருவதற்கான நேரம். தமிழக அரசின் மீதுள்ள நம்பிக்கையை மீட்டெடுப்பதில் உறுதிகொள்ள வேண்டிய தருணம் இது” என ட்வீட் தட்டினார்.

இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று, கவிதைகளால் கருத்து தெரிவித்த இயக்குநரும் நடிகருமான பார்த்திபனிடம் கேட்டோம். “முன்பைவிட இப்போது மக்களின் விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டமே அதற்கு உதாரணம். நம் இளைஞர் கூட்டம், அரசியலுக்குள் புகுந்து ஒரு புரட்சியை உண்டாக்காதா என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் எனக்குள் இருக்கிறது. இந்த ஏக்கம் என் சக கலைஞர்கள் உட்பட பலருக்கும் இருக்கிறது. இப்போது, மரக்காணத்தில் உள்ள என் தோட்டத்துக்கு, கூவத்தூரைக் கடந்துதான் வந்தேன். அங்கு, நூற்றுக்கணக்கான போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் பணம் ஏன் இப்படி வீணடிக்கப்படுகிறது என்கிற வேதனை ஏற்பட்டது. அங்கே இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் மக்களுக்காக எதைச் சாதிக்கப் போகிறார்கள்?” என்று ஆதங்கத்துடன் பேசினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“இனி சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பார்கள்!”

திரைப்படக் கலைஞர் நாசர், “முன்பு, அரசியல் குறித்துப் பேசுவதற்கு பொதுமக்கள் அச்சப்பட்டனர். இப்போது, தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளையும் விமர்சனங்களையும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களில் பகிரங்கமாக  வெளிப்படுத்துகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்துக்குப் பிறகு, பெரிய அளவில் சமூக மாற்றம் நிகழ்ந்து உள்ளது.  தமிழகத்தில், எல்லா அரசியல்வாதிகளையும் கேள்வி கேட்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். இனிமேல், நாட்டில் குழப்பம் விளைவிக்கும் அரசியல்வாதிகளை, இளைஞர்களும் மாணவர்களும் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பார்கள்” என்றார்.

 இந்த மாற்றம் வரவேற்புக்குரியது. ஆனாலும், பெரும்பான்மையாக மக்கள் விவாதிக்கும் பிரச்னைகளில் மட்டுமே கருத்துச் சொல்வதுடன் இவர்கள் நின்றுவிடுகிறார்கள். அரியலூர் மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் சில கயவர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி மிகக்கொடூரமான முறையில், தலித் சிறுமி நந்தினி கொலைசெய்யப்பட்டதற்கு திரைத்துறையில் இருந்து குரல் கொடுத்தது கமல் போன்ற சிலர் மட்டும்தான். இதுபோன்ற எல்லா விஷயங்களுக்கும் இவர்கள் குரல் எழுப்ப வேண்டும். 

- எம்.குணா,  நா.சிபிச்சக்கரவர்த்தி