Published:Updated:

சாதி ஆணவம் தலைவிரித்து ஆட்டுவிக்கிறது! - எடப்பாடி சர்ச்சை-2

சாதி ஆணவம் தலைவிரித்து ஆட்டுவிக்கிறது! - எடப்பாடி சர்ச்சை-2
பிரீமியம் ஸ்டோரி
News
சாதி ஆணவம் தலைவிரித்து ஆட்டுவிக்கிறது! - எடப்பாடி சர்ச்சை-2

சாதி ஆணவம் தலைவிரித்து ஆட்டுவிக்கிறது! - எடப்பாடி சர்ச்சை-2

டப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ வைரலாக பரவியது. அதில் பழனிச்சாமி என்ற போலீஸ்காரர் பேசுகிறார்.

சாதி ஆணவம் தலைவிரித்து ஆட்டுவிக்கிறது! - எடப்பாடி சர்ச்சை-2

“நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் குடியிருந்தேன். அவரது அண்ணன் கோவிந்தன் என்கிற கோவிந்தராஜின் முன் பைக்கில் போனதற்காக என்னைக் கட்டி வைத்து அடித்தார். அந்த ஊரில் அவருடைய குடும்பத்தினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கேவலமாக நடத்துகிறார்கள். ஒரு போலீஸ்காரனான எனக்கே இந்த நிலைமையென்றால், அங்கு இருக்கும் சாதாரண மக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்” என்று உருக்கமாகப் பேசியிருந்தார்.

இதைப் பற்றி அறிவதற்காக சிலுவம்பாளையத்துக்குச் சென்றோம். அமைதியாக இருந்தது கிராமம். பலரும் அச்சத்துடன் பேச மறுத்தார்கள். பளிங்குக் கற்களைப் பரப்பிப் போட்டது போல வழுவழுவென இருக்கிறது, சாலை. அந்த சாலை ஓரத்தில் பழனிசாமியின் அண்ணன் கோவிந்தன் வீடு இருக்கிறது. அதற்குப் பின்புறத்தில் எடப்பாடி பழனிசாமியின் வீடு. பழனிசாமி வீட்டு கேட் முன்பு, சேர் போட்டு வயதான ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவர்தான், பழனிசாமியின் அம்மா. பக்கத்தில் ஒரு பெண் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தார். அவரிடம், பழனிசாமியின் அம்மா பெயரைக் கேட்டோம். அவர் பயந்தபடி ரகசியமான குரலில், ‘‘அதெல்லாம் சொல்லக்கூடாதுங்க. அம்மானுதான் கூப்பிடுவோம். கவுண்டரூட்டு ஆட்கள் பேரை   நாங்க சொல்லக் கூடாதுங்க’’ என்றார். ‘‘அமைச்சர் பேரையாவது சொல்லுவீங்களா?” என்று கேட்டால், ‘‘மஹும்! அதெப்படிங்க கவுண்டர் பேரைச்  சொல்றது?” என்றபடி அவசரமாக நம்மை விட்டு நகர்ந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சாதி ஆணவம் தலைவிரித்து ஆட்டுவிக்கிறது! - எடப்பாடி சர்ச்சை-2

அந்த வீடியோவை வெளியிட்ட போலீஸ்காரர் பழனிச்சாமியை தொடர்புகொண்டோம். “ஆமாம் சார். வீடியோவுல நான் சொன்னது அத்தனையும் உண்மை. அந்த சம்பவம் நடந்து ஒரு வருஷம் ஆகப் போகுது. நான் அப்பவே ஊரைவிட்டு வந்துட்டேன். நான் பொண்ணு கட்டுன ஊருதான் சிலுவம்பாளையம். நேரம் சரியில்லைனு ஆறு வருஷமா அங்கதான் தங்கியிருந்தேன். அங்க அமைச்சரோட அண்ணன் கோவிந்தனின் அடக்குமுறை ஓவருங்க. தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்க, வண்டியிலயோ சைக்கிள்லயோ அவுங்க வீட்டக் கடந்து போகும்போது கோவிந்தனை பார்த்துட்டா, டக்குனு இறங்கிடணும். அவருக்கு வணக்கம் வெச்சிட்டு, வண்டியைத் தள்ளிக்கிட்டு போய், அந்த வீட்டைக் கடந்துபோன பிறகுதான் வண்டியில ஏறணும். போலீஸ்காரன்னு கூட நினைக்காம,  நானும் அப்படித்தான் போய்க்கிட்டு இருந்தேன்.

என் பையன் ஒரு புல்லட் வாங்க ஆசைப்பட்டான். நானும் வாங்கிக் கொடுத்தேன். அத அவர் கண்ணு படும்படியா அவர் வீட்டுக்கிட்ட இறங்காம ஓட்டிக்கிட்டு இருந்திருக்கான். அதைப் பார்த்து மனுஷன் எரிச்சலாகியிருக்கார்.

சாதி ஆணவம் தலைவிரித்து ஆட்டுவிக்கிறது! - எடப்பாடி சர்ச்சை-2

மனசுக்குள்ளயே வெச்சிருந்தவர், ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு, ‘போலீஸ்காரன்னா பெரிய இவனாடா நீ...’னு கேவலமாத் திட்டி, அடி பிச்சு எடுத்துட்டாருங்க. என்னை அந்த ஊர்லயே இருக்கக் கூடாதுனு அடிச்சி விரட்டிட்டார். அங்க இருந்த என்னோட பொருள்களையும் எடுக்க விடல. ரொம்ப நாள் போராடி, ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதாங்க அதெல்லாம் எடுத்துட்டு வந்தேன். எடப்பாடி பழனிசாமி அப்படி கிடையாதுங்க. அவர் நல்லாத்தான் பழகுவார். ஆனா, அவுங்க அண்ணன் கோவிந்தன் சரியான சாதிவெறிப் பிடிச்ச ஆள். அந்த ஊர்ல அவரை எதிர்த்து யாருமே பேசமாட்டாங்க. பேசுனா அவுங்க அங்க இருக்க முடியாது. நான் உண்மையைச் சொல்றங்க. அதனால செத்தாலும் எனக்குக் கவலை இல்லை” என்று சொன்னார் போலீஸ்காரர் பழனிச்சாமி.

ஊர்க்காரர்கள் சிலரிடம் விசாரித்தோம், “இதெல்லாம் அப்போதிலிருந்தே இருக்கிற நடைமுறைங்க. கோவிந்தனை அமைச்சரால கூட அடக்க முடியாது. அதிகபட்சமா, ‘நீ இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா நானும் உன்னோட வீட்ல வந்து உட்கார்ந்துக்க வேண்டியதுதான்’னு சொல்வார். அவ்வளவுதான். கோவிந்தன் வெச்சதுதாங்க சட்டம். மக்களும் காலங்காலமா பழகிட்டதால, இது வெளில தெரியாது. அவுங்களாப் பார்த்து மரியாதைக் கொடுக்குற மாதிரி ஒரு தோரணை இருக்கும்” என்றனர்.

இதுபற்றி விளக்கம்பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமியின் அண்ணன் கோவிந்தன் என்கிற கோவிந்தராஜைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃபிலேயே இருந்தது. அவர் தரப்பு ஆட்களிடம் விசாரித்தால், ‘‘அதெல்லாம் உண்மை கிடையாதுங்க’’ என்பதோடு முடித்துக் கொள்கிறார்கள்.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: கே.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

இது எடப்பாடி ஸ்டைல்!

டப்பாடி பழனிசாமியின் அண்ணன் வெளிப்படையாக சாதி ஆதிக்கம் செய்கிறார் என்றால், இவர் அதிகாரத்தின் மூலமாக உள்ளுக்குள்ளாக சாதி ஆதிக்கம் செய்வார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ‘‘எடப்பாடி ஒன்றியத்தில் அதிகமான வன்னியர்கள் இருக்கிறார்கள். ஆனால், இங்கு இருக்கிற 11 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் எட்டு தலைவர்கள் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். வன்னியர்கள் பெருமளவில் இருந்தாலும் அவர்களைப் புறக்கணித்துவிடுவார்” என்று இவர்கள் புகார் வாசிக்கிறார்கள்.