Published:Updated:

சொத்து சேர்க்கவே ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்! - உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

சொத்து சேர்க்கவே  ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்! - உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!
பிரீமியம் ஸ்டோரி
News
சொத்து சேர்க்கவே ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்! - உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

சொத்து சேர்க்கவே ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்! - உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

நீதிமன்றத் தீர்ப்புகளில், எளிய மக்களுக்குப் புரியாத சட்ட வார்த்தைகளே அதிகம் இருக்கும். அலங்கார வார்த்தைகளுக்கு அதில் இடம் இருக்காது. உணர்ச்சிவசப்பட்டு நீதிபதிகள் கருத்து சொல்வதெல்லாம், அரிதான சம்பவங்கள். ஆனால், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் இந்த வழக்கங்கள் ஏதுமில்லை. 570 பக்கத் தீர்ப்பில், முதல் 563 பக்கங்களை நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகிய இருவரும் இணைந்து எழுதியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஏழு பக்க இணைப்பு ஒன்றைத் தனியாக எழுதியிருந்தார், அமிதவா ராய். 

‘‘வேதனையான அமைதியில் சில எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால் இந்த இணைப்பு’’ எனச் சொல்கிறார் அமிதவா ராய். ‘‘சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் சொத்து சேர்த்து, நிழலான நிறுவனங்களில் அவற்றைப் பதுக்கி வைக்கும் சதி நிகழ்ந்திருக்கிறது. பொது வாழ்வில் இருப்பவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இப்படி ஊழல் செய்யும்போது, அவர்களைத் தண்டிக்கவும், பதில் சொல்லவும் வைக்க வேண்டிய கடமை, இந்தச் சமூகத்துக்கும் நாட்டுக்கும் இருக்கிறது. ஊழலுக்கு எதிரான இந்தப் போரில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்க வேண்டும்’’ என உணர்ச்சி வசப்படுகிறார் ராய்.

சொத்து சேர்க்கவே  ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்! - உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

கீழமை நீதிமன்றங்கள் பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் பாராட்டைப் பெறுவது அபூர்வம், ஆனால், இந்தத் தீர்ப்பில் முழுக்கவே கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கிய மைக்கேல் டி குன்ஹாவைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள் நீதிபதிகள். ‘‘நுணுக்கமாகவும், புத்திசாலித்தனமாகவும், விழிப்பு உணர்வோடும், நியாயமாகவும் அவர் வழக்கைக் கையாண்டு இருக்கிறார்’’ என ஷொட்டு வைத்திருக்கும் நீதிபதிகள், மேல்முறையீட்டில் வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியைக் குட்டவும் தவறவில்லை. ‘சாட்சியங்களை சரியான சட்ட வழிமுறைப்படி புரிந்துகொண்டு பரிசீலிக்கத் தவறிவிட்டார்’ எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.  குன்ஹா, குமாரசாமி ஆகிய இருவரின் தீர்ப்பையும் ஒப்பிட்டு, எல்லா விஷயங்களிலுமே குன்ஹா தீர்ப்போடு ஒத்துப் போயிருக்கிறார்கள். அந்தப் பட்டியலே குன்ஹாவின் பாரபட்சமற்ற அணுகுமுறையையும் குமாரசாமியின் பிழைகளையும் உணர்த்தும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சொத்து சேர்க்கவே  ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்! - உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

ஜெயலலிதா முதல்வராக இருந்த ஐந்தாண்டு காலத்தில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் வருமானம், ரூ.9,91,05,094.75 என குன்ஹா கணக்கு போட்டிருந்தார். குமாரசாமி போட்ட கணக்கில் இந்த வருமானம், ரூ.34,76,65,654 என கிட்டத்தட்ட மூன்று மடங்குக்கும் அதிகமாக எகிறியிருந்தது. கடன்கள், பரிசுப்பொருட்கள், வாடகை வருமானம் என 10 விதமான வருமானங்களை குமாரசாமி புதிதாகச் சேர்த்திருந்தார். ‘‘கடன்களை எப்படி வருமானமாகக் காட்ட முடியும்?’’ என்பது அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் கேள்வி. வாங்கி, திரும்ப அடைத்துவிட்ட கடன்களையும் வருமானமாகக் காட்டியிருந்தார் குமாரசாமி. இதையெல்லாம் சுட்டிக் காட்டிய உச்ச நீதிமன்றம், ‘‘ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் வருமானம் மிகைப்படுத்தியும் தவறாகவும் குமாரசாமி தீர்ப்பில் காட்டப்பட்டுள்ளது’’ என்கிறது.

சொத்து சேர்க்கவே  ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்! - உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பில் முக்கியமாக வருபவை கட்டடங்கள். 5 ஆண்டு காலத்தில் புதிதாக வாங்கியவை, கட்டப்பட்டவை என, வழக்குத் தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு கணக்கைக் கொடுத்தது. பொதுப்பணித் துறையை வைத்து கட்டடங்களை மதிப்பீடு செய்த குன்ஹா, அதிலிருந்து 20 சதவிகித சேதாரத்தைக் கழித்துவிட்டு, 22,53,92,344 ரூபாய் என மதிப்பைக் கணக்கிட்டார். ஆனால், குமாரசாமியோ சுமார் 22 கோடியே 69 லட்ச ரூபாயைக் குறைத்து வெறும் 5,10,54,060 ரூபாய் என இந்த மதிப்பைக் காட்டினார். இதில் வேடிக்கை என்னவென்றால், ஜெயலலிதா தரப்பே இதற்கு 8,60,59,261 ரூபாய் மதிப்பு எனச் சொன்னது. ஜெ. தரப்பு சொன்னதைவிடவும் மூன்றரை கோடி ரூபாய் குறைவாக குமாரசாமி மதிப்பிட்டதுதான் பெரும் ஆச்சர்யம். ‘‘இந்த மதிப்பீடு உண்மையாகவோ, பகுத்தறிவின் அடிப்படையிலோ செய்யப்பட வில்லை. இது ஒப்புக்கொள்ள உகந்ததல்ல’’ என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

சொத்து சேர்க்கவே  ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்! - உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

இதேபோன்ற இன்னோர் அபத்தம், ஜெயா பப்ளிகேஷன்ஸின் வருமான விஷயத்தில் குமாரசாமி போட்ட கணக்கு. ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் சந்தா போன்றவை மூலம் வந்த வரவுகளை சட்டபூர்வ வருமானமாகக் கணக்கிடக் கோரியது ஜெயலலிதா தரப்பு. இதில் ஜெ. தரப்பு வழக்கறிஞர்களே உரிமை கோரியது, 1.15 கோடி ரூபாயை மட்டுமே! இது ஜெயா பப்ளிகேஷன்ஸின் லாபம். ஆனால், ஜெயா பப்ளிகேஷன்ஸ் வருமானமாக குமாரசாமி நான்கு கோடி ரூபாயை வரவு வைத்திருந்தார். ‘‘கட்சிக்காரர்கள் 31 பேர் சொன்ன சாட்சியை வைத்து நீதிபதி இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். சட்டப்படி இந்த சாட்சியங்கள் செல்லாது’’ எனக் குட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்.

சொத்து சேர்க்கவே  ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்! - உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

சர்ச்சைக்குரிய இன்னொரு விஷயம், பரிசுப்பொருட்கள். ‘‘ஜெயலலிதாவின் 44-வது பிறந்தநாளின்போது அவருக்கு வழங்கப்பட்ட இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை, அவருடைய வருமானக் கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும்’’ என அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கோரினார்கள். ‘இது வருமானமாக வராது’ என மறுத்தார் குன்ஹா. ஆனால், இதைச் சட்டப்பூர்வ வருமானமாக வரவு வைத்தார் குமாரசாமி. உச்ச நீதிமன்றமோ, ‘‘ஊழல் தடுப்புச் சட்டப்படி இது சட்டப்பூர்வ வருமானம் இல்லை’’ என குமாரசாமியின் கணக்கை மறுத்துள்ளது.

சொத்து சேர்க்கவே  ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்! - உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

செலவுக் கணக்கிலும் இந்த வித்தியாசம் தொடர்கிறது. வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத் துக்கு ஆன செலவு,  ஆறு கோடியே 45 லட்ச ரூபாய் என கணக்குச் சொன்னது லஞ்ச ஒழிப்புத் துறை. குன்ஹா இதை மூன்று கோடி ரூபாய் என மதிப்பிட்டார். ஆனால், திருமணச் செலவு வெறும் 28 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்தான் என அதிரடியாகக் குறைத்தார் குமாரசாமி. ஜெயலலிதாவின் வருமான வரி ரிட்டர்ன் கணக்கை வைத்து இந்த முடிவுக்கு வந்ததாக குமாரசாமி சொன்னார். ஆனால், ‘‘இந்தக் கணக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்கில் வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களைப் பார்த்தால், இப்படி ஒரு முடிவுக்கு வர முடியாது’’ என்றது உச்ச நீதிமன்றம்.

யார் கணக்கு சரி?

வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குவித்தனர் என்பது வழக்கு. 01.07.1991 முதல் 30.04.1996 வரையிலான காலத்தில் இவர்களின் சொத்துக் கணக்கு மதிப்பிடப்பட்டு, வழக்கு நடந்தது. இதில் ஒவ்வொருவரும் போட்டக் கணக்கு இங்கே...

சொத்து சேர்க்கவே  ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்! - உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

இப்படி தீர்ப்பின் பல பகுதிகள், குமாரசாமியைக் குட்டியும், குன்ஹாவைப் பாராட்டியுமே உள்ளன. குமாரசாமியின் எல்லா கணக்குகளிலுமே உச்ச நீதிமன்றம் தவறு காண்கிறது.

ஜெயலலிதா இறந்துவிட்டதாலேயே அவர் உத்தமர் என இந்தத் தீர்ப்பு சொல்லவில்லை. ஊழலிலும், கூட்டுச் சதியிலும் அவருடைய பங்கையும் விலாவாரியாக விவரித்திருக்கிறது. ‘‘சட்டப்பூர்வமான முகமூடியை வைத்துக்கொண்டு நிழலான காரியங்களைச் செய்யும்போது, அந்த முகமூடியை அகற்றிவிட்டு, திரைக்குப் பின்னால் இருக்கும் நிஜமான முகத்தைக் காட்ட வேண்டிய அவசியம் நீதிமன்றத்துக்கு இருக்கிறது. அதை சிறப்பு நீதிமன்றம் சரியாகச் செய்திருக்கிறது’’ என குன்ஹாவைப் பாராட்டி இருக்கிறார்கள் நீதிபதிகள்.  

‘‘ஜெயலலிதாவின் வீட்டில் சசிகலா, சுதாகரன், இளவரசி என எல்லோரும் கூட்டாகச் சேர்ந்திருந்தது, ஏதோ தொண்டு செய்யும் உந்துதலில் இல்லை. ஜெயலலிதா சம்பாதித்த சொத்துக்களை வைத்து என்ன செய்யலாம் எனக் குற்றச் சதியில் ஈடுபடவே இணைந்திருந்தார்கள். ஜெயலலிதா சம்பாதித்த பணத்தைவைத்து மற்ற மூன்று பேரும் பெரிய அளவில் நிலங்களையும் சொத்துக்களையும் வாங்கினார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது’’ என்கின்றனர் நீதிபதிகள்.

‘நால்வரும் இணைந்து கூட்டுச் சதி செய்ததற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?’ - ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் வழக்கறிஞர்கள் ஒவ்வொரு முறையும் கேட்ட கேள்வி இது. இதற்கும் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார்கள் நீதிபதிகள்.

சொத்து சேர்க்கவே  ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்! - உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

‘‘கிரிமினல் சதிக்கு எப்போதுமே நேரடி சாட்சியங்கள் கிடைக்காது. ஏனெனில், சதித்திட்டம் என்பது ரகசியமாகத் தீட்டப்படுவது. அதனால், சூழ்நிலை சாட்சியங்களே சதியை நிரூபிக்கப் போதுமானவை. நான்கு பேர் சேர்ந்து ஈடுபடும் செயலில், ஓரிரண்டு பகுதிகள் யாரோ ஒருவருக்கோ, இருவருக்கோ தெரியாமல் இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தச் சதியில் பங்கு பெற்றிருக்கும் அனைவருக்கும் இதற்கான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே நீதி’’ என நீதிபதிகள் தெளிவாகச் சொல்கிறார்கள்.

‘‘ஜெயலலிதாவின் கணக்கில் வராத பணத்தை வைத்து, மற்ற மூவரும் நிறைய நிறுவனங்களைத் தொடங்கினார்கள். ஒரே நாளில் பத்து நிறுவனங்கள் தொடங்கப்பட்ட வரலாறும் உண்டு. மற்ற மூவருக்கும் வேறு எந்த வருமானமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் தொடங்கிய இந்தப் பல நிறுவனங்களுக்கு, சொத்துக்களை வாங்குவதைத் தவிர வேறு எந்த பிசினஸும் இல்லை. ‘இவை எல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தது’ என ஜெயலலிதா சொல்ல முடியாது. அவருடைய வீட்டு முகவரியை வைத்தே பெரும்பாலான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. வங்கிக் கணக்குகளில் பணம் போடும்போது, எண் 36, போயஸ் கார்டன் என்ற முகவரியைக் குறிப்பிட்டே பணம் செலுத்தியிருக்கிறார்கள். ரத்த உறவாக இல்லாதபோதும், ஜெயலலிதாவின் வீட்டில்தான் இவர்கள் தங்கியிருந்தார்கள். அதனால் எல்லா குற்றங்களிலும் எல்லோருக்கும் பங்கு உண்டு’’ எனத் தெளிவாகத் தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குன்ஹா விதித்த அதே தண்டனையை உறுதி செய்தார்கள்.

சட்டம் நின்று கொல்லும்!

- தி.முருகன்