Published:Updated:

``விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கொடுக்க முடியாது" - சேலம் விவசாயிகள் எதிர்ப்பு!

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M
``விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கொடுக்க முடியாது" - சேலம் விவசாயிகள் எதிர்ப்பு!
``விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கொடுக்க முடியாது" - சேலம் விவசாயிகள் எதிர்ப்பு!

சேலம் மாவட்டத்தில் 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தி வரும் நிலையில் சேலம் விமான நிலையம் விரிவாக்கப் பணிக்கும் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக காடையாம்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் விமான நிலைய விரிவாக்கத்தால் நிலங்கள் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காடையாம்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டத்துக்குப் பிறகு நம்மிடம் பேசிய நல்லு என்பவர், ``கருத்துக் கேட்பு கூட்டம் என்பது பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளையும் கூப்பிட்டுக் கேட்பார்கள் என்று நினைத்துதான் வந்தோம். ஆனால், யாரையும் யாரும் சந்திக்கக்கூட விடாமல் ஒவ்வொருவர்களாக டி.ஆர்.ஓ., சுகுமாரை பார்க்கச் சொன்னார்கள். நான் போய்ப் பார்ந்தேன்.

டி.ஆர்.ஓ., ``விமான நிலைய விரிவாக்கத்துக்கு உங்கள்  நிலத்தைக் கொடுக்க விருப்பமா? விருப்பமில்லையா? என்று கேட்டார். ``விருப்பமில்லை'' என்றேன். ``உன் பையனுக்கு அரசு வேலை கொடுக்கின்றோம்'' என்றார். ``ஏற்கனவே விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு வேலை தருவதாக அட்டையைக்  கொடுத்தீர்கள். அதை  வைத்துக்கொண்டு அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், வேலை கொடுக்கவில்லை. அதுவும் போக நாங்கள் தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்களுக்கு விவசாயத்தைத்  தவிர வேறு வேலையும் தெரியாது'' என்றேன். அதற்கு டி.ஆர்.,ஓ., அதை எழுதி கொடுக்கச் சொன்னார், எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டோம்" என்றார்.

டி.ஆர்.ஓ.,வை சந்தித்துவிட்டு வெளியே வந்த சதாசிவம் என்பவரிடம் கேட்டபோது, ``டி.ஆர்.ஓ., உங்கள் நிலத்தைக் கொடுக்கிறீர்களா? என்று கேட்டார். ``நான் கொடுக்கிறேன்'' என்றேன். ஆனால், 3 கோரிக்கைகளை வைத்தேன். 1. ஓர் ஏக்கருக்கு ரூ.2 கோடி கொடுக்க வேண்டும். 2. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும். 3. ஆடு, மாடுகள் வைத்திருப்பதால் அரசு புறம்போக்கு நிலத்தில் எங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 சென்ட் நிலம் இலவசமாக வழங்க வேண்டும்'' என்றேன். ``டி.ஆர்.ஓ., அதை எழுதிக் கொடுத்துட்டுப் போகச் சொன்னார். எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். எங்களுக்கு யாருக்கும் நிலம்  கொடுப்பதில் சிறிதளவு கூட சம்மதம் இல்லை. விவசாயிகள் யாரையும் ஒன்று சேர விடாமல் மிரட்டி, அச்சுறுத்தி நிலத்தை அபகரிக்கிறார்கள்'' என்றார்.