Published:Updated:

`இந்தச் செய்தி அரசுக்குத் தெரியுமா, முதல்வருக்குத் தெரியுமா..?’- கொந்தளிக்கும் ஸ்டாலின்

சத்யா கோபாலன்
`இந்தச் செய்தி அரசுக்குத் தெரியுமா, முதல்வருக்குத் தெரியுமா..?’- கொந்தளிக்கும் ஸ்டாலின்
`இந்தச் செய்தி அரசுக்குத் தெரியுமா, முதல்வருக்குத் தெரியுமா..?’- கொந்தளிக்கும் ஸ்டாலின்

தமிழகத்தில் இரண்டு ஆட்சிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றைய கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது, ‘ஆளுநர் ஆய்வு’ பற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளிக்க மறுத்ததால் தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். 

சட்டசபைக்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ``நேரடியாக ஆளுநர் மாளிகையிலிருந்து, ‘தலைமைச் செயலாராக இருக்கக் கூடிய கிரிஜா வைத்தியநாதனுடன் இணைந்து கூட்டங்களை ஏற்பாடு செய்து அந்த அடிப்படையில்தான் நான் ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன்’ என செய்தி வந்துள்ளது. இந்தச் செய்தி அரசுக்குத் தெரியுமா. முதல்வருக்கு தெரியுமா. அப்படி இதுகுறித்து முதல்வருக்கு முன்னதாகவே தெரிந்திருந்தால் இதுபற்றி அவர் விளக்கமளித்திருக்க வேண்டும். இரண்டு நாள்களுக்கு முன் இதே ஆளுநர் மாளிகையிலிருந்து ‘ஆய்வு நடத்துவதற்காக நான் செல்லவில்லை’ என அறிக்கை வந்தது. ஆனால், இன்று தலைமைச் செயலாளருடைய ஒப்புதலோடு ஆய்வு நடத்துவதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் விளக்கம் கூற வேண்டும் என நான் சட்டசபையில் கேட்டேன். ஆனால், அவர் வாய் மூடி அமைதியாக இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்துள்ளோம்.

இதிலிருந்து தமிழகத்தில், ஆளுநருக்குக் கட்டுப்பட்டு ஒரு ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என தெளிவாகத் தெரிகிறது. மத்திய அரசுக்கு அடிமையாக, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய ஒரு ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, இரட்டை ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒன்று எடப்பாடி தலைமையிலும் மற்றொன்று  ஆளுநர் தலைமையிலும் நடக்கிறது. எடப்பாடி ஆட்சி அடிமை ஆட்சியாகவும், ஆளுநர் ஆட்சி எஜமான ஆட்சியாகவும் நடைபெறுகிறது. இதுதான் இருக்கக் கூடிய உண்மை.” எனக் கூறினார்.