தமிழகத்தின் 13 தென் மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கொடுத்திருந்த கெடு முடியப்போகிறது. இந்தத் தருணத்தில், நீதிபதிகளின் விசிட், கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் நெருக்கடி எனப் பரபரப்பில் மூழ்கியுள்ளது தென் தமிழகம்.
தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தைச் சமாளிப்பதற்காக 1950-களில், வெளிநாடுகளில் இருந்து சீமைக்கருவேல விதைகளை இறக்குமதி செய்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தூவப்பட்டன. வறட்சியான பகுதிகளிலும், எந்த தட்பவெப்பத்திலும் வளரக்கூடியது என்பதால், வானம் பார்த்த பூமியில் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு அப்போது மேற்கொண்டது. தற்போது, தமிழ்நாட்டில் 25 சதவிகித நிலப்பகுதிகளை சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. ‘நிலத்தடி நீரைத் தாறுமாறாக உறிஞ்சும்; பல மீட்டர் உயரத்துக்கு வளர்ந்து காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சும்; அதிக அளவில் கரியமில வாயுவை வெளியிடும்; இந்த மரங்களின் நிழலில் வேறு தாவரங்கள் எதுவும் முளைக்காது’ என சுற்றுச்சூழல் சார்ந்து பல புகார்கள் எழுந்தன. சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதை ஓர் இயக்கமாக சில அமைப்புகள் தனிப்பட்ட முறையில் செய்துவந்தன.

இந்தச் சூழலில், ராமநாதபுரம் உட்பட 13 மாவட்டங்களில், கடும் வறட்சியை உண்டாக்கும் சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்கு அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘13 மாவட்டங்களிலும் அரசு நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அழிக்க வேண்டும். தனியார் நிலங்களில் உள்ள மரங்களை நில உரிமையாளர்களே அகற்ற வேண்டும். அதைச் செய்ய சம்பந்தப்பட்டவர்கள் தவறினால், அரசே அந்த மரங்களை அகற்றி, அதற்கான செலவை இரு மடங்காக தனியாரிடம் இருந்து வசூலிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
அதன்பிறகு, பல மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் தானே களத்தில் இறங்கி சீமைக்கருவேல மரங்களை வெட்டினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமே, 1,04,947 ஹெக்டேரில் சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள நீர் ஆதாரங்களான கண்மாய்கள், வரத்துக் கால்வாய்கள், குளங்கள், ஊருணிகள், ஆறுகள் என அனைத்திலும் இந்த மரங்களே நிறைந்துள்ளன. இந்த மரங்கள் அகற்றும் பணியைப் பார்வையிட ராமநாதபுரத்துக்கு வைகோ வந்திருந்தார். அப்போது, ‘‘மொத்தமாகவே, இதுவரை 10 சதவிகித கருவேலமரங்கள்தான் அழிக்கப்பட்டுள்ளன. எல்லா மாவட்டங்களையும் விட ராமநாதபுரத்தில்தான் இந்த மரங்கள் அதிகம். ஆனால், மிகக்குறைவாகவே இங்கு மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அரசு மட்டுமின்றி, இளைஞர்களும் மாணவர்களும் இந்தப் பணியில் ஈடுபட வேண்டும். அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்தால்தான், இது சாத்தியமாகும்’’ என்றார்.
இந்தப் பணி எந்த அளவில் நடைபெறுகிறது என்று மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் செல்வம், கலையரசன், வைத்தியநாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். போகும் வழிகளில் எல்லாம் புதர் போல சீமைக்கருவேல மரங்கள் இருந்ததைப் பார்த்து, அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிப்ரவரி 27-ம் தேதிக்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், இந்தக் கால அவகாசத்துக்குள் முற்றிலுமாக மரங்களை அகற்றுவது சாத்தியமில்லை. ஏனெனில், ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இந்தப் பணி நடப்பதால், சீமைக்கருவேல மரங்களை யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. “கருவேல மரங்களை அகற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்காமல், இந்தப் பணியைச் செய்யுமாறு அதிகாரிகள் எங்களுக்குப் பெரும் நெருக்கடி கொடுக்கிறார்கள்’’ என்று உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் புலம்புகிறார்கள்.
இந்தப் பணியில் உள்ள சவால்கள், பிரச்னைகள் குறித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கலையரசனிடம் கேட்டபோது, “சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம். அதேநேரத்தில், மழையை மட்டுமே நம்பியுள்ள ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், வறட்சியான காலங்களில் கருவேல மரங்களை நம்பியே வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கு, இந்த மரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கான மாற்றுத் தொழிலை உருவாக்கித் தரவேண்டும். அப்படி செய்தால்தான், குறிப்பிட்ட காலத்துக்குள் இவற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியும். இல்லையென்றால், அரசு அலுவலர்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது” என்கிறார்.
- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி