Published:Updated:

விதிமீறல் கட்டடங்களை பிரதமரே திறக்கலாமா?

விதிமீறல் கட்டடங்களை பிரதமரே திறக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
விதிமீறல் கட்டடங்களை பிரதமரே திறக்கலாமா?

ஈஷா சர்ச்சையும் மோடி வருகையும்

விதிமீறல் கட்டடங்களை பிரதமரே திறக்கலாமா?

ஈஷா சர்ச்சையும் மோடி வருகையும்

Published:Updated:
விதிமீறல் கட்டடங்களை பிரதமரே திறக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
விதிமீறல் கட்டடங்களை பிரதமரே திறக்கலாமா?

‘உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது’ என்று கைவிரித்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு சட்டவிதிமீறல்களுக்காக வழக்குகளை எதிர்கொண்டுவரும் ஈஷா யோகா மைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒப்புக்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா நிறுவனம், தன் எல்லைப் பரப்பை அதிகரிக்கும் வேலையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள இக்கரைபோழுவம்பட்டி கிராமத்தில், மூன்று ஏக்கர் பரப்பில் ஈஷா யோகா மையத்தின் சார்பில், 112 அடி உயர ஆதியோகி எனும் சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது. சிவன் சிலை, மண்டபங்கள், பூங்கா, வாகன நிறுத்துமிடம் என சுமார் ஒரு லட்சம் சதுர அடியில் இந்த கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

விதிமீறல் கட்டடங்களை பிரதமரே திறக்கலாமா?

மலை, வனம், நீர் ஆதாரங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி என்பதால், இங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஏராளமான விதிமுறைகள் உள்ளன. இங்கு 300 சதுர மீட்டருக்கு மேல் கட்டடம் கட்ட வேண்டும் என்றால், மாவட்ட ஆட்சியர் தொடங்கி, நகர ஊரமைப்புத் துறை, வனத்துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை என பல துறைகளின் தடையின்மைச் சான்றுகளைப் பெற வேண்டும். மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் (HACA), நகர ஊரமைப்புத் துறை (DTCP) ஆகியவற்றின் அனுமதி பெறவேண்டியது மிகவும் அவசியம். ஆனால், ஈஷாவின் கட்டுமானங்களுக்கு அதுபோன்ற எந்த அனுமதியும் பெறப்படவில்லை.
‘அனுமதி பெறாமல் கட்டப்பட்ட சட்டவிரோதக் கட்டடங்களை இடிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், இதன் தலைவர்   பி.முத்தம்மாள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். “இக்கரைபோழுவம்பட்டி கிராமத்தில், மூன்று ஏக்கர் பரப்பில் 112 அடி உயர சிவன் சிலை எழுப்பவும், அதைச் சுற்றி ஒரு லட்சம் சதுர அடியில் வாகன நிறுத்துமிடம், நான்கு மண்டபங்கள், பூங்கா போன்றவற்றை அமைக்கவும், சட்டத்துக்குப் புறம்பாகவும், மலைப்பகுதிப் பாதுகாப்பு விதிகளை மீறியும் பல கட்டுமானப்பணிகளை மேற்கொள்கிறார்கள். சிலை அமைக்க, 300 சதுர மீட்டர் பரப்புக்கு விளைநிலங்களை மாற்றுவதற்கு மட்டும் கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். இதை மீறி ஒரு லட்சம் சதுர அடி பரப்புக்குக் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இ்தற்கு மலைப் பகுதி பாதுகாப்புக் குழுமத்தின் அனுமதியோ, வனத்துறையின் அனுமதியோ, சுற்றுச்சூழல்  துறையின் அனுமதியோ, நகர ஊரமைப்புத் திட்ட அதிகாரியின் அனுமதியோ பெறவில்லை. தவிர, நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியான இங்கு, ராஜ வாய்க்கால் கால்வாயும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கட்டுமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். சட்டவிரோதக் கட்டடங்களை இடிக்க உத்தரவிட வேண்டும்” என அவர் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விதிமீறல் கட்டடங்களை பிரதமரே திறக்கலாமா?

‘இத்தனை சர்ச்சைக்குள்ளான ஈஷா யோகா மைய விழாவில் பிரதமர் பங்கேற்பது சரியில்லை. இது சட்ட விதிமீறலை அவரே அங்கீகரிப்பது போல ஆகிவிடும். எனவே பிரதமர் மோடி செல்லக்கூடாது’ எனப் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடர்பாகப் பேசிய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன், “தன் மனைவியைக் கொலை செய்ததாக பெங்களூரு காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்தான் ஜக்கி வாசுதேவ். 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஈஷாவின் கட்டுமானப் பணிகளை நிறுத்தவும், டிசம்பர் மாதத்தில் கட்டடத்தை இடிக்கவும் அரசு அறிவிப்பு செய்திருக்கிறது. ஆனால், அவர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு வேலைகளைச் செய்து வந்திருக்கின்றனர். தற்போது, 13.50 லட்சம் சதுர அடி அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் சிவன் சிலையைக் கட்டுவதற்கு விவசாய நிலங்களை அழித்துள்ளனர். மேலும், வன உயிரினங்கள் அதிகமாக வாழும் இடத்தில் இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால், பல உயிரினங்கள் அழிந்துவிட்டன. நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி ஈஷா யோகா மையம் இத்தகைய ஆக்கிரமிப்பு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்தச் சிலை திறப்பு விழாவில் மோடியும், எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், “மதத்தின் பெயரால் வனத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு போலிச் சாமியார், எந்த அனுமதியும் பெறாமல் வனப்பகுதியை அழித்து, கட்டடங்கள் கட்டி வருகிறார். இதைக் கண்டிக்க வேண்டிய மத்திய அரசும், மாநில அரசும் ஆதியோகி சிலைத் திறப்பு விழாவில் பங்கேற்பது கேவலமானச் செயல்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, “ஈஷா யோகா மையத்துக்கு தேவையான தண்ணீர் முழுவதும் மலையிலிருந்து உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இவர்களால் காட்டு வளம், தண்ணீர் வளம், உயிரின வளம் என அனைத்தும் அழிக்கப்படுகின்றன. மதத்தின் பெயரைச் சொல்லி மிகப்பெரிய அளவில் இயற்கை வளம் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிலைத் திறப்பு விழாவில் பிரதமரும், முதல்வரும் பங்கேற்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.

இதற்கு பி.ஜே.பி தரப்பில் பதிலளித்த, அந்த கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “சிவன் சிலையை பிரதமர் திறப்பதில் என்ன தவறு இருக்கிறது? ஈஷாவில் அனுமதியில்லாமல் கட்டடம் கட்டப்பட்டால், அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கட்டும். அதற்காக பிரதமரின் வருகையைக் கேள்வி கேட்கலாமா? சிவராத்திரி விழாவுக்கு பிரதமர் வரக்கூடாது என சொல்பவர்கள் இந்து விரோதிகள். பிரதமர் வருகையைக் கேள்வியே கேட்கக்கூடாது. அரசாங்கம்தான் மதச்சார்பற்றது. ஆனால், பிரதமருக்கென்று மதமும், ஆன்மிகத் தேடலும் இருக்கிறது” என்றார்.

விதிமீறல் கட்டடங்களை பிரதமரே திறக்கலாமா?

இது தொடர்பாக நாம் ஈஷா யோகா மையத்திடம் ஆறு கேள்விகளை அனுப்பி விளக்கம் கேட்டோம்.

 மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் (HACA), நகர ஊரமைப்புத் துறை (DTCP) ஆகியவற்றின் அனுமதி பெறாமல் ஆதியோகி சிலை கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?

 ஈஷா மதம் சார்ந்த நிறுவனம் அல்ல என்று சொல்லிவரும் நிலையில், ‘மதம் சார்ந்த வழிபாட்டுத்தலம் அமைக்க’ என்று சொல்லி கலெக்டரிடம் அனுமதி கடிதம் சமர்ப்பித்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

 தற்போது ஆதியோகி திருமுக சிலை அமையுமிடம் மலைப்பகுதி என்றும், விவசாய இடத்தில் இதுபோன்று சிலை அமைப்பது விதிமீறல் என்றும் புகார் சொல்லப்படுகிறது. இதைப் பற்றி?

 

விதிமீறல் கட்டடங்களை பிரதமரே திறக்கலாமா?

சிலைக்கான கட்டுமானங்களைத் தொடங்கும் முன்பு, இதற்கான அனுமதியைக் கோராமல், கட்டடம் மீது விதிமீறல் புகார் எழுந்த பின்னரே அனுமதி கோரி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதியதாகச் சொல்லப்படுகிறதே?

 ‘கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா மையத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அனைத்தையும் இடிக்க வேண்டும்’ என்றும், ‘இனி எந்தவித கட்டுமானங்களும் கட்ட அனுமதிக்கக் கூடாது’ என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளியங்கிரி மலைவாழ் பாதுகாப்புக்குழு சார்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதே? அது குறித்து உங்கள் கருத்து...

 ‘வனப் பகுதியில் ஈஷா மையம் நடத்தும் மகா சிவராத்திரி மற்றும் அதுபோன்ற பிற நிகழ்வுகளுக்கு ஏன் நிரந்தரத் தடை விதிக்கக்கூடாது’ என விளக்கம் அளிக்க ஈஷா மையத்திற்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதே. அது குறித்து உங்கள் கருத்து?

இந்தக் கேள்விகளுக்கு ஈஷா நிறுவனத்தின் சார்பில் விளக்கக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் இந்தக் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லப்படவில்லை. “ஈஷா நிறுவனம் சட்ட விதிகளை மீறியோ, சட்டவிரோதமான செயல்களிலோ ஈடுபடவில்லை. இதுதொடர்பான புகார் முற்றிலும் தவறு. மாவட்ட கலெக்டரிடமும், வனத்துறை, பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட துறைகளிலும் அனுமதி பெற்றிருக்கிறோம். கலெக்டர் தடையின்மைச் சான்று கொடுத்திருக்கிறார். எனவே, இதில் சட்டவிதிகளை மீறியதாகச் சொல்வது தவறு” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

- ச.ஜெ.ரவி, ஜெ.அன்பரசன்
படங்கள்: தி.விஜய், தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism