Published:Updated:

கமல்ஹாசனின் கட்சிப் பெயருக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றம் செல்லும் நெல்லை வழக்கறிஞர்!

பி.ஆண்டனிராஜ்
கமல்ஹாசனின் கட்சிப் பெயருக்கு எதிர்ப்பு:  உயர் நீதிமன்றம் செல்லும் நெல்லை வழக்கறிஞர்!
கமல்ஹாசனின் கட்சிப் பெயருக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றம் செல்லும் நெல்லை வழக்கறிஞர்!

நடிகர் கமல்ஹாசன் ’மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சிபெயரைப் பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. அதனை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றம் செல்ல இருக்கிறார். 

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் வலம்புரி மோசே என்பவர், கடந்த மார்ச் 3-ம் தேதி, இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ’’நடிகராக இருந்து அரசியல்வாதி ஆகியுள்ள கமல்ஹாசன், தான் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சிக்கு, ‘மக்கள் நீதி மய்யம்’ எனப் பெயர் பதிவுசெய்யக் கோரி மனுச்செய்துள்ளார். ஆனால், இந்திய நீதிபரிபாலன முறையின் ஓர் அங்கமான லோக் அதாலத் என்பது தமிழில் மிக நேர்த்தியாக, மக்கள் நீதிமன்றம் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் பதிவுசெய்யக் கோரியுள்ள 'மக்கள் நீதி மய்யம்' என்னும் பெயரானது, மக்கள் நீதி மன்றம் என்பதை ஒத்து இருப்பதுடன், அப்படி ஒரு அமைப்பு அனைத்து நீதிமன்ற வளாகங்களில் செயல்பட்டும்வருகிறது. நீதிபரிபாலன முறையின் அமைப்பைப் போன்ற ஒரு பெயரை, புதிதாகத் தொடங்க உள்ள அரசியல் கட்சிக்குத் தருவது பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற வீண் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். அதனால், அந்தப் பெயரைப் பதிவுசெய்யக் கூடாது’ எனக் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால், அவரது மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தங்களின் மார்ச் 9-ம் தேதியிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றோம். ’மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சி தொடங்க, தாங்கள் தெரிவித்த ஆட்சேபம் குறித்து எதிர்த்தரப்பினரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த விளக்கத்தைப் பரிசீலனை செய்ததில், தங்களின் ஆட்சேபனையில் முகாந்திரம் இல்லாததால், உங்களின் மனு நிராகரிக்கப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாகப் பேசிய வழக்கறிஞர் வலம்புரி மோசே, ‘’நான் தெரிவித்த ஆட்சேபனை தொடர்பாக தேர்தல் ஆணையம் என்னை அழைத்து எனது தரப்பு விளக்கத்தைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படிக் கேட்காமல், எதிர்த் தரப்பு விளக்கத்தை மட்டுமே கேட்டு முடிவு எடுத்திருப்பது சட்ட விரோதமான செயல். அதனால், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான இந்த முடிவை எதிர்த்து நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்ய உள்ளேன்’’ என்று தெரிவித்தார்.