Published:Updated:

சமாதி சபதம் முதல் ஷாப்பிங் வரை... சசிகலாவின் 500 நாள் சிறைவாசம்! #Sasikala500

சமாதி சபதம் முதல் ஷாப்பிங் வரை... சசிகலாவின் 500 நாள் சிறைவாசம்! #Sasikala500
News
சமாதி சபதம் முதல் ஷாப்பிங் வரை... சசிகலாவின் 500 நாள் சிறைவாசம்! #Sasikala500

தண்டனைப் பெற்ற குற்றவாளியான சசிகலா, ஜெயா டி.வி-யில் 80 விழுக்காடு பங்குதாரர் என்பதால், ஜெயா டி.வி-யை முடக்க மத்திய அரசு நெருக்கடி கொடுத்துள்ளது. அதேபோல சசிகலா மீதுள்ள பெரா வழக்கும் நீதிமன்றத்தில் வேகம் எடுத்துள்ளது. இதனைக் கண்டு சசிகலா அதிர்ந்துபோய் உள்ளார். 

2017 பிப்ரவரி 15 ஆம் தேதி, போயஸ்கார்டன் வீட்டிலிருந்து கிளம்பிய சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்றார். அங்கே சமாதியில், மூன்று முறை தனது கையால் ஓங்கியடித்து சபதம் செய்தார். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில், சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்காக பெங்களூரு கிளம்பிச்சென்றார்... இன்றுடன் 500 நாட்கள் சிறை வாசத்தை நிறைவு செய்திருக்கிறார் சசிகலா! 

பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் ஜெயராமன், கைதி எண் 9234-ஐ சசிகலாவுக்கும், 9235-ஐ இளவரசிக்கும், 9236-ஐ சுதாகரனுக்கும் ஒதுக்கிக் கொடுத்தார். 

சசிகலா சிறை சென்ற பிறகு திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, காமராஜ் போன்ற அமைச்சர்கள் சசிகலாவைச் சிறையில் சந்தித்துவந்தனர். மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை இங்கு வந்து சசிகலாவைச் சந்திப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் கைகோத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்ற அரசியல் மாற்றத்துக்குப் பிறகு... இவர்களையெல்லாம் சந்திப்பதை அறவேத் தவிர்த்துவிட்டார் சசிகலா! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சசிகலாவின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள, இளவரசியின் மகன் விவேக் இங்கு இரண்டு பேரை நியமித்துள்ளார். பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ள நாகாபுரத்தில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து, இந்த இரண்டு பேரையும் தங்க வைத்துள்ளார். அங்கு கம்ப்யூட்டர் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளன. சசிகலாவுக்குத் தேவையான உடைகள், மருந்துகள் என எல்லாமே இந்த அப்பார்ட்மென்ட்டிலிருந்து சிறைக்குச் செல்கின்றன. 

2017 ஜூன் மாதம் சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக பதவியேற்ற ரூபா நடத்திய திடீர் சோதனையில், சசிகலாவுக்காக சிறைக்குள் செயல்பட்ட சமையலறை கண்டுபிடிக்கப்பட்டது. சிறையில் சசிகலாவுக்கு அவசரத் தேவைகளுக்கான சமையல் செய்ய பெண் கைதிகளுக்கான அறையை ஒதுக்கியிருந்தது மற்றும் அங்கிருந்த பொருள்கள் ஆகிய எல்லா விவரங்களைப் பற்றியும் அறிக்கைக் கொடுத்தார் ரூபா. அது பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில், 2 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சப் பணம் கைமாறியுள்ளதாக ரூபா குற்றம் சாட்டினார். இதை விசாரிக்க அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமாரை விசாரணை அதிகாரியாக நியமித்தார். அனைத்தும் உண்மை என்று வினய்குமார் அறிக்கை உறுதி செய்தது. இதில், 2 கோடி லஞ்சப் பணம் கைமாறியது என்பதை மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகின்றது. 

அதிகாலை 5 மணிக்கெல்லாம் கண் விழிக்கும் சசிகலா, தினமும் ஒரு மணி நேரம் யோகாசனங்கள் செய்கிறார். பிறகு, சிறை வளாகத்தில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்கிறார். பின்னர், குளித்து முடித்துவிட்டு, சிறைக்குள் ஸ்பெஷலாக கொண்டுவந்து வைக்கப்பட்ட லிங்கத்துக்கு பூஜை செய்கிறார். சிறை நூலகத்தில் நாளேடுகளை வாசிக்கிறார். சிறையில் காளான் வளர்ப்பு மற்றும் வளையல் தயாரிப்பு, கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் கன்னடம் எழுதப் படிக்கத் தெரிந்துகொள்வது எனத் தனது சிறைவாசத்தை பயனுள்ள வகையில் கடக்கின்றார் சசிகலா. 

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முன்பாக, தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். பிறகு மௌனவிரதத்தில் இருந்த சசிகலாவைச் சந்திக்கச் சென்ற வெற்றிவேலிடம், ‘‘என்னம்மா... நான் வீடியோ வெளியிட்டதால என்மேல கோவமா இருக்கீங்களா?’’ எனக் கேட்டுள்ளார். அதற்கு 'நான் வணங்கும் முருகனின் செயல் எல்லாம்' என எழுதிக்காட்டினார் சசிகலா. 

ஜெயலலிதா இறந்து ஒரு வருட நினைவாக, 2017 டிசம்பர் 5 ஆம் தேதி மௌனவிரதத்தைத் தொடங்கினார் சசிகலா. குற்றவாளி என்று தீர்ப்பு வெளிவந்த நாளான 2018 பிப்ரவரி 14 ஆம் தேதியுடன் மௌன விரதத்தைக் கலைத்தார். 

உடல் நலக் குறைவால், சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜனைக் காணக் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் முறையாக 5 நாட்கள் பரோல் பெற்று வெளியே வந்தார். அதற்கு அடுத்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக 15 நாட்கள் பரோல் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்தார் சசிகலா. அப்போது தனது 15 நாட்கள் பரோலை 10 நாட்களில் முடித்துக்கொண்டு சிறைக்குத் திரும்பினார். 

தண்டனைப் பெற்ற குற்றவாளியான சசிகலா, ஜெயா டி.வி-யில் 80 விழுக்காடு பங்குதாரர் என்பதால், ஜெயா டி.வி-யை முடக்க மத்திய அரசு நெருக்கடி கொடுத்துள்ளது. அதேபோல சசிகலா மீதுள்ள பெரா வழக்கும் நீதிமன்றத்தில் வேகம் எடுத்துள்ளது. இதனைக் கண்டு சசிகலா அதிர்ந்துபோய் உள்ளார். 

இன்னும் மீதமுள்ள சிறை நாட்களில் என்னென்ன அதிரடி மாற்றங்களை ஜெயலலிதாவின் தோழி சசிகலா சந்திக்கப் போகிறாரோ.... காலம்தான் பதில் சொல்லும்...!