Published:Updated:

தாமிரபரணி... போர் பரணி

தாமிரபரணி... போர் பரணி
பிரீமியம் ஸ்டோரி
News
தாமிரபரணி... போர் பரணி

குளிர்பான நிறுவனங்களுக்குக் குடை பிடிக்கும் அரசு

தாமிரபரணியும் இப்போது ஜல்லிக்கட்டு, நெடுவாசல் வரிசையில் போராட்டக் களமாகிவிட்டது. பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட, வழக்கம்போலவே இதற்கும் அரசியல் சாயம் பூச ஆரம்பித்துவிட்டார்கள் ஆட்சியாளர்கள்.

நெல்லை அருகேயுள்ள கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும் கோக், பெப்சி நிறுவனங்களுக்கு தினமும் 13 லட்சம் லிட்டர் தண்ணீரை தாமிரபரணியில் இருந்து எடுத்துக்கொள்ள அரசு அனுமதித்தது. இதற்காக அந்த நிறுவனங்கள் கொடுப்பதோ, ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு வெறும் 37 ரூபாய் 50 காசுகள்தான். இந்த நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம், இந்தக் குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க இடைக்காலத் தடை விதிக்கப் பட்டது. இந்த வழக்கின் மேல்முறையீட்டில், மார்ச் 1-ம் தேதி தடை நீக்கப்பட்டுள்ளது. ‘தாமிரபரணியிலிருந்து வெளியேறும் உபரி நீரையே குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்குவதாக அரசு தெரிவித்திருக்கிறது. அதனை ஏற்று தண்ணீர் எடுக்க அனுமதி வழங்குகிறோம்’ என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறட்சியில் குடிநீருக்கே திண்டாடிக் கொண்டிருக்கும்போது ‘உபரிநீர்’ என அரசே விவசாயிகள், பொதுமக்கள் வயிற்றில் அடித்திருக்கிறது. ‘‘உபரி நீரைதான் தருகிறோம்’’ என நீதிமன்றத்தில் சொன்னவர் நெல்லை கலெக்டர் கருணாகரன். அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள் மக்கள்.

தாமிரபரணி... போர் பரணி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கருணாகரனிடம் பேசினோம். ‘‘மக்களுக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளைச் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறேன். எனது கடந்தகால செயல்பாடுகளே அதற்கு சாட்சி. உவரியில் செயல்பட்டு வந்த மூன்று மீன் அரவை ஆலைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது எனப் புகார் எழுந்ததால், அவற்றை மூட உத்தர விட்டேன். ஆனால், நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி மீண்டும் நடத்துகிறார்கள். இப்படித்தான் குளிர்பான விவகாரத்திலும் ஏற்பட்டிருக்கிறது. முன்பு தடை விதிக்கப்பட்டபோது அதனை முழுமையாக செயல்படுத்தினோம். இப்போது தீர்ப்பு வேறு மாதிரியாக வந்துள்ளது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் வாய்ப்புள்ளது.’’

‘‘நீதிமன்றத்தில் நீங்கள் அளித்த பதிலை வைத்துத்தானே தீர்ப்பு சொல்லப் பட்டிருக்கிறது?’’

‘‘உண்மையைச் சொல்லட்டுமா? நீதிமன்றத்தில் நாங்கள் பதில் மனுத் தாக்கல் செய்தபோது, ‘கலெக்டரின் மனுவை ஏற்றுக்கொள்ளக் கூடாது. பொதுப்பணித் துறையினருக்கு மட்டுமே தாமிரபரணி குறித்து முழுமையாகத் தெரியும். அவர்கள் தரும் மனுவையே ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என எதிர்த்தரப்பினர் நீதிமன்றத்தில் வாதிட்டனர். அதன்படி பொதுப்பணித் துறை பதில் அளித்தது. அதில், ‘தாமிரபரணியிலிருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13,829 மில்லியன் கன அடி உபரிநீர் கடலில் கலக்கிறது’ என தெரிவித்திருந்தனர். இதைக் கொண்டுதான் தீர்ப்பு அளிக்கப்பட்டது. எனது மனுவை நீதிமன்றம் கணக்கில் எடுக்காத நிலையில், நான் கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலேயே தீர்ப்பு வந்திருப்பதாக வதந்திகளைச் சிலர் பரப்பி வருகின்றனர்.”

‘‘அவர்கள் யார்? இதற்குக் காரணம் என்ன?’’

‘‘இது வி.வி மினரல்ஸ் ஆட்களின் வேலை! நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி தாது மணல் ஆலைகள் செயல்பட்டு வந்தன. இதுபற்றி புகார்கள் வந்ததால், 2013-ல் ககன்தீப் சிங் பேடி தலைமையில் கமிஷன் அமைத்தது அரசு. அதன் அறிக்கைப்படி அனைத்து ஆலைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. ஆனாலும், அரசை ஏமாற்றி வி.வி மினரல்ஸ் நிறுவனம் சட்டத்துக்குப் புறம்பாக மணலில் இருந்து தாதுக்களைப் பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்தது. இதற்கு உள்ளூர் அதிகாரிகள், காவல்துறையினர் சிலர் ஒத்துழைத்ததால் வெளியில் தெரியவில்லை. இது எனது கவனத்துக்கு வந்ததும் சப்-கலெக்டர் விஷ்ணு மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டேன். அனுமதி இல்லாமல் கனிம மணல் ஏற்றிச் சென்ற மூன்று லாரிகளையும் ஒரு பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்து, வழக்குப் போட்டோம். அத்துடன், கனிமவளக் கொள்ளையைத் தடுக்க கமிட்டிகள் அமைக்கப்பட்டன. அதையும் மீறி, கனிமங்களை தூத்துக்குடி வழியாக ஏற்றுமதி செய்தனர். ‘கனிம ஏற்றுமதிக்கான ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அவை செயல்பட அனுமதிக்கப்படவில்லை. கனிமங்களை எடுத்துச் செல்ல போக்குவரத்து அனுமதியும் கிடையாது. ‘கனிம ஏற்றுமதிக்கு எந்த நிறுவனம் முன்வந்தாலும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக் கடிதத்தைப் பெற்று செயல்படவும்’ என கலால் துறையினருக்கும் துறைமுக நிர்வாகத்துக்கும் கடிதம் அனுப்பினோம். அதன்பின் சட்ட விரோதமாக, கொச்சி துறைமுகம் வழியாக ஏற்றுமதியைத் தொடர்ந்தனர். அங்கும் இதேபோல கடிதம் கொடுக்கப்பட்டதால், அந்த வழியும் அடைக்கப் பட்டது. இதனால், என் மீது தனிப்பட்ட விதத்தில் கோபம் அடைந்த ஆலை நிர்வாகத்தினர், என்னைப் பற்றி வீணான வதந்திகளை பரப்புகிறார்கள்.

தாமிரபரணி... போர் பரணி

தாது மணல் ஆலைகள் முறையான அனுமதியைப் பெறாமலே 1999-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்திருக்கின்றன. ஏற்றுமதியில் மிகச் சொற்பமான தொகையை மட்டுமே அரசுக்குச் செலுத்தி பெரும் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த காழ்ப்புணர்ச்சியால்தான் பல்வேறு அமைப்புகளையும் எனக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்கள்” என கொந்தளித்தார் கருணாகரன்.

வி.வி மினரல்ஸ் ஆலைத் தரப்பில் பேசியவர்கள், ‘‘ஆலையின் அனுமதிக்காக விண்ணப்பம் செய்திருக்கிறோம். அவை பரிசீலனையில் இருக்கின்றன. நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டே தொழில் செய்கிறோம். ஏற்றுமதிக்கு அனுமதிக்கக் கோரி, சென்னை மற்றும் கேரள உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் தொழிலைத் தொடங்குவோம். கலெக்டருக்கு எதிராக மக்கள் கோபம் கொள்வதற்குக் காரணம், அவர் தாக்கல் செய்த மனு. அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் மீது நாங்கள் எந்த அவதூறையும் பரப்பவில்லை’’ என்கிறார்கள்.

‘உபரி நீரைதான் தருகிறோம்’ எனச் சொல்லி நெல்லை மக்களின் வயிற்றில் அடித்த தமிழக அரசு, அதிலிருந்து தப்பித்துக்கொள்ள தாது மணல் ஆலைகள் விவகாரத்தைக் கேடயமாகத் தூக்கிப் பிடிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ‘எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க தாது மணல் அதிபர்கள், மணல் கான்ட்ராக்டர்கள் கை கோத்திருக்கிறார்கள்’ எனப் புகார் எழுந்தநிலையில், மணல் அதிபர்களைப் பழிவாங்கவும் இப்போது முண்டாசு கட்டுகிறார்கள் ஆட்சியாளர்கள்.

‘பன்னாட்டுக் குளிர்பானங்களை விற்க மாட்டோம்’ என எளிய வியாபாரிகள், தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் முடிவெடுக்கிறார்கள்; ஆனால், பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீரைத் தருவதில் அரசுக்கு எந்தக் கூச்சமும் இல்லை. வறட்சி நிவாரணம் கேட்டு மனு கொடுக்க வரும் எம்.பி-க்களைச் சந்திக்க பிரதமர் மோடிக்கு நேரம் இருக்காது; ஆனால், பெப்சி நிறுவனத் தலைவரை, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த அதே நாளில் சந்திக்கிறார் பிரதமர். மக்கள் போராட்டங்கள்தான் எல்லா உண்மைகளையும் அம்பலப்படுத்த வேண்டும்!

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

தாமிரபரணி... போர் பரணி

‘‘அரசியல்வாதி போல பேசுகிறார் கலெக்டர்!’’ - அப்பாவு அதகளம்

தாமிரபரணியில் பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு எதிராகப் பொதுநல வழக்கு தாக்கல் செய்தவர்களில் ஒருவரான முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவுவிடம் பேசினோம். ‘‘இந்தத் தீர்ப்பு, மிகுந்த மன வேதனை அளிக்கிறது. நியாயம் கிடைக்க, தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவேன். பன்னாட்டுக் குளிர்பான நிறுவனத்துக்கு கேரள அரசு அனுமதித்தும், மக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு செயல்படமுடியவில்லை. அதை மூடினார்கள். இங்கு, ‘கங்கை கொண்டான் சிப்காட்டில் பல நிறுவனங்கள் தண்ணீரைப் பயன்படுத்தும்போது, தங்களுக்கு மட்டும் நீரெடுக்கத் தடை போடுவது ஏன்’ என்ற வாதத்தை குளிர்பான நிறுவனத்தினர் வைத்துள்ளார்கள். அவர்களின் தண்ணீர்ப் பயன்பாடு மிகக் குறைவு. ஆனால், தண்ணீரையே மூலப்பொருளாகவும், உற்பத்திப் பொருளாகவும் கொண்ட குளிர்பான நிறுவனங்களை எப்படி இதில் அனுமதிக்க முடியும்?

மழைக்காலத்தில் தாமிரபரணியில் இருந்து கடலுக்குச் செல்லும் உபரி நீரை சாத்தான்குளம், ராதாபுரம், நாங்குனேரி தாலுக்காக்களுக்குத் திருப்பிவிட தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டத்தை முடிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு, உபரிநீர் பற்றி மட்டும் பேசியிருக்கிறார்கள். அந்த உபரி நீரை மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளுக்கு விவசாயம் செய்யத் திருப்பி விடலாமே? குளிர்பானக் கம்பெனிகளுக்குச் சாதகமாக, தான் நடந்துகொள்வது மக்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அரசியல்வாதி போல கலெக்டர் கருணாகரன் பேசுகிறார். இதன்மூலம் கருணாகரன் ஆதாயம் அடைந்திருக்கிறார் எனச் சந்தேகப்படுகிறோம்’’ எனப் போட்டுத் தாக்குகிறார் அப்பாவு.

- செ.சல்மான், படம்: ஈ.ஜெ.நந்தகுமார்