Published:Updated:

ஒடுக்க வருகிறது உளவுத்துறை... முடிக்க நினைக்கும் பி.ஜே.பி... முழக்கமிடும் மக்கள்!

ஒடுக்க வருகிறது உளவுத்துறை... முடிக்க நினைக்கும் பி.ஜே.பி... முழக்கமிடும் மக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒடுக்க வருகிறது உளவுத்துறை... முடிக்க நினைக்கும் பி.ஜே.பி... முழக்கமிடும் மக்கள்!

ஒடுக்க வருகிறது உளவுத்துறை... முடிக்க நினைக்கும் பி.ஜே.பி... முழக்கமிடும் மக்கள்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார மக்கள், 20 நாட்களைத் தாண்டியும் போராடி வருகிறார்கள்.  இந்தப் போராட்டத்தை விரும்பாத பி.ஜே.பி., அந்த மக்களின் மனதைக் கரைப்பதற்கான வேலையில் முழுமூச்சுடன் இறங்கியிருக்கிறது.

கடந்த 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது, போராட்டக்குழு. அடுத்த நாளிலிருந்து, மாவட்ட நிர்வாகம் இவர்கள் மீதான நெருக்கடியை அதிகரித்தது. பகலில் பேச்சுவார்த்தை நடத்தினால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், நள்ளிரவிலேயே  அதிகாரிகள் பேச்சுவார்த்தையை நடத்துகிறார்கள். ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் கணேஷ் முகாமிட்டுள்ளார். எஸ்.பி லோகநாதன், கோட்டாட்சியர் ராமசாமி, சப் கலெக்டர் அம்ரீத் மற்றும் டி.எஸ்.பி அப்துல் முத்தலீப் ஆகியோரும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 

ஒடுக்க வருகிறது உளவுத்துறை... முடிக்க நினைக்கும் பி.ஜே.பி... முழக்கமிடும் மக்கள்!

‘மற்ற ஊர்களில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டால், நெடுவாசல் போராட்டத்தை முடிப்பது ஈஸி’ என்று மாவட்ட நிர்வாகம் நினைக்கிறது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பல யுக்திகளை அரசு கையாண்டுவரும் நிலையில், வடகாடு மக்கள் புதிதாகப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

கடந்த 2-ம் தேதி, நெடுவாசலுக்கு வந்த, தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா, பா.ம.க அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர், போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். கொட்டும் மழையில் பேசிய ஸ்டாலின், ‘‘ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து சட்டமன்றத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும்’’ என்றார். ‘‘இந்தப் பிரச்னை தொடர்பாக, நாடாளுமன்றத்தில் விவாதிப்போம். அப்போது பிரதமர் மோடி பதில் சொல்லியே ஆகவேண்டும்” என்று டி.ராஜா, அன்புமணி, திருச்சி சிவா ஆகியோர் முழங்கினார்கள். ஆனால், ‘லோக்கல் எம்.பி-க்களான சிவகங்கை செந்தில்நாதன், திருச்சி  ப.குமார் வாய்திறக்கவே இல்லை’ என்று மக்கள் கோபப்படுகின்றனர்.

நாளுக்கு நாள், பெண்கள் கூட்டம் அதிகரிக்கிறது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம் மற்றும் தப்பாட்டக் குழுவினர், இசை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதனால் உற்சாகம் அடைந்த மக்கள், ‘அரிசி வேண்டுமா... ஹைட்ரோ கார்பன் வேண்டுமா?’, ‘முதுகில் குத்தாதே’, ‘வயிற்றில் அடிக்காதே!’ என உடலில் ஓவியம் வரைந்து எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

பி.ஜே.பி-யின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஏற்பாட்டில், மதுரையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை போராட்டக் குழு, கடந்த 4-ம் தேதி சந்தித்தது. ‘காம்ப்ரமைஸ்’ செய்வதிலேயே  பொன்.ராதாகிருஷ்ணனன் உள்ளிட்ட பி.ஜே.பி தலைவர்கள் மும்முரமாக இருந்துள்ளனர். ஓ.என்.ஜி.சி பொது மேலாளர் பவன்குமார் மூலம், இந்தத் திட்டம் குறித்து விளக்கியுள்ளனர்.

அதன்பிறகு பொன்.ராதாகிருஷ்ணனோ, ‘‘நெடுவாசலைப் போன்று இந்தத் திட்டம் நாடு முழுவதும் 31 இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் எதிர்ப்பு இருக்கிறது. போராட்டக் குழுவினரோடு, விரைவில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேச இருக்கிறேன். இந்தத் திட்டத்துக்கு உரிமம் வழங்கும் பொறுப்பு தமிழக அரசிடம் உள்ளது. இதில் தமிழக அரசுதான் முடிவுசெய்ய வேண்டும். இந்தத் திட்டம், தற்போதைய மோடி அரசால் கொண்டுவரப்பட்டது அல்ல. 1958-லேயே முடிவு செய்யப்பட்டது. அடுத்தக் கட்டப்பணிகள் 1990-லும் நடந்து 2006-ல்தான் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எடுத்துக்கூறியும், போராட்டம் தொடர்வது ஏனென்று தெரியவில்லை. இந்தத் திட்டத்தில் பெறப்படும் 80 சதவிகித மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கே வழங்கப்படும். தனியாருக்கு வழங்கப்படும் 20 சதவிகித மின்சாரமும், தமிழ்நாட்டுக்குத்தான். இதனால் விவசாயத்துக்குப் பாதிப்பில்லை. நெடுவாசல் மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்” என்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒடுக்க வருகிறது உளவுத்துறை... முடிக்க நினைக்கும் பி.ஜே.பி... முழக்கமிடும் மக்கள்!

இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி மாலை, நெடுவாசலுக்கு வந்த பி.ஜே.பி-யின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘‘வரும் 11-ம் தேதி பெட்ரோலியத் துறை அமைச்சரை போராட்டக் குழுவினருடன் சந்திக்க உள்ளோம். அதுவரை போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும்’’ எனக் கூற, கடுப்பான மக்கள், `ராஜாவே வெளியேறு’ என கோஷமிட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து ராஜா வெளியேறினார்.

போராட்டக்களத்துக்கு வந்த, நடிகர்  ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், மு.களஞ்சியம் உள்ளிட்டோர், “விவசாயத்தை அழித்துவிட்டு என்ன செய்யப் போகிறீர்கள்?  போராடும் மக்களுக்கு எதிராக பி.ஜே.பி தலைவர்கள் பேசிவருகிறார்கள். உங்கள் தொழில்நுட்பம், வாளியில் வாரி ஊற்றுகிற அளவுக்கு இருக்கும்போது, உங்களை நாங்கள் எப்படி நம்ப முடியும்?’’ என்றனர்.

இந்தப் போராட்டத்தைச் சீர்குலைப்பதற்கான வேலையில் மத்திய, மாநில உளத்துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். மப்டி உடையில் போராட்டக்காரர்களுடன் கலந்திருக்கும் உளவுத்துறையினர், தங்களின் அனைத்து யுக்திகளையும் கையாண்டு வருகின்றனர்.

ஆனாலும், உறுதிகுலையாத உள்ளத்துடன் போராடிவருகிறார்கள் நெடுவாசல் மக்கள்.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், ம.அரவிந்த்