Published:Updated:

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்... - அரசியலும் பின்னணியும்

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்... - அரசியலும் பின்னணியும்
பிரீமியம் ஸ்டோரி
News
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்... - அரசியலும் பின்னணியும்

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்... - அரசியலும் பின்னணியும்

ட்டை கிழிப்பு, சபாநாயகர் முற்றுகை, அவைக்குள் காக்கிகள் என்ட்ரி என எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க நடந்த ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ ரணகளமானது. சபாநாயகர் தனபாலுக்கும் தி.மு.க உறுப்பினர்களுக்கும் இடையே நடந்த மோதல், இப்போது சபாநாயகரையே பதவியில் இருந்து நீக்க முயற்சி செய்யும் தீர்மானமாக உருமாறிவிட்டது. சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை சட்டசபைச் செயலாளர் ஜமாலுதீனிடம் அளித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழக பட்ஜெட் தாக்கலுக்காக 16-ம் தேதி சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசு, அறுதிப்பெரும்பான்மையைவிட ஆறு வாக்குகள் அதிகம் பெற்று தப்பியது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, அதன்மூலம் எடப்பாடி ஆட்சிக்கு மீண்டும் ஒரு சோதனையை வைத்திருக் கிறது தி.மு.க. சபாநாயகரை நீக்கும் தீர்மானம் எப்படி நிறைவேற்றப்படும்? அப்போது என்ன நடக்கும்? சபாநாயகரை நீக்குவது பற்றி சட்டமன்றப் பேரவை விதி என்ன சொல்கிறது?  

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்... - அரசியலும் பின்னணியும்

சட்டமன்றப் பேரவை விதி!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208-வது பிரிவின் உட்பிரிவான 1-ன் படிதான் மாநில சட்டமன்றங்களின் விதிகள் உருவாக்கப்பட்டன. அதன்படி உருவாக்கப்பட்ட ‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள்’ சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை நீக்குவது பற்றி விவரிக்கின்றன.

சபாநாயகர், துணை சபாநாயகரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 179-வது பிரிவின் உட்பிரிவு சி-யின் படி தனித் தீர்மானம் தர வேண்டும். தீர்மானம் கொடுக்க விரும்பும் உறுப்பினர்கள், 14 நாள்கள் முன்னறிவிப்புடன் எழுத்து மூலமாகத் தீர்மான வரைவை சட்டமன்றச் செயலாளருக்குத் தர வேண்டும். இன்னொரு பிரதியை சபாநாயகருக்கும் அளிக்க வேண்டும். இந்த நடைமுறையைப் பின்பற்றினால்தான் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர முடியும்.

14 நாள்கள் முன்னறிவிப்பு காலம் முடிந்ததும் கூட்டப்படும் சட்டசபையின் முதல் கூட்ட நாளில் அலுவல் பட்டியலில் இந்தத் தனி தீர்மானம் சேர்க்கப்படும். கேள்வி நேரம் முடிந்ததும் இந்தத் தனி தீர்மானம் உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். தீர்மானம் தந்தவுடன் அது உடனடியாக விவாதத்துக்கு வராது. முதலில் ஆய்வுக்குத்தான் வரும். அப்படி ஆய்வுக்கு வரும் நாளில் சட்டமன்றத்துக்குத் தலைமை வகிப்பவர், அந்த தனித் தீர்மானத்தைப் படித்துக் காட்டுவார். தீர்மானத்தைக் கொண்டுவர நினைக்கும் உறுப்பினர்களை எழுந்து நிற்குமாறு கேட்டுக்கொள்வார். ‘தீர்மானம் கொண்டு வரப்படும் நாளில் சட்டமன்றத்துக்குத் தலைமை வகிப்பவர்’ என்கிற வார்த்தையில் அர்த்தம் பொதிந்திருக்கிறது. அதாவது, இந்தத் தனி தீர்மானம் விவாதத்துக்கு வரும்போது சட்டமன்றத்தில் சபாநாயகர் இருக்க மாட்டார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது, சபாநாயகர் அவையில் இருக்கக் கூடாது என்பதுதான் அதன் அர்த்தம். சபாநாயகருக்குப் பதில் துணை சபாநாயகர்தான் இருக்கையில் இருப்பார். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், மாற்று சபாநாயகர் அவைக்குப் பொறுப்பு வகிப்பார்.

தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு ஆதரவு அளித்து எழுந்து நிற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 35-க்குக் குறையாத அளவுக்கு இருக்க வேண்டும். 35 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் எழுந்து நின்றால் போதும்... பேரவைக் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர், ‘‘பேரவையின் அனுமதி கிடைத்துள்ளது’’ என அறிவிப்பார். 35-க்கும் குறைவான உறுப்பினர்கள் எழுந்து நின்றால், ‘‘பேரவை அனுமதியை மறுத்துவிட்டது’’ என்று, தீர்மானத்துக்கு முன்னறிவிப்பு கொடுத்த உறுப்பினருக்கு, தலைமை வகிப்பவர் தெரிவிப்பார்.

சட்டசபை அனுமதி அளித்துவிட்டால் தீர்மானத்தின் மீதான விவாதம் உடனடியாகவோ அல்லது அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு நாள்களுக்குள் ஏதாவது ஒரு நாளிலோ வரும். அந்த நாளில் தீர்மானம் விவாதத்துக்கு வரும்போது, பேரவையின் நடவடிக்கைகளை நடத்தி வைப்பதற்காக, தலைமை தாங்க ஒருவரை பேரவைத் தேர்ந்தெடுக்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்... - அரசியலும் பின்னணியும்

ஃபிளாஷ்பேக் தீர்மானங்கள்!

கடந்த காலங்களிலும் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அவை பற்றி பார்ப்போம்.

தி.மு.க-வின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தில் சபாநாயகராக இருந்த ஆவுடையப்பன் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அன்றைய எதிர்க்கட்சியான அ.தி.மு.க கொண்டு வந்தது. 2006 ஆகஸ்ட் 2-ம் தேதி தீர்மான வரைவை தம்பிதுரை கொடுத்தார். அடுத்த நாளே அது ஆய்வுக்கு வந்தது. ‘‘14 நாள்கள் முன்னறிவிப்பு தர வேண்டும் என்கிற விதியைத் தளர்த்தி, இன்றே பேரவையில் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என அப்போது அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன் கேட்டுக் கொண்டார். அது தீர்மான வடிவில் வர, அவை அதை ஏற்றுக்கொண்டது. இப்படி சட்டமன்ற விதிகளைத் தளர்த்திக்கொள்ள வழிவகை உண்டு. தி.மு.க தன் கெத்தைக் காட்டுவதற்காக, ‘14 நாள்கள் முன்னறிவிப்பு’ என்கிற நடைமுறையைத் தளர்த்தி அடுத்த நாளே தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதோடு தீர்மானத்துக்குத் தயாராவதற்குகூட அ.தி.மு.க-வுக்கு நேரம் தராமல் அவர்களைத் திணறடிக்கவும் நினைத்தது தி.மு.க.

தீர்மானம் வந்தபோது ஆவுடையப்பன் எழுந்து தனது அறைக்குப் போக, துணை சபாநாயகரான வி.பி.துரைசாமிதான் அவையை நடத்தினார். ‘‘நம்பிக்கையில்லா தீர்மானத்துக்குப் பேரவையின் அனுமதியை அறிய விரும்புவதால், தீர்மானத்தை ஆதரிக்கும் உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும்’’ என்றார் துரைசாமி. அ.தி.மு.க உறுப்பினர்களும், அதன் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க உறுப்பினர்களும் எழுந்து நின்றார்கள். உடனே தம்பிதுரை, ‘‘ஆவுடையப்பனை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என இந்தப் பேரவை தீர்மானிக்கிறது’’ எனச் சொல்லி தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தை இன்னொருவர் வழிமொழிய வேண்டும். ஆனால், யாரும் வழிமொழியவில்லை. உடனே துரைசாமி, ‘‘யாரும் வழிமொழியவில்லை என்பதால் தீர்மானம் தோல்வியுற்றது’’ என்றார். அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ‘‘நேற்று தந்த தீர்மானத்தை இன்றே எடுத்துக் கொண்டதோடு, அதை நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பது பற்றி எந்த முன்னறிவிப்பு கொடுக்காதது ஜனநாயகத்துக்கு எதிரானது’’ என்றார். (இப்போது அவர் உதடுகள் எப்படிப் பேசும் என பார்ப்போம்!) அதோடு ‘‘தீர்மானத்தை வழிமொழிய துணை சபாநாயகர் வாய்ப்பே தரவில்லை. ‘யாராவது வழிமொழிகிறீர் களா?’ என துணை சபாநாயகர் கேட்டிருக்க வேண்டும். சர்வாதிகாரப் போக்குடன் அவையை நடத்துகிறீர்கள்’’ என்றார் பன்னீர்செல்வம். ‘‘தீர்மானத்தை முன்மொழிபவர்களே அதை வழிமொழியவும் கடமைப்பட்டவர்கள்’’ எனச் சொன்னார் துரைசாமி. ‘‘வழிமொழிகிறேன் எனச் சொல்லத் தவறிவிட்டார்கள். அதைக் கருதாமல் தீர்மானத்தை விவாதிக்கலாம்’’ என அன்பழகன் சொன்னதால் தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. அப்போது அவையில் நடந்த விவாதம் இது.

தம்பிதுரை: ‘‘ஜூலை 31-ம் தேதி சபைக் காவலர்கள் அத்துமீறி நடந்துகொண்டார்கள். அத்துமீறி உறுப்பினர் ஃபதர் சயீத்தைப் பிடித்து இழுத்திருக்கிறார்கள். காலை மிதித்திருக்கிறார்கள். பெண் உறுப்பினருக்கே அவையில் பாதுகாப்பில்லை.’’

அமைச்சர் பரிதி இளம்வழுதி: ‘‘கடந்த ஆட்சியில் செரினா என்ற பெண்ணுக்கு எவ்வளவு பாதுகாப்பு கொடுத்தார்கள் என்பதை நாடறியும்.’’

அமைச்சர் பொன்முடி: ‘‘சென்னா ரெட்டி மீது ஜெயலலிதா சொன்ன புகாரைப் போல இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வழக்கமே இதுதான்.’’

‘‘தீர்மானத்தின் மீது பேசுவதற்கு வாய்ப்பு அளிக்காமல் இப்படி குறுக்கிடுவது நியாயமல்ல. சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அவையை நடத்துவதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்’’ எனச் சொன்னார் பன்னீர்செல்வம். இறுதியில் தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, ஆதரிப்போர் ஒருவரும் இல்லாமல் தோல்வி அடைந்தது.

ஆனாலும், அடுத்த ஆண்டே 2007-ம் மே மாதம் 14-ம் தேதி இன்னொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள். அதை ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வர, செங்கோட்டையன் வழிமொழிந்தார். அப்போது நடந்த விவாதத்தில் ‘‘சபாநாயகர் விருப்புவெறுப்பு இன்றி நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். ஆனால் சபை விதிகளைக் காலில் போட்டு சபாநாயகரே மிதிக்கிறார். சட்டமன்றம் ஆளும்கட்சிக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அமைச்சர்கள் சொல்வது போலதான் சபாநாயகர் நடந்து கொள்கிறார்’’ என்றார் பன்னீர்செல்வம். உடனே அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ‘‘கடந்த காலத்தில் சபாநாயகர் காளிமுத்து முதல்வர் ஜெயலலிதாவின் கண்ணசைவின்படிதான் அவையை நடத்தினார்’’ என்றார். ‘‘சபாநாயகரை அழுக்குப்படுத்த வேண்டும், களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது’’ என்றார் கருணாநிதி. (சபாநாயகரை அழுக்குப்படுத்த வேண்டும், களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் இப்போது தீர்மானம் கொண்டு வர நினைக்கிறார் போல!) ஆனால், குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தீர்மானம் தோல்வியைத் தழுவியது. அ.தி.மு.க மற்றும் ம.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்... - அரசியலும் பின்னணியும்

1991 - 1996 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சபாநாயகராக இருந்த சேடப்பட்டி முத்தையா மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், 1995 மே 4-ம் தேதி அவையில் கொண்டு வந்தது. ஆனால், தீர்மானத்துக்கு இசைவைத் தெரிவிக்க வேண்டிய காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நிற்கவில்லை. காரணம், அவையில் அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் இல்லை. உடனே துணை சபாநாயகர் காந்திராஜன், ‘‘காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் கொடுப்பதும், அதை விவாதத்துக்கு ஏற்றுக்கொள்ளும்போது விதிமுறைப்படி நடந்து கொள்ளாமல் இருப்பதும் கேலி கூத்து’’ என்றார். ‘‘14 நாள்கள் கழித்து தீர்மானம் அவையில் விவாதத்துக்கு வரும்போது முன்மொழிய, வழிமொழிய வேண்டும் என்கிற விதியெல்லாம் காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாதா?’’ என கேட்டார் தாமரைக்கனி. அந்தத் தீர்மானம் தள்ளுபடி ஆனது.

1971-1976 தி.மு.க ஆட்சிக் காலத்தில் கே.ஏ.மதியழகன், கே.கோவிந்தன் என அடுத்தடுத்து  இரண்டு சபாநாயகர்கள் இருந்தார்கள். இரண்டு பேருமே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்குத் தப்பவில்லை. அண்ணாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் கே.ஏ.மதியழகன். அதன்பிறகு நடந்த தேர்தலில் கருணாநிதி வென்று முதல்வர் ஆனார். கே.ஏ.மதியழகன் சபாநாயகர் ஆக்கப்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில் தி.மு.க-வில் இருந்து பிரிந்து அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கியிருந்தார். அவருக்கு ஆதரவாக மதியழகன் செயல்படுவதாகப் புகார் எழுந்தது. சபாநாயகராக இருந்த மதியழகனும் துணை சபாநாயகராக இருந்த சீனிவாசனும் எதிர்மறையான உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இதனால், மதியழகன் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும்கட்சியான தி.மு.க-வே 1972 டிசம்பர் 2-ம் தேதி கொண்டுவந்து, அவரை நீக்கியது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து சபாநாயகரை நீக்கியது, அதுதான் முதன்முறை.

அடுத்து வந்த சபாநாயகர் கே.கோவிந்தன் மீது கோவை செழியன், கே.டி.கே.தங்கமணி, எட்மண்ட், பொன்னப்ப நாடார், அனந்தநாயகி ஆகியோர் 1974 மார்ச் 27-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்கள். அது தோல்வி அடைந்தது.

50 வருட திராவிட ஆட்சியில் கட்டி எழுப்பப்பட்ட ஒற்றுமை இது!

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி