Published:Updated:

மல்லையாவுக்குக் கடன்... செல்லையாவுக்குக் கட்டணம்! - வங்கிகளின் பகல் கொள்ளை

மல்லையாவுக்குக் கடன்... செல்லையாவுக்குக் கட்டணம்! - வங்கிகளின் பகல் கொள்ளை
பிரீமியம் ஸ்டோரி
News
மல்லையாவுக்குக் கடன்... செல்லையாவுக்குக் கட்டணம்! - வங்கிகளின் பகல் கொள்ளை

மல்லையாவுக்குக் கடன்... செல்லையாவுக்குக் கட்டணம்! - வங்கிகளின் பகல் கொள்ளை

த்திய அரசின் ‘செல்லாக்காசு’ நடவடிக்கையால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த மக்கள், தற்போது, தொட்டதற்கெல்லாம் கட்டணம் என்று வங்கிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பால் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.

செல்லாக்காசு நடவடிக்கையைத் தொடர்ந்து, ‘வங்கிகள் மூலமாகவே பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் நடைபெற வேண்டும்’ என மக்களைக் கட்டாயப்படுத்த ஆரம்பித்தது, மத்திய அரசு. ஆனால் இப்போது, ‘மாதத்தில் நான்கு முறைக்கு மேல் வங்கிகளில் பணப் பரிமாற்றம் மேற் கொண்டால் கட்டணம்’ என்று ஹெச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. ஆக்சிஸ் வங்கி, ‘மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் வங்கிகளில் பணப் பரிமாற்றம் மேற்கொண்டால் கட்டணம்’ எனக் கூறியிருக்கிறது. இந்தக் கட்டணங்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க, ‘சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்சம் ரூ. 5,000 இருப்பு வைத்திருக்க வேண்டும்; தவறினால் அபராதம்’ என தேசியமயமாக்கப்பட்ட வங்கியான, எஸ்.பி.ஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

மல்லையாவுக்குக் கடன்... செல்லையாவுக்குக் கட்டணம்! - வங்கிகளின் பகல் கொள்ளை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குறைந்தபட்சத் தொகையைப் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்குக் கிராமப் பகுதியாக இருந்தால் ரூ.20-ம், பெருநகரப் பகுதியாக இருந்தால் ரூ.100-ம் அபராதமாக விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த வங்கியானது பெருநகரம், நகரம், சிறுநகரம், கிராமம் என நான்கு வகையாகத் தன் கிளைகளைப் பிரித்துள்ளது. இதில், குறைந்தபட்சப் பண இருப்பாக பெருநகரங்களில் ரூ.5,000, நகர்ப் பகுதிகளில் ரூ.3,000, சிறுநகரங்களில் ரூ.2,000, கிராமப் பகுதிகளில் ரூ.1,000 இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய ஐந்து வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஏப்ரல் 1-ம் தேதி இணைக்கப்படுகின்றன. இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள், மாணவர்கள், விவசாயிகள் என கிட்டத்தட்ட 31 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள எஸ்.பி.ஐ வங்கியின் மேற்கூறிய அறிவிப்பு, அதன் வாடிக்கையாளர்களை எந்தளவுக்குப் பாதிக்கும்?
 
பொருளாதார நிபுணர் நாகப்பன், “பெரும்பாலும், மாதச் சம்பளம் வாங்குபவர்கள், ஒரு மாதத்துக்கு நான்கு அல்லது ஐந்து முறை வங்கியில் இருந்து பணம் எடுப்பார்கள். ஆனால், வங்கியின் இந்த அறிவிப்பால், சம்பளம் போட்டவுடனே மொத்த சம்பளத்தையும் வங்கியில் இருந்து எடுத்து வீட்டில் வைக்கும் நிலை உருவாகும். எனவே, நடுத்தர, கீழ்த்தட்டு மக்களுக்குக் கட்டணங்கள் விதிப்பது நியாயமற்றது. ஒரு மாதத்தில் 40-50 தடவைக்கு மேல் வங்கிகளில் பணம் போட்டு எடுப்பவர்களுக்குக் கட்டணங்கள் விதிக்கலாம். மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் நம் பணத்துக்கு மிகக் குறைந்த வட்டியைக் கொடுத்துவிட்டு, அந்தப் பணத்தை வைத்து வங்கிகள் அதிக லாபம் சம்பாதிக்கின்றன. இதில், நியாயமே இல்லை. இந்தக் கட்டணத் திட்டத்தை வங்கிகள் ரத்துசெய்ய வேண்டும்.

‘செக் புக் வேண்டும் என்றால் கட்டணம், பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணம்’ என்று அடித்தட்டு மக்கள் மீது சுமையை ஏற்றும்போது, ‘நம் பணத்தை எடுக்கக் கட்டணமா ?’ என்று அச்சத்தில், பலரும் டெபாசிட் செய்யவே யோசிப்பார்கள். இதனால், முன்புபோலவே ரொக்கப் பணப் பரிமாற்றம் செய்யும் நிலை ஏற்படும். இந்திய அரசு, மறைமுக வர்த்தகத்தைத் தடை செய்ய நினைக்கிறது. ஆனால், வங்கிகளோ மறைமுக வர்த்தகத்தை நோக்கி மக்களைத் தள்ளுகின்றன” என்கிறார்.

இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், “உலகில் மிகப் பெரிய அளவுக்கு நெட்வொர்க், கிளைகள் கொண்டது, எஸ்.பி.ஐ வங்கி. ஜீரோ பேலன்ஸில் கணக்கு ஆரம்பிக்கலாம் என்று முதன்முதலில் திட்டம் கொண்டுவந்ததே இந்த வங்கிதான். இப்போது, மினிமம் பேலன்ஸ் ஐயாயிரம் ரூபாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். கணக்கு ஆரம்பித்தவர்களை விரட்டியடிக்கவே இந்த அறிவிப்பு என்று தெரிகிறது.

மல்லையாவுக்குக் கடன்... செல்லையாவுக்குக் கட்டணம்! - வங்கிகளின் பகல் கொள்ளை

பெருநகரங்களில் உள்ள எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடி. இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கணக்கில் குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் கட்டாய டெபாசிட் ஆக வைத்திருந்தால், 50 ஆயிரம் கோடி ரூபாய் சேரும். இந்தப் பணத்தை  அந்த வங்கி என்ன செய்யும்? விஜய் மல்லையா போன்றவர்களுக்குக் கடன் கொடுத்து, பிறகு அதைத் தள்ளுபடி செய்வார்கள். அதுதான் நடக்கும்.

ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர் எதிரான நடவடிக்கையை இப்போது எடுக்கிறார்கள். இந்த அறிவிப்பின் அடிப்படை நோக்கம் என்னவென்றால், பொதுத்துறை வங்கிகள் மீது மக்கள் மத்தியில் வெறுப்பு உணர்வை விதைத்து, அவர்களை அங்கிருந்து துரத்துவது. பிறகு, பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக்கட்டுவது” என்று குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்.

வங்கிகளின் இந்தக் கட்டண அறிவிப்புகள் இத்துடன் நிற்காது என்று தெரிகிறது. மத்திய அரசின் ‘செல்லாக்காசு’ நடவடிக்கையால், பல வங்கிகளில் பெருமளவு டெபாசிட் சேர்ந்திருக்கிறது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிய நடவடிக்கைகளின்போது, நிறைய இழப்பை தாங்கள் சந்தித்ததாக வங்கிகள் தரப்பில் புலம்பல்கள் கேட்டன. இந்த இழப்புகளை எல்லாம் ஈடுசெய்யும்விதமாக, பல சேவைகளுக்கும் கட்டணம் விதிக்கும் ஆலோசனையில் வங்கிகள் ஈடுபட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் இப்படிப் பல கட்டணங்கள் நடைமுறைக்கு வரலாம் என பீதியைக் கிளப்புகிறது, வங்கிகள் வட்டாரம்.

பொதுத்துறை வங்கிகளைச் சீரழித்து, தனியார் வங்கிகளை ஊட்டி வளர்ப்பதற்கான குள்ளநரித் தந்திரம்தான் இது.

- பா.பிரவீன் குமார்