Published:Updated:

முற்றுப்புள்ளி அல்ல... முடியாத துயரம்! - ஈரம் கசியும் ஈழத் திரைப்படம்

முற்றுப்புள்ளி அல்ல... முடியாத துயரம்! - ஈரம்  கசியும்  ஈழத் திரைப்படம்
பிரீமியம் ஸ்டோரி
News
முற்றுப்புள்ளி அல்ல... முடியாத துயரம்! - ஈரம் கசியும் ஈழத் திரைப்படம்

முற்றுப்புள்ளி அல்ல... முடியாத துயரம்! - ஈரம் கசியும் ஈழத் திரைப்படம்

‘2009-க்குப் பிறகு ஈழம் எந்த நிலையில் இருக்கிறது... உடலியல் ரீதியாக மட்டுமல்லாமல் உளவியல் அடிப்படையிலும் அந்த மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப் பட்டுள்ளார்கள்’ என்பதை ‘முற்றுப்புள்ளியா?’ என்கிற ஈழப் போர் குறித்தான சமீபத்திய திரைப்படம் பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் ஷெரின் சேவியர். இவர், மனிதநேய செயற்பாடுகளுக்காக பிரான்ஸின் உயரிய ‘செவாலியே’ விருதைப் பெற்ற முதல் இலங்கைப் பெண்மணியும்கூட. ஷெரின் அளித்த பேட்டியிலிருந்து...

முற்றுப்புள்ளி அல்ல... முடியாத துயரம்! - ஈரம்  கசியும்  ஈழத் திரைப்படம்

‘‘ஈழப் போர் தொடர்பான பல புத்தகங்கள், திரைப்படங்கள் வந்தபடி இருக்கின்றன. ‘முற்றுப்புள்ளியா?’ திரைப்படம் எடுக்கப்பட, தனிப்பட்ட காரணம் ஏதேனும் உள்ளதா?’’

‘‘நான் 1987-ல் இலங்கையிலிருந்து திருச்சிக்கு வந்தவள். போராளிகளுக்கு வக்கீலாக என் அப்பா செயல்பட்டு வந்ததால், நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருந்தோம். இலங்கைக்கு இடையிடையே சென்றுவந்தபடி இருந்தேன்.

2007-ல் போர் தீவிர நிலையை அடைந்த காலகட்டத்தில் அங்குதான் இருந்தேன். நான் தமிழ்ப் பெண் என்றாலும், ஒரு சர்வதேச மனித உரிமை ஆர்வலராக அவர்கள் என்னை அங்கே அனுமதித்திருந்தார்கள். சர்வதேச நீதிமன்றங்கள் குற்றங்களாக வரையறுத்திருந்த அத்தனை விஷயங்களும் அங்கே அரங்கேறின. மனித உரிமை ஆர்வலராக இருந்தும் எங்கள் கைகள் கட்டப்பட்டிருந்தன. சிலசமயம் எங்கள் மீதும் தாக்குதல் நடந்தது. இதை எப்படியேனும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சிதான்... ‘முற்றுப்புள்ளியா?”

‘‘போரினால், தனிப்பட்ட முறையில் உங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டன?’’

‘’மனிதநேய செயற்பாட்டாளர் என்பதால், சர்வதேச அளவில் பல நாடுகளில் நான் களப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆனால், நான் பிறந்த  மண்ணில்  என்னால்  செயல்படமுடியவில்லை. 2008-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மையப்பகுதியான வன்னியிலிருந்து மனிதநேய ஆர்வலர்கள் அத்தனை பேரும் ராணுவத்தினரால் கூண்டோடு வெளியேற்றப்பட்டோம். தவறு நடக்கப் போகிறது என்று தெரிந்திருந்தது. ஆனால், எங்களால் அங்கே ஒன்றும் செய்யமுடியவில்லை.’’

‘‘போர் பற்றிய படைப்புகள் கமர்ஷியல் ஆகிவிட்டதாக நினைக்கிறீர்களா?’’

‘‘போர் பற்றி மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த இத்தகைய ஆவணங்கள் தேவை. அவற்றை கமர்ஷியல் என ஒட்டுமொத்தமாகப் புறம்தள்ள முடியாது. அதைப் பற்றி வெளிவரும் புத்தகங்கள், திரைப்படங்கள் என அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் அங்கிருக்கும் மக்களுக்கு உதவியபடிதான் இருக்கின்றன. ஆனால், சிலசமயம் கலை என்கிற போக்கில் அது மிகைப்படுத்தப்படுகிறது. வன்னியில் இருந்த அனைத்துப் பெண்களுமே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்று ஒரு செய்தி வெளியானதைப் பார்த்தேன். பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. சொல்ல முடியாத வகையில், உடல் ரீதியான துன்புறுத்தல்களை சிலருக்கு ராணுவம் கொடுத்தது. ஆனால், அனைத்துப் பெண்களுமே பாதிக்கப்பட்டார்கள் என்பது போன்ற செய்திகள் மிகவும் அக்கறையற்றதாக இருந்தன. இது, அந்த மக்களை உளவியல் ரீதியாக அனைத்து வகையிலுமே பாதித்தது. இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முற்றுப்புள்ளி அல்ல... முடியாத துயரம்! - ஈரம்  கசியும்  ஈழத் திரைப்படம்

‘‘போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ததுதான் எல்லா பிரச்னைக்கும் காரணம் எனத் திரைப்படத்தில் கூறியிருந்தீர்களே?’’

‘‘அங்கே இருக்கும் மக்கள் அப்படித்தான் நினைத்தார்கள். அதுவரை வலுவாக அவர்களைப் பாதுகாத்து வந்த அமைப்பும் அதன் பிறகுதான் பிரச்னைகளை அதிகம் சந்திக்கத் தொடங்கியதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.’’

‘‘படத்தில் வரும் ஆதிரை பாத்திரம் பற்றி?’’

‘‘போர் முடிவதற்குச் சில காலம் முன்புதான் ஆதிரையைச் சந்தித்தேன். ஆனால், ஆதிரைக்கு இருக்கும் மனவலிமையில் இரண்டு சதவிகிதம்கூட நம்மில் பலருக்கு இல்லை. தற்போது ஆசிரியையாக ஒரு பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். மூன்று பிள்ளைகளைத் தனியாளாகத்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறார். போர்க் காலத்தில் காணாமல் போன தன் கணவர் மீண்டும் வருவார் என்கிற நம்பிக்கை இன்றும் அவரிடம் இருக்கிறது. யாழ்ப்பாண சர்வதேச திரை விழாவில், இந்தப் படத்தை அவருக்குக் காண்பித்தேன். ‘நீங்கள் என் கதாபாத்திரத்தை சாகாவரம் பெற்றதாக்கிவிட்டீர்கள். நானே இறந்தாலும் என் கதாபாத்திரம் வழியாக என் கணவர் வருவார் என்கிற நம்பிக்கையுடன் நான் இருக்க முடியும்’ என்று படத்தைப் பார்த்து முடித்ததும் கூறினார். ஆதிரை, அங்கே வசிக்கும் பெரும்பாலான மக்களைப் பிரதிபலிப்பவர்.’’

‘‘அங்கே தற்போதைய சூழல் என்ன?’’

‘‘ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு அங்கே சூழல் கொஞ்சம் மாறி இருக்கிறது. ஆனால், தொடக்கத்தில் நுழைந்த ராணுவம் இன்றளவும் எண்ணிக்கையில் குறையவில்லை. மூச்சுவிடுகிறோம். ஆனால், விடிவு எப்போது என்பதுதான் இன்னும் தெரியவில்லை.’’

- ஐஷ்வர்யா
படம்: ஆ.முத்துக்குமார்