Published:Updated:

“சசிகலாவை சிறை மீட்க கூடுவிட்டுக் கூடு பாய்ந்தேன்!”

“சசிகலாவை சிறை மீட்க கூடுவிட்டுக் கூடு பாய்ந்தேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சசிகலாவை சிறை மீட்க கூடுவிட்டுக் கூடு பாய்ந்தேன்!”

பகீர் கிளப்பும் பெரம்பலூர் மந்திரவாதி

‘மாந்திரீகம் கற்றுக்கொள்ள வேண்டுமா... கூடுவிட்டுக் கூடுபாய வேண்டுமா... இறந்த ஆவிகளோடு பேச வேண்டுமா... என்னிடம் வாருங்கள்!’ என்று அதிரடியாகப் பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுத்து, திகில் கிளப்பிய ஒரு மந்திரவாதியைப் பணமும் பிணமுமாகப் பிடித்திருக்கிறது போலீஸ்.

அந்த மந்திரவாதியின் பெயர், கார்த்திக். கடந்த வாரம் பெரம்பலூர் எம்.எம் நகரிலுள்ள அவரின் வீட்டிலிருந்து பிணவாடை வீசியது. உடனே, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதையடுத்து, அங்கு வந்த போலீஸார், கார்த்திக் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு, பிணத்தின் மீது படுத்தவாறு மாந்திரீகம் செய்துகொண்டிருந்தார், கார்த்திக். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால், பெரம்பலூர் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

காவல்துறைக்குத் தகவல் கொடுத்த நளினியிடம் பேசினோம். ‘‘பெரம்பலூர் கல்யாண் நகரைச் சேர்ந்த கார்த்திக், எம்.எம் நகரில் வாடகை வீடு ஒன்றில் நான்கு வருடங்களாக வசித்து வருகிறார். தான், கடவுளுடன் பேசுவதாகவும் ஆவிகளுடன் பேசுவதாகவும் அவர் சொல்லிக்கொள்வார். அதுமட்டுமில்லாமல், அந்த வித்தையை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதாகவும் சொல்வார். கேரளா, ஆந்திரா, கர்நாடகா என வெளி மாநிலங்களில் இருந்து பலர் கார்களில் அவர் வீட்டுக்கு வருவார்கள். அப்படி வருபவர்கள், முதல் நாள் காலையில் வீட்டுக்குள் போனால், மறுநாள் காலையில்தான் வெளியே வருவார்கள். எதற்கு வருகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

“சசிகலாவை சிறை மீட்க கூடுவிட்டுக் கூடு பாய்ந்தேன்!”

கடந்த 10-ம் தேதி, கார்த்திக் வீட்டிலிருந்து பிணவாடை வீசியது. சந்தேகப்பட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தேன். போலீஸார் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோதுதான் உக்கிரகாளியின் சிலைகள் அருகே ஒரு பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி மண்டை ஓடுகள், கடல் குதிரைகள், எலுமிச்சைப் பழங்கள், பில்லி சூனியத்துக்குப் பயன்படுத்தும் கறுப்பு மை ஆகியவை இருந்தன.

அதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பில்லி, சூனியம் பற்றி அவர் வகுப்பு எடுத்திருக்கிறார். அத்துடன், இறந்தவர்களுடைய ஆவிகளுடன் அவர்களின் உறவினர்களைப் பேச வைப்பதற்கான பூஜைகளையும் நடத்தியுள்ளார். பெண்களையும் ஆண்களையும் வசியம் செய்வதாகவும் ஏமாற்றி வந்துள்ளார். இரவு நேரத்தில் அந்த வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுகொண்டே இருக்கும். பயத்தில் இரவில் வெளியில் செல்லவே மாட்டோம். இங்கே நாங்கள், பயத்துடனே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்’’ என்றார்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அருள் என்பவரிடம் பேசினோம். ‘‘இந்த நபர், ‘மந்திர உலகம்’ என்ற புத்தகத்தை எழுதி மாந்திரீகம் கற்றுக்கொடுப்பதாக மக்களை நம்ப வைத்துள்ளார். பில்லி, சூனியம் கற்றுக்கொடுக்க நபர் ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் வசூலித்துள்ளார். இறந்தவர்களின் ஆன்மாவுடன் பேசுவதற்கு 50 ஆயிரம் ரூபாய், ஒருவரின் எதிரியைச் செயலிழக்க வைக்க 75 ஆயிரம் ரூபாய் என விலைப்பட்டியல் போடாத குறையாக விளம்பரம் கொடுக்கிறார். இதற்கு முன்பு, 2015 ஏப்ரல் 18-ம் தேதி பெரம்பலூர் அருகே உள்ள மருதடி கிராமத்தில் இரவு நேரத்தில் நரபலி கொடுக்கிறார்கள் என்று பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் கார்த்திக் கைது செய்யப்பட்டார். அப்போது நடந்த விசாரணையில், மனித மூளையைக்கூட சேலம், தர்மபுரி மாவட்டங்களிலிருந்து வாங்கியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டார். ஆனால், இரண்டே நாள்களில் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

கார்த்திக்கை போலீஸார் கைது செய்தபோது, ‘சின்னம்மா சசிகலாவை சிறையிலிருந்து வெளியில் கொண்டுவருவதற்காகத்தான் கூடுவிட்டுக் கூடு பாய்ந்துகொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் தேவையில்லாமல் என்னைக் கைது செய்துவிட்டீர்கள்’ எனக் கூறியுள்ளார். ‘எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். சின்னம்மாவை வெளியில் கொண்டுவருகிறேன். அவர் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக நரபலி கொடுத்துள்ளேன்’ என்றும் அதிர்ச்சி கிளப்பியுள்ளார். மாந்திரீகத்துக்காகப் பயன்படுத்தப் பெண்ணின் உடல் இவருக்கு எப்படிக் கிடைத்தது? இரண்டு பைகள் நிறைய பெண்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் இவரிடம் இருந்துள்ளன. மற்றொரு பையில் கட்டுக்கட்டாகப் புதிய ரூபாய் நோட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்கள். ‘என்னிடம் இரண்டாயிரம் ஆவிகள் உள்ளன. அந்த ஆவிகளை யார் மீது வேண்டுமானாலும் ஏவ முடியும்’ என்று பீதியைக் கிளப்பியுள்ளார். இதெல்லாம் காவல்துறையின் அலட்சியத்தால் நடந்ததா... இல்லை, அவர்களின் முழு ஒத்துழைப்புடன் நடந்ததா என்று தெரியவில்லை’’ என்று முடித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“சசிகலாவை சிறை மீட்க கூடுவிட்டுக் கூடு பாய்ந்தேன்!”

வழக்கை விசாரித்துவரும் பெரம்பலூர் டி.எஸ்.பி கார்த்திக்கிடம் பேசினோம். ‘‘மாந்திரீகம் கற்றுக்கொடுப்பதாக கார்த்திக் பலரையும் ஏமாற்றியுள்ளார். பூஜைக்குப் பயன்படுத்திய பெண்ணின் உடலை, சென்னையில் சுடுகாட்டில் வேலை செய்பவர்களிடமிருந்து வாங்கியுள்ளார். இவரால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என விசாரித்து வருகிறோம். ஜாமீனில் வெளியில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளோம். கார்த்திக்குக்கு உடந்தையாக இருந்த ஐந்து பேரைக் கைது செய்துள்ளோம். என்னையே மூளைச்சலவை செய்கிற அளவுக்குப் பேசுகிறார் அவர்’’ என்றார்.

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்... எங்கே போய்க்கொண்டிருக்கிறது நாடு?

- எம்.திலீபன்
படங்கள்: ராபர்ட்