Published:Updated:

‘அடித்தட்டுக் குடும்பங்களில் இருந்து படிக்கவரும் மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்காதீர்கள்?

‘அடித்தட்டுக் குடும்பங்களில் இருந்து படிக்கவரும் மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்காதீர்கள்?
பிரீமியம் ஸ்டோரி
News
‘அடித்தட்டுக் குடும்பங்களில் இருந்து படிக்கவரும் மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்காதீர்கள்?

‘அடித்தட்டுக் குடும்பங்களில் இருந்து படிக்கவரும் மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்காதீர்கள்?

‘எங்குமே எங்களுக்குச் சம உரிமை கிடைப்பதில்லை. அடித்தட்டுக் குடும்பங்களிலிருந்து படிக்க வரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்காதீர்கள். அவர்களின் கனவுகளுக்குத் தடை போடாதீர்கள்! அதைக் கொடுங்கள்!’

- சேலத்தில் பிறந்து, தன் திறமையால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) பிஹெச்.டி ஆராய்ச்சி வாய்ப்பு பெறும் உயரத்துக்குச் சென்ற முத்துகிருஷ்ணன், தன் மரணத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக எழுதிய ஃபேஸ்புக் பதிவு இது. ரோஹித் வெமுலா, செந்தில்குமார் வரிசையில், இப்போது முத்துகிருஷ்ணனும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பல்கலைக்கழகம் சார்பாகக் கொடுக்கப்பட்ட மறைமுக நெருக்கடியே இவரின் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம்’ என்று பல்கலைக்கழக மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

‘அடித்தட்டுக் குடும்பங்களில் இருந்து படிக்கவரும் மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்காதீர்கள்?

முத்துகிருஷ்ணன், வரலாற்றுத் துறை ஆய்வியல் மாணவர். இவர், சேலத்தைச் சேர்ந்த ஜீவானந்தம்  - அலமேலு தம்பதியினரின் மகன். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கடும் பொருளாதார நெருக்கடி இருந்தபோதும் படிப்பைப் பாதியில் நிறுத்தாமல் தொடர்ந்து போராடி, உயர்கல்விவரை வந்துள்ளார். இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பை சேலத்தில் முடித்து, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் ஆய்வு முடித்தார். இதைத் தொடர்ந்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பில் சேருவதற்கு நுழைவுத்தேர்வை எழுதி, அதில் வெற்றியும் பெற்றார்.

இந்த நிலையில், பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே முனிர்கா விஹார் பகுதியில் நண்பர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்ற அவர், 13.3.2017 அன்று தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார். இந்த மர்ம மரணம் தொடர்பாக ஜே.என்.யூ தமிழ்த்துறை மாணவர் ஞானமணியிடம் பேசினோம். ‘‘இது, மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இவர் எல்லோருக்கும் உற்சாகம் தரக்கூடிய நல்ல நண்பர். சிறந்த  படிப்பாளி. கடந்த இரண்டு நாள்களாகச் சோர்வாக இருந்துள்ளார்.

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் படித்தபோது, ரோஹித் வெமுலாவின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். ரோஹித் வெமுலா உயிரிழந்தபோது, அவருடைய மரணத்துக்கு நீதி கேட்டு தீவிரமாகப் போராடியவர் இவர். மாணவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், முதல் ஆளாக நிற்கக்கூடியவர். இந்த நிலையில் டெல்லிக்குப் படிக்க வந்தார். ஜே.என்.யூ-வில் உள்ள பாபா சாகேப் அம்பேத்கர் அமைப்பிலும் தன்னை இணைத்துக்கொண்டு, அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவர் நஜித் என்பவர் காணாமல் போனபோது, அவரை மீட்கக்கோரி நடந்த போராட்டத்திலும் பங்கேற்றார். அவரை ஒடுக்குவதற்கு வேறு சில மாணவ அமைப்புகளும், பல்கலைக்கழக நிர்வாகமும் மறைமுக நெருக்கடி கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்” என்றார்.

‘பல்கலைக்கழகத்தின் விதிமுறைதான் முத்துகிருஷ்ணனைக் கொலை செய்தது’ என்கிறார்கள் அவரின் நண்பர்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிய விதிமுறைகளைப் பல்கலைக்கழகம் கொண்டுவந்துள்ளது. புராஜெக்ட்டுக்குத் (project) தனி மதிப்பெண்ணும், வைவாவுக்குத் தனி மதிப்பெண்ணும் என்று இருந்த முறையை மாற்றி, இரண்டையும் இணைத்து மதிப்பெண் வழங்க முடிவு செய்துள்ளது. போராட்டத்தில் இறங்கும் மாணவர்களை ஒடுக்குவதற்காகவே இப்படிச் செய்ததாகச் சொல்கின்றனர். ‘எவ்வளவு சிறப்பாகப் படித்தாலும் பேராசிரியர் நினைத்தால் அந்த மாணவனைத் தோல்வி அடையச் செய்ய முடியும்’ என்பதாலேயே இந்த முறையைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறுகிறார்கள். அது மட்டுமன்றி பேராசிரியர்களும், உதவிப் பேராசிரியர்களும் குறிப்பிட்ட அளவிலான ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டுமே ‘கைடு’ ஆக இருக்க முடியும் என்றும் உத்தரவு வந்துள்ளது. இது மாணவர்களுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதில் கலந்துகொண்டார் முத்துகிருஷ்ணன். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ‘‘இதன் காரணமாக அவர் மறைமுகமாக மிரட்டப்பட்டு இருக்கலாம். அல்லது அவரை அவமானப்படுத்தி இருக்கலாம். அதனால் இந்த முடிவை எடுத்திருப்பாரா என்று சந்தேகிக்கிறோம்” என்றார் ஞானமணி கண்ணீருடன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘அடித்தட்டுக் குடும்பங்களில் இருந்து படிக்கவரும் மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்காதீர்கள்?

முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந் தம், ‘‘தற்கொலை செய்துகொள்கிற அளவுக்கு என் மகன் கோழை அல்ல. ஆரம்பக்காலத்தில் இருந்தே, அவன் மாணவர் போராட்டங்களில் பங்கெடுத்தவன். இதுபோன்ற முடிவை ஒருபோதும் எடுத்திருக்க மாட்டான்’’ என்றார், துக்கம் தாங்காமல். முத்துகிருஷ்ணனின் குடும்பம், அவரின் உடலை வாங்க மறுத்து, சி.பி.ஐ விசாரணை கோரியுள்ளது.

இந்த மர்ம மரணம் குறித்து தொடர்ந்து தகவல் கொடுத்துவந்த சமூக ஆர்வலர் ‘எவிடன்ஸ்’ கதிரிடம் பேசினோம். ‘’தலித் சமூகத்தில் இருந்துவந்த மாணவர் என்பதால், அவர்மீது சாதியரீதியிலான தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இவர், ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தில் வரும் வசனங்களைத் தொடர்ந்து பேசி வந்துள்ளார். சடலமாக முத்துகிருஷ்ணன் கிடந்தபோது அங்குவந்த போலீஸார், ‘இது தற்கொலை’ என்று அழுத்தமாகக் கூறியுள்ளனர். தற்கொலை என்று சொல்ல அவர்கள் என்ன மருத்துவர்களா? அப்படியே இருந்தாலும்கூட பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பிறகே, மரணம் எந்த முறையில் நிகழ்ந்துள்ளது என்று சொல்ல முடியும். மேலும், மாணவர் இறந்த விவரத்தைப் பதிவாளருக்குத் தெரிவித்தும், அவர் அந்த இடத்துக்குச் செல்லவில்லை. இறப்புச் செய்தியை முத்துகிருஷ்ணனின் பெற்றோருக்கு அங்கிருந்த மாணவர்கள்தான் தெரிவித்துள்ளனர். அவருடைய மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்’’ என்றார்.

கல்வி நிலையங்கள் மரணவாசல்களாக மாறிப்போவது வேதனை!

- கே.புவனேஸ்வரி