Published:Updated:

இதய நலம் என்ன ஆகும்? - ஸ்டன்ட் அடிக்கும் ‘ஸ்டென்ட்’ பிரச்னை!

இதய நலம் என்ன ஆகும்? - ஸ்டன்ட் அடிக்கும் ‘ஸ்டென்ட்’ பிரச்னை!
பிரீமியம் ஸ்டோரி
News
இதய நலம் என்ன ஆகும்? - ஸ்டன்ட் அடிக்கும் ‘ஸ்டென்ட்’ பிரச்னை!

இதய நலம் என்ன ஆகும்? - ஸ்டன்ட் அடிக்கும் ‘ஸ்டென்ட்’ பிரச்னை!

‘இதய நோயாளிகளின் உயிரைக் காக்கும் ஸ்டென்ட் விலையைப் பல மடங்கு  குறைத்திருக்கிறேன். காங்கிரஸ், இதை ஏன் செய்யவில்லை?’ என்று உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தில் முழங்கினார், பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், அவர் சொல்லாத ஒரு விஷயம்... ‘ஒரு வழக்கறிஞரின் மூன்று ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, வேறு வழியில்லாமல்தான் இதை மத்திய அரசு செய்தது’ என்பது! அந்தப் பெருமைக்குரியவர், டெல்லி வழக்கறிஞர் பிரேந்தர் சங்வான்.

‘இந்தியாவில் இதய நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்குத் தேவையில்லாமலே ஸ்டென்ட் பொருத்தப்படுகிறது’ என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ‘ஒரு ஸ்டென்ட், அதன் தயாரிப்புக்கு ஆகிற செலவைவிட 10 முதல் 15 மடங்கு அதிக விலையில் நோயாளிகளுக்கு விற்கப்படுகிறது’ என ஒரு குற்றச்சாட்டு இருக்கும் நிலையில்தான், இப்படி ஒரு விலைக் கட்டுப்பாடு அறிவிப்பு வந்திருக்கிறது. ‘இதன்மூலம் இந்தியாவில் இதய நோயாளிகளுக்கு ஓர் ஆண்டில் 4,450 கோடி ரூபாய் செலவு குறையும்’ என்கிறது மத்திய அரசு.

இதய நலம் என்ன ஆகும்? - ஸ்டன்ட் அடிக்கும் ‘ஸ்டென்ட்’ பிரச்னை!

ஸ்டென்ட் எதற்கு?

இந்த விஷயத்துக்குள் போகும்முன், ஸ்டென்ட்கள் பற்றி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் இன்டர் வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் சதானந்தம் சொல்வதைக் கேட்போம். “இதய நோயாளிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தால் பைபாஸ் சர்ஜரியும், ஒரேயொரு குழாயில் மட்டும் அடைப்பு இருந்தால் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். இந்தச் சிகிச்சையின்போது சிறிய, மெல்லிய கம்பி ஒன்று கணிப்பொறியின் மேற்பார்வையில் ரத்தநாளங்களில் நுழைந்து அடைப்பை நீக்கும். கம்பியின் நுனியில் பலூன் ஒன்று பொருத்தப் பட்டிருக்கும். அடைப்பை நீக்கியபின், அந்த பலூன் விரிவடைந்து அதில் உள்ள வலை போன்ற ஸ்டென்ட் அங்கே பொருத்தப்படும்.  இதனால், ரத்த ஓட்டம் தடையின்றிச் செல்லும். இந்த ஸ்டென்ட்கள் கோபால்ட் குரோமியம் உலோகக் கலவை அல்லது ஸ்டீல் போன்ற உலோகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய ஸ்பிரிங் வடிவிலானவை.

ஸ்டென்ட்டில் மூன்று வகைகள் உண்டு. ஒன்று, பேர் மெட்டல் ஸ்டென்ட் (பி.எம்.எஸ்). இது வெறும் உலோக ஸ்பிரிங். நமது உடலுக்கு இது ஒரு அந்நியப் பொருள். எனவே, இது பொருத்தப்பட்ட சில மாதங்களிலேயே, உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையின் காரணமாக, ரத்தக்கட்டி உருவாகி மீண்டும் அந்த இடத்தில் அடைப்புகளை ஏற்படுத்தும். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க உருவாக்கப்பட்டதுதான், மருந்து வெளியிடும் ஸ்டென்ட் (டிரக் எல்யூட்டிங் ஸ்டென்ட்- டி.ஈ.எஸ்). இதில் ஆன்டிமைட்டாடிக் மருந்துகள் தடவப்படுகின்றன. இதனால், ஸ்டென்ட் பொருத்தப்பட்ட இடத்தில் ரத்தக்கட்டிகள் உருவாவது குறைக்கப்படுகிறது. இந்த ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பிறகு, குறிப்பிட்ட காலஅளவுக்கு, ரத்தத்தட்டுகளின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிற ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளையும் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். மூன்றாவது வகை, பயோ டிகிரேடபிள் ஸ்டென்ட். தற்போதுதான் இவை மார்க்கெட்டுக்கு வரத்தொடங்கி உள்ளன. இந்த ஸ்டென்டுகள், பொருத்தப்பட்ட மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் உடலிலேயே கரைந்துபோகக்கூடியவை’’ என்றார்.

இதய நலம் என்ன ஆகும்? - ஸ்டன்ட் அடிக்கும் ‘ஸ்டென்ட்’ பிரச்னை!

என்ன விலை?

ஸ்டென்ட் மூலம் கொள்ளை லாபம் சம்பாதித்துவந்த மருந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள், மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் அடங்கிய நெட்வொர்க்கை ஆட்டம் காணச் செய்திருக்கிறார், வழக்கறிஞர் பிரேந்தர் சங்வான். டெல்லியில் அவரை சந்தித்துப் பேசினோம்.  ‘‘டெல்லிக்கு அருகில் உள்ள ஃபரீதாபாத் மெட்ரோ மருத்துவமனையில், 2014-ம் ஆண்டு செப்டம்பரில், என் நண்பரின் அப்பாவுக்கு இதய நோய் பிரச்னைக்காக ஸ்டென்ட் பொருத்தினார்கள். சிகிச்சைக் கட்டணங்கள் ஒருபக்கம் இருக்க, இந்த ஸ்டென்ட்டுக்கான கட்டணமாக மட்டும் ஒரு லட்சம் ரூபாய் வசூலித்தது மருத்துவமனை நிர்வாகம். அந்த ஸ்டென்ட்டை அவர்கள் என்ன விலைக்கு வாங்கினார்கள் எனக் கேட்டபோது, அதன் விலை விவரங்களைத் தெரிவிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு தாக்கல் செய்து விவரங்களைப் பெற்றபோது, எனக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு ஸ்டென்ட், அதன் தயாரிப்பு விலையைவிட பல மடங்கு அதிகமான விலையில் நோயாளியிடம் விற்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு டி.ஈ.எஸ் ஸ்டென்ட்டை உருவாக்க, வெறும் எட்டாயிரம் ரூபாய்தான் ஆகிறது. ஆனால், அதற்கு அதன் உற்பத்தியாளர், லாபமாக ஒரு தொகையை வைத்து விற்கிறார். விநியோகஸ்தர், மருத்துவமனை, மருத்துவர் எனப் பலரும் அதில் லாபம் பார்க்க நினைக்க, கடைசியில் நோயாளிக்கு அது ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகம். இதைத் தவிர, அதைப் பொருத்தும் செலவையும் சேர்த்து இரண்டு லட்சம் ரூபாய் வரையில் கட்டணம் வசூலிக்கிறாா்கள். இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான ஸ்டென்ட்கள் அபாட், மெட்ரானிக்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டுத் தயாரிப்புகள்தான். இறக்குமதி செய்யப்படும் இந்த ஸ்டென்ட்களுக்கு சுங்கவரியை அரசு விதிக்கவில்லை. ஆனாலும்கூட, ஏன் இந்த அளவுக்கு விலை உயர்வு? இது அநியாயம் இல்லையா? இந்தக் கொள்ளையைத் தடுக்கத்தான் களம் இறங்கினேன்’’ என்கிறார் சங்வான்.

இதய நலம் என்ன ஆகும்? - ஸ்டன்ட் அடிக்கும் ‘ஸ்டென்ட்’ பிரச்னை!

விலையைக் குறைக்க வழக்கு!

தொடர்ச்சியாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடர்ந்தார் சங்வான். ‘ஸ்டென்ட்’ என்பது மருந்துகளின் பட்டியலில் இருந்தது. ஆனால், தேசிய உயிர் காக்கும் மருந்துகள் பட்டியலில் (National List of Essential Medicines - NLEM) அது சேர்க்கப்படவில்லை. அதில் சேர்த்தால்தான், அதற்கு விலைக் கட்டுப்பாடு விதிக்க முடியும். பொதுநல வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எனப் போராடி, இதை முதலில் சாதித்தார் சங்வான். 2016 ஜூலையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை, ஸ்டென்ட்களை தேசிய உயிர் காக்கும் மருந்துகள் பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, ‘ஸ்டென்ட் களுக்கு தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம் (National Pharmaceutical Pricing Authority -NPPA) விலையை நிர்ணயிக்க வேண்டும்’ என அடுத்த வழக்கைப் போட்டார் சங்வான். நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டதால், வேறு வழியின்றி மத்திய அரசு இப்போது விலை நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, பேர் மெட்டல் ஸ்டென்ட்டின் விலை 7,260 ரூபாய். (ஏற்கெனவே இதன் விலை 45,100 ரூபாய்). டிரக் எல்யூட்டிங் ஸ்டென்ட்டின் விலை 29,600 ரூபாய். (ஏற்கெனவே இதன் விலை ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்). 

இதுபோன்ற மருத்துவத் தொழில்நுட்பங்களை எளியவர்களுக்கும் கொண்டு செல்ல அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். 

‘‘இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய முதலீட்டாளர்களாக இருக்கும் மருந்து கம்பெனிகள், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நடத்தும் அரசியல்தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அச்சாணியே. வெளிநாடுகளில்  மருத்துவத் துறையின் விலை நிர்ணயம் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இங்கும் அதுபோல அரசின் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஸ்டென்ட் தெரபி குறைந்த விலையில் கொடுக்கப்பட வேண்டும் என சமீபத்தில் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரும் நோயாளிகளுக்குத் தரமான ஸ்டென்ட்கள் பொருத்தப்படுவது இல்லை. எனவே, காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள ஸ்டென்ட்களின் விலையையே அனைத்து வகையான ஸ்டென்ட்களுக்கும் உச்சவரம்பாக அறிவிக்கலாம்’’ என்றார் அவர்.

பிரேந்தர் சங்வான், அடுத்து முழங்கால், இடுப்பு மற்றும் உடல் சீரமைப்பு சார்ந்த ஆர்த்தோ மருத்துவ உபகரணங்களின் விலை குறைப்புக்கான சட்டப்போராட்டத்தை நடத்தத் தயாராகி வருகிறார். அந்த அக்கறைப் போராட்டம் வெல்லட்டும்!

- க.தனலட்சுமி, ஸ்ரீலோபாமுத்ரா

ஸ்டென்ட் விலை நிர்ணயத்தால், இனி ஏழை எளிய மக்களும் இந்தச் சிகிச்சையைக் குறைந்த கட்டணத்தில் பெற முடியும். ஆனால், இந்த விலைக் குறைப்புக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, மருத்துவமனைகளும் எதிர்ப்பு தெரிவித்ததுதான் வேதனை. பல பெருநகரங்களில் ஸ்டென்ட்டுக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஸ்டென்ட் தொடர்பான எந்தப் பிரச்னைக்கும், தேசிய மருந்துபொருள் விலை நிர்ணய ஆணையத்தின் 1800111255 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.