Published:Updated:

“நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா?” - கொந்தளிக்கும் விவசாயிகள்

“நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா?” - கொந்தளிக்கும் விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
“நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா?” - கொந்தளிக்கும் விவசாயிகள்

“நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா?” - கொந்தளிக்கும் விவசாயிகள்

ண்டை ஓடுகளையும், மண் சட்டிகளையும் கைகளில் ஏந்தியவாறு போராட்டம் நடத்தி தலைநகர் டெல்லியை அதிர வைத்துள்ளார்கள் தமிழக விவசாயிகள். தமிழகத்தில் கடந்த சில மாதங்களில், வறட்சியின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். பயிர்கள் கருகியதால் லட்சக்கணக்கான விவசாயிகள் கண்ணீரில் கதறுகிறார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்காததால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். வெறும் இடுபொருள் நிவாரணத்தை மட்டுமே தமிழக அரசு அறிவித்ததால் விவசாயிகள் மனம் வெறுத்துப்போயிருக்கிறார்கள்.

“நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா?” - கொந்தளிக்கும் விவசாயிகள்

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 32,30,191 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக 2,247 கோடி ரூபாயை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது, ‘யானைப்பசிக்கு சோளப்பொரி’ என்று விவசாயிகள் சங்கங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இது குறித்து விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் மாநிலத் தலைவர் தெய்வசிகாமணி, “பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் இதர பாசனப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5,465 ரூபாய், மானாவாரிப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய், நீண்டகாலப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7,287 ரூபாய் என அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை போதுமானதாக இல்லை. வங்கிகளில் நெல்லுக்கு ஓர் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய், கரும்புக்கு ஓர் ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாய் கடன் கொடுக்கிறார்கள். இந்தக் கடனைக் கட்டுவதற்கான நிவாரணத்தையாவது அரசு கொடுக்க வேண்டாமா?” என்றார்.

“நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா?” - கொந்தளிக்கும் விவசாயிகள்

“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களையும் ‘வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்’ என்று தமிழக அரசு அறிவித்து விட்டது. ஒட்டுமொத்த விவசாயிகளும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்த நிலையில், வெறும் 2,247 கோடி ரூபாயை நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, விவசாயிகளின் துயரைத் துடைக்கப் போதுமானது அல்ல. ஒருவேளை, மாநில அரசால் முழுமையான நிவாரணத்தைக் கொடுக்க முடியாத நிலை இருந்தால், தேசியப் பேரிடராகக் கருதி மத்திய அரசிடம் இருந்து உரிய நிதியைப் பெற்றுத் தர வேண்டாமா? கர்நாடகத்தில் இந்த அளவுக்குப் பாதிப்பு இல்லை. அந்த மாநிலத்துக்கு 7,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது; இன்னும் கூடுதல் நிதி அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளது. ஏதோ பிச்சைக்காரர் களுக்குக் சில சில்லறைகளைத் தூக்கி வீசுவதைப்போல, தமிழக அரசின் இந்த நிவாரணம் உள்ளது” என்றார், தமிழக உழவர் முன்னணியின் தலைமை ஆலோசகர் கி.வெங்கட்ராமன்.

“நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா?” - கொந்தளிக்கும் விவசாயிகள்

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், “விவசாயிகளுக்கு, உற்பத்திச் செலவை இழப்பீடாகத் தருவதாகச் சொல்லி நிவாரணத்தொகையை 2013-ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா கொடுத்தார். அதில் தேசியப் பேரிடர் நிதி, காப்பீட்டு நிதி, மாநில நிவாரண நிதி என மூன்றையும் சேர்த்து வழங்கினார். அதற்கான ஆணையும் போட்டுள்ளார். அப்படி இருக்கும்போது, ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றுவதாகச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஜெயலலிதாவின் ஆணையை முற்றிலுமாகக் கைவிட்டு நிவாரண உதவியை அறிவித்துள்ளது. இது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. உற்பத்தித் தொகையைக் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைத்து ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயாக அறிவிக்க வேண்டும். மத்திய காலக் கடனாக மாற்றியிருப்பது விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய வங்கிகளில் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்’’ என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், “வறட்சியின் பாதிப்பால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பலர் அதிர்ச்சி மரணம் அடைந்துள்ளனர். வறட்சி பாதிப்பின் தீவிரத்தைத் தமிழக அரசு உணரவில்லை என்பதையே, இந்த நிவாரண அறிவிப்பு உணர்த்துகிறது. இது வறட்சி நிவாரணமும் அல்ல, வெறும் இடுபொருள் நிவாரணம்தான். தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி  ஏக்கருக்கும் மேல் விவசாய நிலம் உள்ளது. சுமார் 50 லட்சம் ஏக்கருக்குத் தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், 14 லட்சத்து 89 ஆயிரம் பேர்தான் காப்பீடு செய்துள்ளதாக அரசின் கணக்கில் உள்ளது. எனவே, அந்தக் காப்பீடு என்பது சுமார் 15 லட்சம் பேருக்குத்தான் கிடைக்கும். வறட்சியால் விவசாயத் தொழிலாளர் களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டல்படி, விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

 தான் ஒரு விவசாயி என்று மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் மீது காட்டும் கரிசனம் இதுதானா?

- கே.புவனேஸ்வரி