Published:Updated:

நேற்று சாக்கடை... இன்று கண்மாய்! - சாதித்த கோவில்பட்டி இளைஞர்கள்

நேற்று சாக்கடை... இன்று கண்மாய்! - சாதித்த கோவில்பட்டி இளைஞர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
நேற்று சாக்கடை... இன்று கண்மாய்! - சாதித்த கோவில்பட்டி இளைஞர்கள்

நேற்று சாக்கடை... இன்று கண்மாய்! - சாதித்த கோவில்பட்டி இளைஞர்கள்

நேற்று சாக்கடை... இன்று கண்மாய்! - சாதித்த கோவில்பட்டி இளைஞர்கள்

வாடிவாசலும், நெடுவாசலும் கொடுத்த நம்பிக்கை, உற்சாகத்தில் பல சமூகப் பணிகளில் களமிறங்கி சாதித்து வருகிறார்கள் தமிழக இளைஞர்கள். பல ஆண்டுகாலமாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த கோவில்பட்டி கண்மாயை, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்களும் மாணவர்களும் தூர்வாரி, சீரமைத்து இருக்கிறார்கள்.

 கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ளது மூப்பன்பட்டி கண்மாய். கோவில்பட்டி வட்டாரத்தில் பாசனத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கிவந்த இந்தக் கண்மாய், கடந்த பல ஆண்டுகளாகக் கழிவுநீர் கலந்து, சாக்கடையாக மாற்றப்பட்டது. இந்தக் கண்மாயைத்தான் இளைஞர்களும் மாணவர்களும் தங்கள் உழைப்பால் மீட்டெடுத்துள்ளார்கள். 

நேற்று சாக்கடை... இன்று கண்மாய்! - சாதித்த கோவில்பட்டி இளைஞர்கள்

இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தவர்களில் ஒருவர் ராம் பிரகாஷ். இவர், எம்.இ முதலாம் ஆண்டு மாணவர். அவரிடம் பேசினோம். “முதலில் நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து, நம் சமூகத்துக்குப் பயன்படுகிற மாதிரி ஏதாவது செய்யவேண்டும் என விவாதித்தோம். சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு, கண்மாய் தூர்வாருதல், மரங்கள் நடுதல் என பல விஷயங்களைப் பேசினோம். இ-அப்ளிகேஷன் ஃபார்ம் மாதிரி, கூகுள் ஃபார்ம் ஒன்றை உருவாக்கினோம். அதன் மூலம் சீமைக்கருவேலம் ஒழிப்பு, கண்மாய் தூர்வாருதல், மரம் நடுதல் போன்ற சமூகப் பணிகளைச் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பெயர்களைப் பதிவுசெய்யுமாறு கேட்டோம். விருப்பமுள்ளவர்களின் வாட்ஸ் அப் எண், ஃபேஸ்புக் ஐ.டி, வீட்டு முகவரி, களப்பணி செய்ய தயாராக இருக்கும் நேரம் போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அனுப்புமாறு சமூக வலைதளங்கள் மூலமாகக் கேட்டிருந்தோம். அதற்குப் பெரும் ஆதரவு கிடைத்தது. இதுவரை, 260 பேருக்கும் அதிகமானோர் சேர்ந்திருக்கிறார்கள். ‘கோ க்ரீன் கே.வி.பி’னு வாட்ஸ்அப்பில் ஒரு குரூப் ஆரம்பிச்சு என்னென்ன சமூகப்பணிகள் செய்யலாம் என விவாதித்தோம். கண்மாயைத் தூர்வாரும் பணிக்குத்தான் அதிகமானோர் ஆர்வம் காட்டினார்கள். மூப்பன்பட்டி கண்மாய் தான், கோவில்பட்டியிலேயே பெரிய கண்மாய். கோவில்பட்டி ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தக் கண்மாயின் பரப்பளவு 29.5 ஏக்கர். இந்தக் கண்மாயின் தண்ணீரை வைத்துதான், முப்பது வருஷத்துக்கு முன்பு வரை, இந்த வட்டாரத்தில் விவசாயம் நடந்தது. அதற்குப் பிறகு கழிவுநீர் கலந்து, இந்தக் கண்மாய், சாக்கடையா மாறிப்போச்சு. இதை நாங்கள் தூர்வாரத் தொடங்கினோம்’’ என்றார்.

நேற்று சாக்கடை... இன்று கண்மாய்! - சாதித்த கோவில்பட்டி இளைஞர்கள்

கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெபஸ்டின் ஜெபராஜ், “கோவில்பட்டி தாசில்தாரிடம் நேர்ல போய் பேசினோம். கண்மாயைத் தூர்வார அனுமதி கேட்டோம். உடனே அனுமதி கொடுத் துட்டார். கடந்த பிப்ரவரி 19-ம் தேதி, கண்மாயைத் தூர்வாரும் பணியை ஆரம்பிச்சோம். கடப்பாறை, மண்வெட்டியோட களத்துல இறங்கினோம். கண்மாய் கரையைச் சுற்றி இருந்த சீமைக்கருவேல மரங்களை முதலில் வெட்டி அகற்றினோம். ஜே.சி.பி-யில் கழிவுகளை அள்ளியபோதுதான் அதிர்ந்துபோனோம். கண்மாய் மண்ணுக்குள்ளே 70 சதவிகிதம் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன. தரை மட்டத்துல இருந்து ரெண்டு அடி ஆழத்துக்கு பிளாஸ்டிக் தாள்கள் கிடந்தன. மாணவர்கள், இளைஞர்கள் பங்களிப்புத் தொகையா 40 ஆயிரம் ரூபாய் கிடைச்சது. அதை, ஜே.சி.பி வாடகையா கொடுத்துட்டோம். தினமும் காலை ஒன்பது மணியில் இருந்து சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் ரெண்டு ஜே.சி.பி பணியில இருக்கும். வெளியில் இருந்து சில தன்னார்வலர் களிடம் இருந்து பணம்  வாங்கி ஜே.சி.பி-க்கு பில் செட்டில் பண்றோம். ஊர்ல உள்ள கழிவுநீர் எல்லாமே இந்தக் கண்மாய்லதான் கலக்குது. கண்மாய்க்குள்ளே கழிவுநீர் தனியா போற மாதிரி வழி ஏற்படுத்தியிருக்கோம். தேங்கியுள்ள கழிவுநீரை மோட்டார் மூலமும் அப்புறப்படுத்தியிருக்கோம். இந்தக் கண்மாய் கரைக்கு அருகில் பனைமரக் கன்றுகள் நிறைய உள்ளன. அவற்றை ஜே.சி.பி-யால் பெயர்த்தெடுத்து குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்மாய்க் கரைகளைச் சுற்றிலும் வைக்கலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம். இத்துடன் எங்கள் பணி முடிந்துவிடாது. எங்கள் கோவில்பட்டி மண்ணுக்குத் தொடர்ந்து பயனுள்ள விஷயங்களைச் செய்துகிட்டே இருப்போம்’’ என்றார்.

இந்த இளைஞர்கள் எப்படிப் பணி செய்கிறார்கள் என்பதை அரசு அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர். கோவில்பட்டி மக்கள் மத்தியில் இந்த இளைஞர்களுக்குப் பாராட்டு மழைப் பொழிகிறது.

- இ.கார்த்திகேயன்

படங்கள்:
ஏ.சிதம்பரம்