Published:Updated:

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம்!: முதியோர் பென்ஷன்... குப்பைக் கிடங்கு... குடிநீர்ப் பிரச்னை... கொசுக்கடி...

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம்!: முதியோர் பென்ஷன்... குப்பைக் கிடங்கு... குடிநீர்ப் பிரச்னை... கொசுக்கடி...
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம்!: முதியோர் பென்ஷன்... குப்பைக் கிடங்கு... குடிநீர்ப் பிரச்னை... கொசுக்கடி...

ஆறு ஆண்டுகள் ஆண்ட அ.தி.மு.க-வின் சாதனைகள்

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம்!: முதியோர் பென்ஷன்... குப்பைக் கிடங்கு... குடிநீர்ப் பிரச்னை... கொசுக்கடி...

‘ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்து முதல்வர் ஆக்கிவிட்டோம். இனி ஆர்.கே.நகர் சொர்க்க பூமியாக மாறிவிடும்’ எனப் பெரிய மாற்றங்களை எதிர்பார்த்திருந்தனர் தொகுதிவாசிகள். ஆனால், கிடைத்தவை நலத் திட்டங்கள் அல்ல. அடுத் தடுத்த தேர்தல்கள்தான்!

2015-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும், 2016 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போதும் ஜெயலலிதாவை எம்.எல்.ஏ-வாக்கி முதல்வர் அரியணையில் அமர வைத்தது ஆர்.கே.நகர் தொகுதி! ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மீண்டும் ஒரு தேர்தலை இது எதிர் நோக்கியிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த மக்களுக்குக் கிடைத்தது மாற்றமா, ஏமாற்றமா... என்பதை அறிந்துகொள்வதற்காக தொகுதி முழுக்க வலம் வந்தோம்.

“இங்கு சில மினி பஸ்கள் விடப்பட்டன. ஒரு கலைக்கல்லூரி கொண்டுவரப்பட்டது. ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் திறக்கப்பட்டன. இவை மட்டும்தான் ஜெயலலிதாவால் தொகுதிக்குக் கிடைத்த நன்மைகள்” என்கிறார்கள் தொகுதிவாசிகள். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர் விஜியிடம் பேசினோம். “மிகவும் பின்தங்கிய பகுதி எழில் நகர். இங்கே குப்பைகளைத் தீவைத்துக் கொளுத்துகின்றனர். இதனால் புகை மூட்டம் சூழ்ந்து உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. புகார்கள் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அண்ணா நகர், கண்ணகி நகர், எழில் நகர் பகுதிகளில் குடிநீர் வருவதே இல்லை. பெரிய தெருக்களில் பழைய குடிநீர்க் குழாய்களை மாற்றியிருக்கிறார்கள். ஆனால், சிறிய தெருக்களின் குடிநீர்க் குழாய்கள் பழுதாகவே கிடக்கின்றன. காரனேசன் நகரில் குடிநீர் மிக மோசமாக பழுப்பு நிறத்தில் வருகிறது. 41-வது வார்டில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடிவிட்டு, மலேரியா துறைக்குக் கொடுத்துவிட்டனர். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கண்ணகி நகர், கருமாரி அம்மன் நகர், அண்ணா நகர் போன்ற இடங்களில் ‘ரேஷன் கார்டுகள் கொடுக்கிறோம்’ என அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள். ஆதரவற்றோருக்குப் பென்ஷன் தருவதில் அதிகமான முறைகேடுகள் நடக்கின்றன. முதியோர்களிடம் ஐந்து மாதங்களுக்குச் சேர்த்து கையெழுத்து வாங்கிவிட்டு, நான்கு மாதங்களுக்கு மட்டுமே பென்ஷன் கொடுகிறார்கள்” என்றார்.

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம்!: முதியோர் பென்ஷன்... குப்பைக் கிடங்கு... குடிநீர்ப் பிரச்னை... கொசுக்கடி...

ஆர்.கே.நகர் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் லோகநாதன் நம்மிடம், “கொருக்குப் பேட்டை, நான்கு பக்கங்களிலும் ரயில் பாதைகளால் சூழப்பட்டுள்ளது. பீக் ஹவர்களில் அடிக்கடி கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மணிக்கணக்கில், காத்திருக்க வேண்டியிருக்கிறது. சில நேரம் ஆம்புலன்ஸ்கள் மாட்டிக்கொண்டால் உள்ளிருக்கும் நோயாளிகள் நிலை கவலைக்கு உரியதாக மாறி விடுகிறது. இதைத் தவிர்க்க சுரங்கப் பாதையோ, மேம்பாலமோ அமைக்க வேண்டும் என்கிற பல ஆண்டு கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவே இல்லை. இதேபோல், காரனேசன் நகரில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம். கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் மேம்பாலம் கட்ட வேண்டும். அரசு கண்டுகொள்வதே இல்லை. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தின் மூலம் ஓராண்டில் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு அன்னியச் செலாவணி ஈட்டுகிறார்கள். ஆனால், மீன்பிடித் தொழிலாளர்களுக்கு கழிப்பறைகூட இல்லை. படகு நிறுத்தும் இடம், மீனவர்களின் குடியிருப்புகள் சுகாதாரக் குறைபாட்டுடன் இருக்கின்றன.

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம்!: முதியோர் பென்ஷன்... குப்பைக் கிடங்கு... குடிநீர்ப் பிரச்னை... கொசுக்கடி...

ஆர்.கே.நகரின் பெரும் பிரச்னையே, கொடுங்கையூர் குப்பை மேடுதான். இங்கே கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுவட்டாரமே பாதிக்கப்பட்டு இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மக்கள் ஆளாகின்றனர். நிலத்தடி நீரும் மாசுபட்டிருக்கிறது. ‘கொடுங்கையூரில் கொட்டப்படும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்போகிறோம்’ என தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா சொன்னார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. ஜெயலலிதா வருவதற்கு முன்னதாக அவர் வரும் சாலையை மட்டும் பளபளப்பாக்கினார்கள். உட்புற சாலைகளைக் கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதா இருந்தவரையில் தினந்தோறும் குப்பைகளை அள்ளினார்கள். இதற்காக 250 ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஜெயலலிதா இறந்த இரண்டாவது நாளில் அந்தத் தொழிலாளிகளைப் பணியில் இருந்து நிறுத்திவிட்டனர். இதனால் தொகுதியே குப்பைமேடாக மாறிவிட்டது” என்றார் வருத்தத்துடன்.

தொகுதிவாசிகளிடம் பேசினோம். அப்பாசாமி தெருவைத் சேர்ந்த சாமுண்டீஸ்வரி, “வீட்டில் குடிநீர் வந்து பல மாதங்கள் ஆகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் லாரி வருகிறது. இரண்டு குடங்கள் மட்டும்தான் பிடிக்க முடிகிறது’’ என்கிறார் சோகத்துடன்.

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம்!: முதியோர் பென்ஷன்... குப்பைக் கிடங்கு... குடிநீர்ப் பிரச்னை... கொசுக்கடி...

வீரா குட்டித் தெருவைச் சேர்ந்த பத்மா, “எங்கள் பகுதியில் நிறையப் பேருக்கு முதியோர் பென்ஷன் வரவில்லை. கழிவுநீர் அடிக்கடி அடைத்துக்கொள்கிறது. தேர்தல் வருவதால், இப்போதுதான் கால்வாயைச் சுத்தம் செய்து அடைப்பை நீக்குகின்றனர்” எனச் சொன்னார். அதே தெருவைச் சேர்ந்த கோவிந்தம்மா, “பென்ஷன் கேட்டு 10 மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை பென்ஷன் வரவில்லை. ஆனால், வசதி உள்ளவர்களுக்கு எல்லாம்கூட  முதியோர் பென்ஷன் தருகிறார்கள். ஊனமுற்ற மகனையும் நோயாளியான கணவரையும் வைத்துக்கொண்டுச் சிரமப்படும் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை” என்கிறார்.  

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம்!: முதியோர் பென்ஷன்... குப்பைக் கிடங்கு... குடிநீர்ப் பிரச்னை... கொசுக்கடி...

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கருணாமூர்த்தி, “நிலத்தடி நீரையெல்லாம் தொழிற்சாலைகள் உறிஞ்சி எடுத்துவிடுவதால், தண்ணீர் கிடைப்பதில்லை. ஜெயலலிதா எம்.எல்.ஏ-வாக இருந்தார் என்ற பெயர் மட்டும்தான் இந்தத் தொகுதிக்கு இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?” என்கிறார்.

எம்.சி.எம் கார்டன் 2-வது தெருவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, “தெருவில் சமூகவிரோதிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை இரவு, பகல் எந்த நேரமும் போலீஸ் ரோந்து இருக்கும். அவர் மறைவுக்குப் பிறகு போலீஸார் ரோந்து வருவதே இல்லை’’ என்கிறார்.

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம்!: முதியோர் பென்ஷன்... குப்பைக் கிடங்கு... குடிநீர்ப் பிரச்னை... கொசுக்கடி...

எம்.சி.எம் கார்டன் 3-வது தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், “குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார்கள் கொடுத்துவிட்டோம். ஆனால், எந்த இடத்தில் சாக்கடை நீர் கலக்கிறது என்று அவர்களால் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்றார். அதே தெருவைச் சேர்ந்த ஜெயந்தி, “எங்கள் தெரு அருகில் டாஸ்மாக் கடை இருக்கிறது. அங்கு குடித்து விட்டு வரும் ஆட்கள், போதையில் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மதுக்கடையை மாற்றும்படி சொன்னோம். அதையும் செய்யவில்லை” என்கிறார்.

அண்ணா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த பிரசாந்த், “அண்ணா நகர் பகுதியில் அம்மா வாரச் சந்தை என்று தொடங்க முயற்சி எடுத்தார்கள். இதற்காக பங்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய பகுதி சுத்தம் செய்யப்பட்டு, புதிய சாலைகளும் போடப்பட்டன. ஆனால், திட்டமிட்டபடி வாரச் சந்தை தொடங்கவில்லை. ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ‘பங்கிங்ஹாம் கால்வாய் ஓரம் இருப்பதால் வாரச் சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் வரமாட்டார்கள்’ என்கிறார்கள். திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பு இதை அரசாங்கம் ஏன் யோசிக்கவில்லை? பல லட்சம் ரூபாய் செலவு செய்த பிறகு, அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டிருக்கின்றனர்” என்றார்.

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம்!: முதியோர் பென்ஷன்... குப்பைக் கிடங்கு... குடிநீர்ப் பிரச்னை... கொசுக்கடி...

தொகுதியைச் சுற்றிவந்தபோது பல தரப்பினரும் சொன்ன விஷயங்கள் இவை... “ஜெயலலிதா இருந்தபோது புதிய தெருவிளக்குகள் போடப்பட்டன. முதல்வர் தொகுதி என்பதால், அவர் உயிருடன் இருந்த வரை மின்வெட்டு இல்லாமல் இருந்தது. அவர் உயிருடன் இருந்தபோது, ஏதாவது புகார் கொடுத்தால், அதிகாரிகள் பயந்துகொண்டு ஓடோடி வந்தார்கள். இப்போது குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் தண்ணீருக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. குப்பைமேட்டால் கொசுத்தொல்லை அதிகம். சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. கொசுக்கடியால் நோய்கள் வருகின்றன. சிறிய தெருக்களில்கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.’’

சாலை, குடிநீர், சாக்கடை, குப்பை, சுகாதார வசதி என தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் தொடர்பாக மக்கள் எழுப்பும் அவலக்குரல், சற்று அதிகமாகவே    ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் எழுகிறது. ‘முதல்வரின் தொகுதியாக இருந்தும் இதெல்லாம் தீரவில்லையே’ என்ற ஏக்கமும் இவர்களிடம் இருக்கிறது.

இந்த நிலையில் வந்திருக்கும் இடைத் தேர்தலும், தேர்தலுக்காக மேலோட்டமாகச் செய்யப்படும் சில நலத்திட்டங்களும் ஆர்.கே.நகர் மக்களின் கோபத்தை அதிகமாக்கி இருக்கிறது. இது தேர்தலில் எப்படி எதிரொலிக்கப் போகிறது என்பதே இப்போதைய கேள்வி!

- கே.பாலசுப்பிரமணி

படங்கள்: அ.முத்துக்குமார்