Published:Updated:

“பதில் சொல்ல வக்கில்லாதவர்கள் தேவையில்லை!”

“பதில் சொல்ல வக்கில்லாதவர்கள் தேவையில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பதில் சொல்ல வக்கில்லாதவர்கள் தேவையில்லை!”

- கூவத்தூர் எம்.எல்.ஏ-க்களைக் கூப்பிட்ட மக்கள்

“பதில் சொல்ல வக்கில்லாதவர்கள் தேவையில்லை!”

கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பலரும் பொதுமக்களை சந்திப்பதில்லை என்ற புகார் உள்ளது. இந்த நிலையில், பொதுமக்களையும் எம்.எல்.ஏ-க்களையும் இணைக்கும் பொதுமேடை நிகழ்ச்சி ஒன்றை இளைஞர்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்து நடத்தியுள்ளனர். இதில் அறப்போர் இயக்கமும் கைக்கோத்தது. ‘Coffee With MLAs’ என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட ஆளும்கட்சியின் 122 எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் கூட வரவில்லை. வரமாட்டார்கள் என்பதும் தெரிந்ததுதானே!

பறையாட்டத்துடன் களைகட்டிய நிகழ்ச்சியில் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ‘மக்கள் குரல்’ என்ற பெண்கள் குழுவினர் ஒன்று கூடி, அவர்களே உருவாக்கிய பாடலைப் பாடினர். ‘மக்கள் குரல் கேட்காம, மக்கள் குறைய தீர்க்காம, எங்கதான் இருக்கீங்க, என்னத்ததான் செய்யறீங்க, இங்க வந்து சொல்லுங்க’ என்று முழங்கிய அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் எம்.எல்.ஏ-க்களை உலுக்கியது. நிகழ்ச்சியில் பேசிய இளைஞர் அசோக்ராஜ், “நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு அனைத்து எம்.எல்.ஏ-க்களும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். தாங்கள் மக்களுக்கான சேவகர்கள் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. அதனால் கேள்விகள் கேட்போம், கேட்டுக்கொண்டே இருப்போம். பதில் சொல்ல வக்கில்லாதவர்கள், எங்களுக்குத் தேவையில்லை!” என்றார். இதை மொத்தக் கூட்டமும் வழிமொழிந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பலர் பங்கேற்றனர். இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, “வாக்களிப்பது மட்டுமே நம் ஜனநாயகக் கடமை அல்ல. தொகுதி எம்.எல்.ஏ-வின் பெயர்கூட தெரியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம். கூவத்தூருக்கு அவர்கள் போயிருக்கவில்லை என்றால், அவர்களுடைய பெயர்கள்கூட நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சின்னத்துக்கும், நடிகர்களுக்கும் ஓட்டு போடுவதைத் தவிர்த்து விட்டு,  அவர்கள் எப்படி பெயர் வாங்கியிருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடு என்ன என்பதைச் சிந்தித்து ஓட்டு போடும்போதுதான், சுதந்திரமான குடிமகனாக கடமையை நிறைவேற்றியதாக அர்த்தம்’’ என்றார் அதிரடியாக.

கல்வியாளர் வசந்திதேவி, “ஜல்லிக்கட்டு புரட்சி, நெடுவாசல் போராட்டம் என்று பிரச்னைகளை முன்னெடுத்து இளைஞர்கள் போராடுவது இந்த சமூகத்தின் மிகப் பெரிய எழுச்சி. உண்மையான ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் நாங்கள் தேங்கி இருந்து விட்டோம். நல்லவேளை, நீங்கள் போராடத் தொடங்கியுள்ளீர்கள். இந்தப் போராட்டம் வெற்றி பெறும்’’ என்றார்.

“பதில் சொல்ல வக்கில்லாதவர்கள் தேவையில்லை!”

நடிகை ரோகிணி, “இந்த எழுச்சி இதோடு நின்று விடக்கூடாது. ஆர்.கே.நகரிலும் தொடர வேண்டும். ஆர்.கே.நகரிலேயே தங்கி, தேர்தல் முடியும் வரை அந்த மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது” என்றார்.

ஆளுங்கட்சி  எம்.எல்.ஏ-க்களை  தொலைபேசியில் அழைத்துப் பேசும் லைவ் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், நிலோபர் கபில், எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோரை அழைத்தனர். சிலரின் போன் சுவிட்ச் ஆஃப் என்று தெரிந்தது. சிலர் அழைப்பை ஏற்கவில்லை. சில அமைச்சர்களின் உதவியாளர்கள் எடுத்து, ‘‘அமைச்சர் நிகழ்ச்சியில் இருக்கிறார்’’ என்று கூறி இணைப்பைத் துண்டித்தனர்.

“பதில் சொல்ல வக்கில்லாதவர்கள் தேவையில்லை!”

ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் வராததால், அதற்கு மாற்றாக எம்.எல்.ஏ-க்கள் போல் மாஸ்க் அணிந்து வந்தவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் மக்கள் கேள்விகள் கேட்க, தங்களை எம்.எல்.ஏ-க்களாக நினைத்துக்கொண்டு அவர்கள் பதில் சொன்னார்கள். ‘கூவத்தூரில் எட்டு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?’, ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மக்கள் ஆதரவு இருந்ததா?’ ‘தொகுதிப் பக்கம் போகிறீர்களா?’ என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ‘‘சின்னம்மா... சின்னம்மா” என்று எல்லோரும் பதில் அளித்தனர்.

இந்த நிகழ்வு குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம். ‘‘தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் மக்கள் கேள்வி கேட்க முன்வந்துள்ளார்கள். இந்த மாற்றத்தை நாம் வரவேற்க வேண்டும். அதே நேரத்தில், ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் பலர் தங்கள் தொகுதிக்குச் செல்லவே பயப்படுகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது” என்றார்.

- கே.புவனேஸ்வரி
படங்கள்: சீனிவாசலு