Published:Updated:

திருச்சபைக்குள் தீண்டாமை!

திருச்சபைக்குள் தீண்டாமை!
பிரீமியம் ஸ்டோரி
News
திருச்சபைக்குள் தீண்டாமை!

திருச்சபைக்குள் தீண்டாமை!

“கிறிஸ்தவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது, ‘நீ சாதியை விட்டு விடுகிறாயா?’ என்று அருட்தந்தையர்கள் கேட்பார்கள். அந்த அருட்தந்தையர்களே சாதிப் பாகுபாடு பார்க்கிறார்கள் என்றால், இந்த அநியாயத்தை எங்கே போய் முறையிடுவது? வழிபாட்டுக்காக வரும் தலித்துகளுக்கு ஒரு வழி, தலித் அல்லாதவர்களுக்கு வேறு வழி என வைத்துள்ளார்கள். தனித் தனி ஆலயங்கள், தனித் தனி கல்லறைத் தோட்டங்கள் என அத்தனை இடங்களிலும் சாதியப் பாகுபாடு பார்க்கிறார்கள். சிவகங்கை மறை மாவட்டத்தில்தான் இத்தனை கொடுமைகளும்” எனக் கொந்தளிக்கிறார்கள் தலித் கிறிஸ்தவர்கள்.

திருச்சபைக்குள் தீண்டாமை!

தலித் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் தொடர்பாக பொதுவிசாரணை ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் மார்ச் 16-ம் தேதி நடந்தது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலித் கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு, சாதி ஒழிப்பு முன்னணி, இளந்தமிழகம், தமிழ்நாடு தேவேந்திரர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளால் பொதுவிசாரணை நடத்தப்பட்டது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பேராசிரியர் அ.மார்க்ஸ், சிறுபான்மையின உரிமை ஆர்வலர் ஜான் தயாளன், எழுத்தாளர் பிரதீபா ஜெயச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஃபிராங்கிளின் சீசர், புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த கோ.சுகுமாரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணை நடத்தியது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், ‘‘இங்கு, தேவேந்திர குலத்தைச் சேர்ந்த ஒருவர்கூட குருவாக முடியாத சூழல் உள்ளது. 15 பேர் குரு பயிற்சி பெற்று வந்தனர். பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர்களை குருவாகப் பணியேற்க விடாமல் வெளியேற்றினர். ஆனால், பெரும்பான்மையாக உள்ள உடையார் சமூகத்தைச் சேர்ந்த குரு மாணவர்கள் தவறு செய்து, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும்கூட, அவை மறைக்கப்பட்டு அவர்களை குருவாக ஏற்றுக்கொள்கின்றனர். திருச்சபையில் நிகழும் சாதிப்பாகுபாடு குறித்து அரசிடம் முறையிட்டால், ‘சிறுபான்மையினர் உரிமையில் தலையிட முடியாது’ என அது ஒதுங்கிக்கொள்கிறது. பாதிக்கப்பட்டோர் போராடினால், சட்டம் ஒழுங்கு என்று சொல்லி அவர்களை ஒடுக்க நினைக்கிறது அரசு’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
திருச்சபைக்குள் தீண்டாமை!

‘‘2011-ல் திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரியில் குரு மாணவராக மிக்கேல்ராஜா பயிற்சி பெற்று வந்தார். அவர் மீது பொய்யான குற்றத்தைச் சுமத்தினர். பிறகு, அந்தக் குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டு, குரு பயிற்சியையும் அவர் முடித்துவிட்டார். ஆனால், அவருக்கு குரு பட்டம் வழங்கி அவரின் சொந்த மாவட்டத்தில் பணியாற்ற அனுமதி மறுக்கின்றனர். இதற்கு ஒரே காரணம், அவர் தேவேந்திரர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதுதான்” என்றார் ஜேம்ஸ் என்பவர்.
அமுதா என்பவர், “திருக்கோயிலில் சுத்தம் செய்தல், எச்சில் இலைகளை எடுத்தல், கழிவறையைக் கழுவுதல் போன்ற வேலைகளை மட்டுமே எங்களுக்குக் கொடுக்கிறார்கள்.

மறை மாவட்ட கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் எங்கள் பிள்ளைகளுக்கு இடம் கொடுக்க மறுப்பது உட்பட பல பிரச்னைகளைக் கொடுக்கிறார்கள். சுமார் 150 குருக்கள் சிவகங்கை மறை மாவட்டத்தில் உள்ளனர். இவர்களில் ஒன்பது பேர் மட்டுமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும், தேவேந்திர கிறிஸ்தவர் ஒருவர்கூட இதில் இல்லை. இந்த அநீதிகள் பற்றி போப் ஆண்டவர், இந்திய குருமார்கள் சபை என அனைவரின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளோம். ஆனாலும் எங்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் தொடர்கின்றன’’ என்றார்.

பொது விசாரணைக்குத் தலைமை வகித்த நீதிபதி அரிபராந்தாமனிடம் பேசினோம். ‘‘சிவகங்கை மறை மாவட்ட நிர்வாகத்தில் தலித் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக சாதியப் பாகுபாடுகள் நிறைய உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இது பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையை வைக்க உள்ளோம்” என்றார்.

திருச்சபைக்குள் தீண்டாமை!

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கத்திடம் கேட்டோம். ‘‘நாங்கள் சாதி பார்த்து எப்போதும் செயல்படுவது இல்லை. இது தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த சாமுல்வேல்ராஜிடம் நேரில் விளக்கியிருக்கிறோம். சில பகுதிகளில் தனிக் கோயில், தனி கல்லறை என்பதெல்லாம் ஆரம்ப காலங்களில் இருந்து வந்தவைதான். ஒரே ஊராக இருந்தாலும் தூரத்தைப் பொறுத்து கோயில் மற்றும் கல்லறைகள் இரண்டாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால், எங்கள் மறைமாவட்டத்தில் உள்ள கல்லறைகள் பொதுவாகத்தான் உள்ளன. இந்த நிலையில் நடந்த பொது விசாரணையில் எங்கள் தரப்பு கருத்தை எடுத்துச் சொல்ல எந்த அழைப்பும் விடப்படவில்லை. இதுகுறித்து எங்களைச் சந்தித்தால் எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து வைப்போம்” என்றார்.

சாதிக் கொடுமைகளில் இருந்து தப்பிக்க மதம் மாறியவர்களை, அங்கேயும் தீண்டாமைக் கொடுமைகள் துரத்துவது வேதனை.

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி