Published:Updated:

‘‘திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது!” - மணவிழாவில் பொங்கிய வைகோ

‘‘திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது!” - மணவிழாவில் பொங்கிய வைகோ
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது!” - மணவிழாவில் பொங்கிய வைகோ

‘‘திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது!” - மணவிழாவில் பொங்கிய வைகோ

லிங்கப்பட்டியில் ‘மறுமலர்ச்சி’ மாநாட்டை நடத்தி முடித்துவிட்டார் வைகோ!

வைகோவின் தம்பி வை.ரவிச்சந்திரனின் மகன் மகேந்திர வையாபுரி - பிரீத்தி திருமணம், அவர்களது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் நடைபெற்றது. வைகோவின் பூர்வீக வீட்டின் முகப்பைப் போலவே அரங்கத்தை வடிவமைத்து அசத்தி இருந்தார், பந்தல் சிவா. மணவிழா நடைபெற்ற அரங்கத்துக்கு வைகோ, தன் தாயார் மாரியம்மாள் பெயரைச் சூட்டி இருந்தார். மேடையில் திராவிட இயக்கத்தின் பிதாமகர்கள் பிட்டி.தியாகராயர், நடேசனார், டி.எம்.நாயர், பெரியார், அண்ணா ஆகியோர் படங்கள் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தன.

‘‘திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது!” - மணவிழாவில் பொங்கிய வைகோ

இந்தத் திருமண விழாவுக்கு  மக்கள்நலக் கூட்டணித் தலைவர்கள், எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் அழைக்கப்படவில்லை. அழைப்பிதழ் அடிக்கவில்லை. சுற்றுவட்டார கிராம மக்களுக்கு தருவதற்காக மட்டும் கொஞ்சம் அழைப்பிதழ்களைத் அடித்தார்களாம். முன்னாள் டி.ஜி.பி அலெக்ஸாண்டர், முன்னாள் ஐ.ஜி கண்ணப்பன் போன்ற பொது நிகழ்ச்சிகளில் தலையைக் காட்டாத முகங்களும் இந்த மணவிழாவில் தென்பட்டன. தனது 53 வருட அரசியல் வாழ்வில், வைகோ சேர்த்து வைத்த நட்புக்கள் இவ்வளவா என வியக்கும் வகையில் வி.ஐ.பி-க்கள் வந்திருந்தனர். ம.தி.மு.க அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் பூண்டி துளசி வாண்டையார் திருமணத்தை நடத்திவைத்தார். அ.தி.மு.க அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் முதல் நாள் மாலையே வந்து மணமக்களை வாழ்த்தி விட்டுச் சென்றனர்.

மணவிழாவில் பேசிய பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ‘‘இந்த விழாவுக்கு உலகம் முழுவதிலுமிருந்து பலரும் வந்துள்ளனர். இதைப் பார்க்கையில், கலிங்கப்பட்டிக்குள் உலகமே வந்து விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. நான் பல நாடுகளுக்குச் சென்றுள்ளேன். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் வீடுகளுக்குச் செல்லும் போது அங்கே இரண்டு படங்கள் மட்டுமே மாட்டப்பட்டு இருக்கும். ஒன்று, மாவீரன் பிரபாகரன். மற்றது வைகோவின் படம். அந்த அளவுக்கு உலகத் தமிழர்களின் மனத்தில் அவர் இடம் பிடித்திருக்கிறார்’’ என்று வியந்தார்.

‘‘தமிழகத்தில், கட்சித் தலைவரின் வீட்டு நிகழ்ச்சி என்றால் வழிநெடுக கட்அவுட்டுகள் இருக்கும். பிளெக்ஸ் போர்டுகள் சாலையை மறித்தபடி இருக்கும். ஆனால், இந்த விழா அதற்கு விதிவிலக்காக இருக்கிறது” என்று ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் சொன்னார்.

நடிகர் சிவகுமார் பேசியபோது, ‘‘போராட் டத்தை புருஷ லட்சணமாகக் கொண்டவர் வைகோ. காவிரி பிரச்னையாகட்டும், முல்லைப் பெரியாறு விவகாரம் ஆகட்டும், ஸ்டெர்லைட், மீத்தேன், நியூட்ரினோ என எந்த விவகாரமாக இருந்தாலும் போராளியாக மாறி உடனடியாக களத்தில் இறங்கிப் போராடும் நபர் வைகோ’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘‘திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது!” - மணவிழாவில் பொங்கிய வைகோ

தமிழருவி மணியன், ‘‘இந்த மண்ணில் இருக்கக் கூடிய புல்லும், பூண்டும், பறவையும், மனிதரும் நல்லனவற்றைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்வை ஒரு வேள்வியாக மாற்றிக்கொண்ட மகத்தான மனிதன் வைகோ. அவர் மிகப் பெரிய சிகரங்களை அடைய வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால், 16 வருடங்களாக மனித உரிமைகளைக் காப்பதற்காக மணிப்பூரில் தவமியற்றி, உணவை மறுத்து சிறைக் கூடங்களிலும் மருத்துவமனைகளிலும் இருந்த அந்த தியாகத்தின் ஒளி விளக்கு இரோம் ஷர்மிளாவுக்கே 90 வாக்குகளைத் தந்த திருநாடு இந்தியா. அதனால்தான் வைகோ தனக்கான அங்கீகாரத்தை இன்னும் முழுமையாகப் பெறவில்லை. ஆனால், அவர் ‘மன நிறைவோடு’ வாழ்கிறேன் என்று சொல்கிறார். மன நிறைவு என்பது மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம். அது வைகோவுக்கு வாய்த்திருக்கிறது’’ என்று நெகிழ்ந்தார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி, ‘‘வைகோ போன்ற மனிதர்கள் பிறருக்காக வாழ்பவர்கள்” என்று சொன்னார்.

முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா, ‘‘நான் வைகோவுடன் நீண்ட காலமாகப் பழகி வருகிறேன். தனது நலன், தனது வளர்ச்சி என குறுகிய சிந்தனை இல்லாமல் தமிழர்களின் நலனுக்காகப் பாடுபடக் கூடியவர். தனது அமைச்சரவையில் வைகோவைச் சேர்க்க பலமுறை வாஜ்பாய் வலியுறுத்தினார். ஆனால், கடைசி வரையிலும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் தனது சகாக்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தவர். இதுபோன்ற அரசியல்வாதிகள் மிகவும் அபூர்வம்’’ என்று புகழ்ந்தார்.

நிறைவாகப் பேசிய வைகோ, தனது அழைப்பை ஏற்று வந்த முக்கியப் பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்தார். ‘‘இந்த விழா மேடையில் பிட்டி.தியாகராயர், நடேசனார், டி.எம்.நாயர், பெரியார், அண்ணா படங்கள் மட்டுமே வைக்கப்பட்டு இருக்கின்றன. இவர்கள்தான் திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்த பிதாமகர்கள். இவர்கள் உருவாக்கிய திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது. அதை மட்டும் நான் இங்கே சொல்லிக்கொள்கிறேன்” என்று முடித்தார்.

இந்த வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள்!

- ஆண்டனிராஜ்