Published:Updated:

“நான் பரப்ப விரும்புவது அன்பின் அமைதியின் நறுமணத்தை...”

“நான் பரப்ப விரும்புவது அன்பின் அமைதியின் நறுமணத்தை...”
பிரீமியம் ஸ்டோரி
News
“நான் பரப்ப விரும்புவது அன்பின் அமைதியின் நறுமணத்தை...”

இரும்புப் பெண் இரோம் சர்மிளா

“இறைவன் இந்த பூமியைப் படைத்தபோது எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. ஒரு சமத்துவ சமூகத்தைத்தான் அவர் படைத்தார். எல்லைகளை நிர்ணயிக்கவில்லை... எங்கும் ஓடும் அன்பு நதியில் அனைவரும் நனைந்து... மகிழ்ந்து திளைப்பார்கள் என்று அவர் நம்பினார். ஆனால், நாம் அவரது நம்பிக்கையைப் பொய்யாக்கினோம். மதங்களை, சாதிகளைப் படைத்தோம். எல்லைகளை நமக்கு நாமே நிர்ணயித்துக்கொண்டோம். நமக்குள் நாமே சுருங்கிப்போய், குரோதத்தை வெப்பமாகக் கக்கினோம். அந்த அனலில் அன்பு நதி வற்றிவிட்டது. அதனால்தான் எங்கும் அநீதி நீக்கமற நிறைந்திருக்கிறது. அன்பு நதியை மீட்டுருவாக்கவில்லை என்றால், நமக்கு எதிர்காலம் இல்லை. நான் அந்த நதியை மீட்டுருவாக்கும் பணியில்தான் இருக்கிறேன். இது நான் தேர்ந்தெடுத்த பணியில்லை. இந்தப் பணிக்காக இறைவன்தான் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று நம்புகிறேன்”

- கோழிக்கோட்டில் நடந்த ஒரு நிகழ்வில், துறவியின் மனநிலையோடு அமைதியாகப் பேசுகிறார் இரோம் சர்மிளா. நடந்துமுடிந்த மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில், அவருக்குக் கிடைத்திருந்த ‘90 வாக்குகள்’ அவரது பயணத்தில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. தனக்குத்தானே பெரிதான இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அதை நோக்கி எந்தச் சலனமும் இல்லாமல் பயணப்படுகிறார் இரோம் சர்மிளா.

கோழிக்கோடு நிகழ்வு முடிந்ததும் அவருடன் உரையாட நேரம் கேட்டோம். “வேண்டாம்... இப்போது கொஞ்சம் அசதியாக இருக்கிறது. நாளை காலை கடற்கரையில் சந்திக்கலாம்’’ என்றார். காலை கடற்கரைக்குச் சென்றோம். கடல் அலைகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அலைகளுடனான அவரது உரையாடலைக் கலைக்க மனம் வரவில்லை. பின், அந்திப் பொழுதில் சந்தித்தோம்.

“நான் பரப்ப விரும்புவது அன்பின் அமைதியின் நறுமணத்தை...”

அவரது உரையாடலிலிருந்து...

“கடந்த இரண்டு நாட்களாக உங்களைப் பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறோம். ஓய்வுக்காக இங்கே வந்தீர்கள். ஆனால், தொடர்ந்து கூட்டங்கள், உரையாடல்கள் என ஓய்வில்லாமல் சுழன்று கொண்டிருக்கிறீர்கள். பெருந்தோல்விக்குப் பின்னும் எது உங்களை இன்னும் உயிர்ப்புடன் இயங்க வைக்கிறது?”

“சக மனிதர்கள் மீதான அன்பு மட்டும்தான். இந்த உலகத்துக்கான பொது மொழி அன்புதான். எல்லைகளாக நாம் பிரிந்து செல்வதற்கு முன்பே, சாதியும் - மதமும்  நம் உடல் அணுக்களில் செலுத்தப்படுவதற்கு முன்பே உண்டான மொழி அது. அந்த மொழிக்கு வெற்றி தோல்விகள் தெரியாது. நான் அந்த மொழியை நன்கு அறிந்துவைத்திருக்கிறேன். அதில் உரையாட வேண்டும் என்கிற என் விருப்பம்தான் என்னைத் தொடர்ந்து இயக்குகிறது.”

“அந்த 90 வாக்குகளுக்குப் பிறகுமா?”

“நிச்சயமாக... சமூகத்தின் அறமதிப்பீடு முழுக்க மாறிவிட்டது. அது மாறவேண்டும் என்றுதான் அரசாங்கம் விரும்பியது. இப்போது நாம் அரசை மாற்ற வேண்டும் என்றால், அந்த அறமதிப்பீடுகளுக்கு முதலில் உயிர் கொடுக்க வேண்டும். சக மனிதன் மீது அன்பு செலுத்தாததுதான் எல்லா பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்பதைப் புரியவைக்க வேண்டும். நான் இப்போது என் வேலையாக நினைப்பது அதைமட்டும்தான். அந்த நோக்கத்தை இந்த 90 வாக்குகள் பாதிக்கவில்லை.”

“அப்படி என்றால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக எடுத்துக்கொள்ளலாமா?”

“இல்லை... இதையும் நீங்கள் ஒரு அரசியல் வேலையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறேன். அறமாண்புகளை மீட்பதும் அரசியல் பணிதான். நான் வாக்கு வங்கி அரசியலில் இருந்துதான் ஒதுங்குகிறேன். மற்றபடி என் வேலைகள் தொடரும்.”

‘‘யாரோடும் கலந்தாலோசிப்பது இல்லை; தனியாகவே முடிவு எடுக்கிறீர்கள்... இதுதான் உங்களது இந்தத் தோல்விக்குக் காரணம் என்று பேசப்படுகிறதே?”

‘‘நான் தனியாக முடிவு எடுத்துத்தான் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு (AFSPA) எதிராக 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது ஏன் யாரும் இதைப்பற்றிப் பேசவில்லை? என் வாழ்வை ஏன் பிறர் வாழவேண்டும்? என் போராட்டத்தின் மூலமாக அரசியல் லாபங்களை அடையவேண்டும் என்ற நோக்கங்களுடன் செயல்படுகிறவர்களின் பேச்சு இது.”

“16 வருட போராட்டத்தின் பலனாக எதை நினைக்கிறீர்கள்?”

“உங்கள் மாநிலத்துக்கு சம்பந்தமே இல்லாத ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பற்றி பேசுகிறீர்கள் அல்லவா? எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் கூட்டம் நடத்துகிறீர்கள் அல்லவா? இது என் போராட்டத்தால் விளைந்த பலன்தானே?”

“சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிராக எந்த மக்களுக்காகப் போராடினீர்களோ... அந்த மக்களே உங்களைத் தோற்கடித்துவிட்டார்கள். அப்படி என்றால், அந்தச் சட்டத்தால், மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?”

“சிறப்பு அதிகாரப் படை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் குறைந்திருக்கின்றன. இப்போது உலகத்தின் பார்வை முழுவதும் மணிப்பூர் மேல் இருக்கிறது. அதனால், அந்த வன்முறை குறைந்திருக்கிறது. சிறைக்குள்ளேயே மக்கள் வாழப் பழகிக்கொண்டார்கள் என்பதற்காக ஒரு மாநிலத்துக்கே சிறை போடுவது சரியாகிவிடுமா? அந்தக் கொலைகாரச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்கிற என் நிலைப்பாட்டில் இப்போதும் தெளிவாக இருக்கிறேன்.”

“மணிப்பூரில் பி.ஜே.பி ஆட்சி அமைத்திருக்கிறது. உத்தரப்பிரதேச வெற்றி மூலமாக இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிற ஒற்றைக் கட்சியாக பி.ஜே.பி வளர்ந்திருக்கிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“பணமும் அதிகாரமும் வெற்றி பெற்றுள்ளது. பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து ஜெயிப்பது மனித குலத்தின் எதிர்காலத்துக்கு நல்லது என்று நினைக்கிறீர்களா?”

“சரி... நீங்கள் விரும்புகிற மாற்றம் வரும் என்று நம்புகிறீர்களா?”

“நான் வேலைசெய்ய வேண்டும் என்று நினைப்பது என் மாநிலத்துக்காக மட்டும் இல்லை... எல்லைகளை எல்லாம் துடைத்தெறிந்துவிட்டு, எங்கும் அன்பைப் பரப்ப வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். அரசியல் என்று நான் நினைப்பது எல்லாமே... அன்பின், அமைதியின், நீதியின் நறுமணத்தை அகிலம் எங்கும் படரவிட வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது அறமதிப்பீடுகள் எல்லாம் மாசடைந்துதானே இருக்கின்றன. நீங்களும் இது மாறவேண்டும் என்றுதானே விரும்புகிறீர்கள்? அன்பும், அறமும் ஆட்சி செய்ய வேண்டும் என்றுதானே விரும்புகிறீர்கள். நீங்களும் நானும் ஒரே மாற்றத்தைத்தான் விரும்புகிறோம். நம்புங்கள், நிச்சயம் நாம் விரும்புகிற மாற்றம் வந்தே தீரும்.”

- மு.நியாஸ் அகமது, படம்: த.ஸ்ரீநிவாசன்