Published:Updated:

எரிந்த காரணம் என்ன... கதவைத் திறக்க முடியாமல் போனது ஏன்? ரேஸ் கார் ரகசியங்கள்!

எரிந்த காரணம் என்ன... கதவைத் திறக்க முடியாமல் போனது ஏன்? ரேஸ் கார் ரகசியங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
எரிந்த காரணம் என்ன... கதவைத் திறக்க முடியாமல் போனது ஏன்? ரேஸ் கார் ரகசியங்கள்!

எரிந்த காரணம் என்ன... கதவைத் திறக்க முடியாமல் போனது ஏன்? ரேஸ் கார் ரகசியங்கள்!

மார்ச் 18-ம் தேதி அதிகாலை இப்படி ஒரு செய்தியுடன் தமிழகம் விழித்தெழும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இளம் வயதிலேயே இந்திய அளவிலான கார் பந்தயங்களில் சாதனைகள் புரிந்துவந்த அஸ்வின் சுந்தரும்,  அவருடைய மனைவி நிவேதிதாவும் காருக்குள் கருகி மரணமடைந்துள்ளனர்.

சென்னையில் நள்ளிரவு நேரத்தில் அதிவேகமாக விரைந்துசென்ற அந்தக் கார், மரத்தில் மோதி எரிந்த சம்பவம், பல சந்தேகங்களைக் கொளுத்திப் போட்டுள்ளது. டிரைவிங்கில் அனுபவம் வாய்ந்த அஸ்வின், காரை வேகமாக ஓட்டினாரா... கதவை ஏன் திறக்க முடியவில்லை... ஒரு கார் விபத்துக்கு உள்ளானால் உடனே தீப்பிடித்துக்கொள்ளுமா எனப் பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

எரிந்த காரணம் என்ன... கதவைத் திறக்க முடியாமல் போனது ஏன்? ரேஸ் கார் ரகசியங்கள்!

அஸ்வின் ஓட்டிச் சென்றது, 2012 மாடல் பி.எம்.டபிள்யூ Z4 கார். அது, இரண்டு பேர் அமரக்கூடிய ஸ்போர்ட்ஸ் கார். சாந்தோம் பகுதியில் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் இருக்கும் ஒரு வேகத்தடை எவ்வளவு மோசமானது என்பது, தினமும் அதைக் கடந்து செல்லும் அனைவருக்கும் தெரியும். அந்த வேகத்தடையில், சுமார் 120 கி.மீ வேகத்தில் அஸ்வினின் கார் ஏறியுள்ளது. இவ்வளவு வேகத்தில் சென்றால், எந்த  வாகனமாக இருந்தாலும் அது, கட்டுப்பாட்டை இழக்கத்தான் செய்யும். அஸ்வின் காரும் கட்டுப்பாட்டை இழந்தது. அது, மரத்துக்கும் சுவற்றுக்கும் இடையில் சிக்கி, உடனே தீப்பிடித்துக்கொண்டது.  காருக்குள் இருந்து வெளியேற முடியாமல், அல்லது விபத்தின் அதிர்ச்சியால் நினைவை இழந்த, அஸ்வினும், நிவேதிதாவும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிவது உலக அளவில் மிக மிக அரிதான நிகழ்வு. ஆனால், இந்தியாவில் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 2012-ல் புனேவில் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ கார் ஒன்று, தானாகத் தீப்பிடித்து எரிந்தது. கதவு லாக் ஆகிவிட்டது. காரை ஓட்டியவரால் கதவைத் திறக்க முடியவில்லை. சீட்பெல்ட்டையும் கழற்ற முடியவில்லை. கண்ணாடியை உடைத்து, சீட் பெல்ட்டை கிழித்து ஓட்டுநர் மீட்கப்பட்டார்.  ஆனாலும், தீக்காயங்களால் அவர் இறந்துபோனார். 2014-ம் ஆண்டு டெல்லியில் கார் ஒன்று விபத்துக்கு உள்ளாகி, தீப்பிடித்துக்கொண்டது. அதில், மனநலம் பாதிக்கப்பட்ட இரு சகோதரர்கள் சிக்கி உயிரிழந்தனர்.  

பொதுவாக, நவீன வசதிகள் கொண்ட கார்களின் கதவுகள், விபத்து நிகழ்ந்தால் தானாகவே திறந்துகொள்ளும். அதற்கேற்ப, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விபத்தின் தன்மையைப் பொறுத்து, கதவு ‘ஜாம்’ ஆகிவிடுவதற்கும் வாய்ப்புள்ளது. 2009-ம் ஆண்டு, அகமதாபாத்தில் பி.எம்.டபிள்யூ கார் ஒன்று விபத்தில் தீப்பிடித்துக்கொண்டது. அதில், சென்ட்ரல் லாக்கிங் செயலிழந்துவிட்டது. காரில் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர். என்ன கொடுமையென்றால், அந்த நான்கு பேருமே பி.எம்.டபிள்யூ மெக்கானிக்குகள் என்பதுதான். 2015-ம் ஆண்டு, மலேசியாவில் இதே Z4 மாடல் கார் ஒன்று தானாகத் தீப்பிடித்து எரிந்தது. நல்லவேளையாக உயிர்சேதம் எதுவும் இல்லை.

இந்த விபத்தில், எப்படி சில நொடிகளில் அஸ்வினின் கார் தீப்பிடித்தது என்பதுதான் விசாரிக்கப்பட வேண்டிய முக்கியமான கோணம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எரிந்த காரணம் என்ன... கதவைத் திறக்க முடியாமல் போனது ஏன்? ரேஸ் கார் ரகசியங்கள்!

மாடர்ன் கார்கள் இவ்வளவு எளிதாகத் தீப்பிடிக்காது. விபத்து நிகழ்ந்தால், இன்ஜின் செயல் பாட்டையும், எரிபொருள் பம்ப் செய்யப்படுவதையும் மின்சார கட்டுப்பட்டுப் பிரிவு  நிறுத்திவிடும். எனவே, வேகக்கட்டுப்பாட்டுப் பகுதியில் அதிவேகமாக மோதி, கார் கீழே விழுந்தபோதே எரிபொருள் டேங்க்கிலிருந்து பெட்ரோல் கசிந்து, கார் தீப்பிடித்திருக்க வாய்ப்புண்டு. அல்லது, வேகத்துக்காக இன்ஜினை மாற்றி அமைத்திருந்தாலும் விபத்துகளின்போது தீப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நவீன கார்களின் இன்ஜினை மாற்றியமைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எலெக்ட்ரானிக் சிப் டியூனிங்கைத்தான் பலர் கையாளுகிறார்கள். எனவே, அஸ்வின் அல்லது விபத்துக்கு உள்ளான காருடைய முந்தைய உரிமையாளர்,  இன்ஜினை டியூன் செய்தார்களா என்பதை விசாரித்தால் தீப்பிடித்ததற்கான காரணம் தெரிய வரலாம்.

இந்த விபத்து குறித்த நம்முடைய  கேள்விகளுக்கு, இந்தக் கட்டுரை அச்சுக்குச் செல்லும் வரை பி.எம்.டபிள்யூ நிறுவனத்திடமிருந்து பதில் வரவில்லை.  தகுதியான நிபுணர்கள் சுதந்திரமாக ஆராய்ந்தால் மட்டுமே இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும்.

- ர.ராஜா ராமமூர்த்தி

காரோட்டிகளுக்கு சில டிப்ஸ்:

* காரில் பொருத்தக்கூடிய தீயணைப்புக் கருவி எப்போதும் இருக்க வேண்டும்.

* கேனில் எரிபொருளை நிரப்பி எடுத்துச் செல்லாதீர்கள்.

* சட்டத்துக்குப் புறம்பாக இன்ஜினை மாற்றியமைக்காதீர்கள்.

*காருக்குள் சிகரெட் புகைக்கவே கூடாது.

* காரின் சென்ட்ரல் லாக் ஜாம் ஆகிவிட்டால், ஹெட்ரெஸ்ட்டைக் கழற்றி, ஜன்னல் கண்ணாடியை உடைக்கலாம்.