Published:Updated:

கரம்கோத்த இளைஞர்கள்... கண்டுகொள்ளாத அரசு!

கரம்கோத்த இளைஞர்கள்... கண்டுகொள்ளாத அரசு!
பிரீமியம் ஸ்டோரி
News
கரம்கோத்த இளைஞர்கள்... கண்டுகொள்ளாத அரசு!

தலைநகரில் தமிழக விவசாயிகள் போராட்டம்...

லைநகர் டெல்லியில் எப்போதும் கொதிநிலையில் இருக்கும் ‘ஜந்தர் மந்தர்’ பகுதி, தமிழக விவசாயிகளின் போராட்டத்தால் தகித்துக் கிடக்கிறது.

கரம்கோத்த இளைஞர்கள்... கண்டுகொள்ளாத அரசு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில்,  நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பச்சை கோவணம் அணிந்து, கழுத்தில் மண்டை ஓடுகளை மாட்டிக்கொண்டும், கைகளில் மண்சட்டி ஏந்தியும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் ஏராளமான பெண்களும் பங்கேற்றுள்ளனர். 

ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த விவசாயிகளை உரிய முறையில் அழைத்துப் பேசாமல் உதாசீனப்படுத்தி வருகிறது மத்திய அரசு. அதே நேரத்தில், அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை டெல்லியில் உள்ள இளைஞர்கள் செய்துகொடுக்கிறார்கள். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குணசேகர், மல்லிகா, ராஜ்குமார், சுசித்ரா என நம் இளைஞர்கள், தினமும் தங்கள் பணி முடிந்ததும், விவசாயிகளுடன் இணைந்துகொள்கிறார்கள்.

குணசேகரிடம் பேசினோம். “கிளைகளை நாங்கள் டெல்லியில் படரவிட்டிருக்கலாம். ஆனால், எங்களின் வேர் தமிழகத்தில்தானே இருக்கிறது. அந்த நிலத்திலிருந்துதானே முளைத்துவந்தோம். எங்கள் ரத்தத்தில் இந்த விவசாயிகளின் வியர்வையும் கலந்து இருக்கிறதுதானே! பின் எப்படி ஏதோ ஒரு பிரச்னை... யாரோ ஒருவரின் பிரச்னை எனக் கடந்துசெல்ல முடியும்? சொல்லப்போனால், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்னையில் எங்களின் எதிர்காலமும் கலந்திருக்கிறது. அவர்களுக்காகக் குரல் கொடுப்பது... துணை நிற்பது எங்கள் நலன் சார்ந்ததும்கூட” என்று உணர்வுபூர்வமாக அவர் பேசுகிறார்.

 தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் சுசித்ரா, “நாங்கள் விவசாயக் குடும்பம்தான். என் அப்பா இன்னும் நிலத்தில்தான் உழன்றுகொண்டிருக்கிறார். அதனால், எனக்கு விவசாயியின் வலி நன்கு தெரியும். அதுமட்டுமல்ல, இன்று நான் இருக்கும் நிலம், விவசாயம் தந்த கொடை. அதற்கொரு பிரச்னை எனும்போது, நான் எப்படித் தூரநின்று வேடிக்கை பார்க்க முடியும், இங்கு போராடுபவர்களின் முகத்தில் என் அப்பாவைக் காண்கிறேன். ஒரு மகளாக, என் அப்பாவுக்குத் துணை நிற்கிறேன்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கரம்கோத்த இளைஞர்கள்... கண்டுகொள்ளாத அரசு!

இவர்கள், களத்தில் விவசாயிகளுடன் துணை நிற்பதுடன், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் உரையாடுகிறார்கள். அவர்களைக் களத்துக்கு அழைத்து
வருவதிலும் முனைப்பாக வேலை பார்க்கிறார்கள்.

 வார இறுதி நாட்களை மால்களிலும், திரையரங்குகளிலும், மலைப் பிரதேசங்களிலும் கழிக்க விரும்பும் மாணவர்கள், இப்போது போராட்டக்களங்களில் நிற்கிறார்கள். சுழற்சி முறையில் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு, விவசாயப் பிரச்னைகள் என்றாலும் மீனவப் படுகொலைகள் என்றாலும் நண்பர்களுடன் செல்கிறார்கள். மெரினாவிலும், நெடுவாசலிலும் மட்டுமல்ல, தலைநகர் டெல்லியிலும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

விவசாயிகளின் பிரச்னையின் வீரியத்தைப் புரிந்துகொண்டு இளைஞர்கள் களத்துக்கு வரத் தொடங்கிவிட்டார்கள்... அரசுகள்தான் தூர நின்று யாரோ ஒருவரின் பிரச்னைபோல வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன!

- மு.நியாஸ் அகமது