Published:Updated:

திமுக அணி:கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 சீட்

சென்னை, மார்ச். 3, 2011

தி.மு.க. கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. ##~~##

அண்ணா அறிவாலயத்தில் நேற்று இரவு தி.மு.க. குழுவினருக்கும் கொங்கு நாடு முன்னேற்ற கழக தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு ஏற்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப்பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கொங்கு நாடு முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் இந்த தகவலை தெரிவித்தார்.

இந்த உடன்பாட்டை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள 60 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்வரன் மேலும் கூறுகையில், கொங்கு மண்டல மக்களின் நலனுக்காக நாங்கள் வைத்துள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித்தருவதாக முதல்வர் உறுதி அளித்து இருப்பதாகவும், 7 தொகுதிகளிலும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலில் போட்டியிட தி.மு.க. கூட்டணியில். பா.ம.க. வுக்கு 31 தொகுதிகளும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
 

அடுத்த கட்டுரைக்கு