Published:Updated:

தினகரன் பக்கம் திரும்பிய வைகுண்டராஜன்

தினகரன் பக்கம் திரும்பிய வைகுண்டராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
தினகரன் பக்கம் திரும்பிய வைகுண்டராஜன்

திருநெல்வேலி கலெக்டர் கிடுக்கிப்பிடி... மிரட்டப்படும் பத்திரிகையாளர்... வரப்போகும் தீர்ப்பு...

‘‘கார்னெட் என்ற கனிமத்தைத் திருட்டுத் தனமாக எடுத்து, சட்டத்துக்கு, நாட்டு நலனுக்கு விரோதமாக விற்பனை செய்து, கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும் தொழிலைச் செய்யும் ஒரு ‘தாதா’வுடன் ஜெயலலிதா எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுள்ளார்” - இப்படி முதல்வராக இருந்தபோது கருணாநிதி சொல்லி அதிர வைத்தார். 

2008-ம் ஆண்டு, டைட்டானியம் ஆலை விவகாரத்தில் கருணாநிதி குறிப்பிட்ட அந்த ‘தாதா’, தமிழகத்தின் தாதுமணல் வைகுண்டராஜன்தான். கருணாநிதியே அலறிக் கொண்டு அறிக்கை கொடுக்கும் அளவுக்கு, ஜெயலலிதாவும் சசிகலாவும் வைகுண்ட ராஜனும் கைகோத்திருந்தார்கள்.

தினகரன் பக்கம் திரும்பிய வைகுண்டராஜன்

இப்படி இந்தக் கூட்டணி தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்தது நீண்ட காலம். 2011-ல் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தபிறகு சில காலம் வரையில் இது தொடர்ந்தது. அதன்பிறகு, அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் 2013-ல் விரிசல் விழுந்தது. தாதுமணல் எடுக்கும் நிறுவனமான வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் வசமிருந்த குவாரிகளை ஜெயலலிதா முடக்கினார். அத்துடன், தாது மணல் கொள்ளையை விசாரிக்க ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ் தலைமையில் கமிஷன் அமைத்தார். முதல்கட்ட விசாரணை முடிந்து 17.9.13 அன்று ஜெயலலிதாவிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தார் பேடி. அந்த அறிக்கை வெளியாகவில்லை. நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்குகள் போடப்பட்டன. இதனால் அறிக்கை வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இடையில், நீதிமன்றத்தில் மனு போட்டு தடையை நீக்கியது வி.வி. மினரல்ஸ். 2016 சட்டசபைத் தேர்தலின்போது, ‘தாதுமணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும்’ எனத் தேர்தல் அறிக்கையில் சொன்னார் ஜெயலலிதா.

இதெல்லாம் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில்தான். ஜெயலலிதாவுக்குத் ‘துரோகி’களாக தெரிந்தவர்கள் எல்லாம் தினகரனுக்கு ‘தியாகி’கள் ஆகி வருகிறார்கள். இந்த வரிசையில் இப்போது வைகுண்டராஜனும் சேர்ந்துவிட்டார். தட்சணமாற நாடார் சங்கத்தினர் டி.டி.வி.தினகரனைச் சந்தித்து, ஆர்.கே.நகர் தேர்தலில் ஆதரவு தெரிவித்தனர். அப்போது, வைகுண்டராஜனும் உடன் இருந்தார். இதன் பின்னணி என்ன? தாதுமணல் விவகாரம் பற்றி நன்கு அறிந்தவர்கள் சொல்லும் விஷயம் இதுதான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தினகரன் பக்கம் திரும்பிய வைகுண்டராஜன்

‘‘ஜெ-சசிக்குச் சொந்தமாக ‘கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்’ என்ற பெயரில் இருந்த நிறுவனத்தில் வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன், அவருடைய சகோதரர் ஜெகதீசன், இளவரசியின் மருமகன் வி.எஸ்.சிவக்குமார் ஆகியோர் இயக்குநர்களாக இருந்தனர். பிறகு வைகுண்டராஜன் ராஜினாமா செய்தாலும், அவருடைய சகோதரர் ஜெகதீசன், வி.எஸ்.சிவக்குமார் இயக்குநர்களாகத் தொடர்ந்தனர். மேலும், ஜெயா தொலைக்காட்சியின் பெரும்பான்மை பங்குகளை வைகுண்டராஜன் வைத்திருந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க ஆட்சி அமைய வைகுண்டராஜனின் உதவியும் இருந்தது. வைகுண்டராஜன் தி.மு.க பக்கமும் லேசாக சாய ஆரம்பித்த பிறகுதான், விரிசல் விழுந்தது. வைகுண்டராஜனிடமிருந்த லைசென்ஸ்களை அரசு திரும்பப் பெற்றது. ககன்தீப் சிங் பேடி விசாரணை கமிஷன் போடப்பட்டது. அ.தி.மு.க ராஜ்ய சபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ‘ஜெயலலிதா என்னை அடித்தார்’ என நாடாளுமன்றத் திலேயே சொல்லி அதிர வைத்தவர் சசிகலா புஷ்பா. அவருக்குப் பின்னால் இருந்தவர் வைகுண்டராஜன் என ஜெயலலிதாவுக்கு ‘ரிப்போர்ட்’ போனது. வைகுண்டராஜன், சசிகலா புஷ்பா ஆகியோர் மீது உச்சகட்ட ஆத்திரத்தில் இருந்தார் ஜெயலலிதா. ஆனால், எதுவும் செய்வதற்கு முன்பாகவே, உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்து விட்டார். சசிகலாவின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க வந்தபோது, பன்னீர் பொங்கி எழுந்தார். அந்த நேரத்தில் ஆட்சியைக் கவிழ்க்க மணல் கான்ட்ராக்டர்கள், கிரானைட், தாதுமணல் அதிபர்கள் கூட்டணி அமைத்துக் களமிறங்கியதாக பேச்சுகள் கிளம்பின. அப்போது வைகுண்டராஜனின் பெயரும் அடிபட்டது. தினகரன் கட்டுப் பாட்டுக்குள் கட்சி வந்தபிறகு, காட்சிகள் மாறத் தொடங்கின.

வைகுண்டராஜனின் தம்பி குமரேசன், பங்காளிச் சண்டையில் வைகுண்டராஜனைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து வைத்து, அவருக்குத் தலைவலி கொடுத்துக் கொண்டிருந்தார். தாதுமணல், தோரியம், ஜெயா தொலைக்காட்சி விவகாரம், சசிகலா புஷ்பா எம்.பி விவகாரம் எனப் பல தகவல்களை குமரேசன் வைத்திருந்ததால், உயர் நீதிமன்றமே வைகுண்டராஜன் தொடர்பான வழக்குக்கு உதவி களைச் செய்யும் ஆலோசகராக குமரேசனை நியமித்தது. திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனை வைகுண்ட ராஜனால் சமாளிக்கவே முடியவில்லை. கடந்த மாதத்தில் மட்டும் வைகுண்டராஜனின் 34 குவாரிகளுக்கு செக் வைத்தார் கருணாகரன். இதில் வைகுண்ட ராஜனே கொஞ்சம் ஆடித்தான் போனார். சென்னை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து, வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக எடுத்துக்கொண்ட வழக்கில், வரும் 27-ம் தேதி தீர்ப்பு வரப்போகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தினகரனை வைகுண்டராஜன் சந்தித்தார். தினகரனின் தயவு ,   வைகுண்டராஜனுக்குத் தேவைப்படுகிறது; வைகுண்டராஜனின் ஆதரவு தினகரனுக்குத் தேவைப்படுகிறது. அதையடுத்து இருவரும் பழைய பகையை ஓரம்கட்டி வைத்துவிட்டு, புதிய உறவுக்குப் பாதை அமைத்துள்ளனர். இதுவும் ஒரு வியாபாரத் தந்திரம்தான்’’ என்றார்கள் அவர்கள்.

தினகரன் பக்கம் திரும்பிய வைகுண்டராஜன்

இப்படிப்பட்ட சூழலில்தான், வைகுண்டராஜனின் முறையற்ற தாதுமணல் ஏற்றுமதி தொடர்பாக தொடர் ஒன்றை வெளியிட்டது ‘தி வயர்’ என்ற இணையதளம். இதை எழுதியவர், பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர். தாதுமணல் கொள்ளை தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோதே சந்தியாவுக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. 12 வருடங்களாக ஊடகத் துறையில் இருக்கும் சந்தியா, ஆஸ்திரேலியாவில் இளங்கலை இதழியல் முடித்து, ஏசியன் கல்லூரியில் முதுகலை பயின்றவர். அவரிடம் பேசினோம்.

‘‘ஒரு பத்திரிகையாளராகப் புலனாய்வு இதழியல் வேலைகளைச் செய்து வருகிறேன். நான்கு வருடங்களாக தாதுமணல் மாஃபியா தொடர்பான புலனாய்வில் ஈடுபட்டு வருகிறேன். குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரும் மணல்கொள்ளை வியாபாரத்தை நடத்திவரும் வைகுண்டராஜன் தொடர்பாக எழுதினேன். சுமார் 75 சதவிகிதம்வரை முறையற்ற வகையில் அவர், தாதுமணலைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்கிறார். அரசும் இந்த விஷயத்தில் அமைதியாகவே இருக்கிறது. என் புலனாய்வு நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையில் நோட்டீஸ் அனுப்பினார்கள். 2015-ல், வைகுண்டராஜனைச் சந்தித்துப் பேட்டியெடுத்தேன். கடந்த ஜனவரியில் பிரபல நாளிதழ் ஒன்றில், மணல்கொள்ளைத் தொடர்பாக நான்கு தொடர்களை எழுதினேன். அதைத் தொடர்ந்து எனக்கு பிரச்னைகள் வரத் தொடங்கின. ஜல்லிக்கட்டுப் போராட்ட சமயத்தில் வைகுண்டராஜனைச் சேர்ந்த யாரோ ஒருவர்,  ‘இவர் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகக் கொடிபிடிக்கும் பெண். தயவுசெய்து இவருக்கு யாரும் போன் செய்யவேண்டாம்’ என ட்விட்டரில் எனது நம்பரைப் பதிவு செய்திருந்தார். அதன்பிறகு எனக்குத் தொடர்ச்சியாக மிரட்டல் போன்கள் வரவே, சைபர் க்ரைம் பிரிவில் புகார் கொடுத்தேன்.

கொச்சி துறைமுகத்தில் முறையற்ற வகையில் மணல் ஏற்றுமதி செய்து வந்ததாகப் புகார் எழ... திருநெல்வேலி கலெக்டர் கொச்சி துறைமுகத்துக்குக் கடிதம் எழுதினார். இதுபற்றிய விசாரணையில் நான் ஈடுபட்டிருந்தபோது... முன்பின் அறியாத எண்ணிலிருந்து ஒருவர் என்னை அழைத்து தகாத வார்த்தைகளில் பேசினார். ‘உன் உடம்பின் அந்தரங்கப் பகுதிகளில் மிளகாய்ப் பொடி தூவிவிடுவேன்’ எனவும் அச்சுறுத்தினார். அத்துடன், ‘என்னைப் பத்திரிகை உலகின் பூலான் தேவி’ எனவும் குறிப்பிட்டார். வைகுண்டராஜனிடம் நான் 200 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும், அதற்கு அவர் அடிபணியவில்லை என்பதால், இப்படித் தவறாகச் சித்திரிப்பதாகவும் சில வலைதளங்கள் என்னைப் பற்றி தவறாகப் பேச ஆரம்பித்தன. வைகுண்டராஜன் டிடெக்டிவ்கள் உதவியுடன் என்னைப் பின்தொடர்வதாகவும், விரைவில் என்னைப் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தப்போவதாகவும் கூறி மிரட்டினார்கள். இதையடுத்து மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளேன். ‘ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளது காவல் துறை” என்றார் சந்தியா நம்பிக்கையுடன்.

- ஜோ.ஸ்டாலின், ஐஷ்வர்யா
படம்: காளிமுத்து

திடீர் ரெய்டு!

டந்த மாதம் மட்டுமே திருநெல்வேலி மாவட்டத்தில் வி.வி. மினரல்ஸின் 31 தாதுமணல் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டன. தினகரனுடனான சந்திப்புக்குப் பிறகு இது நடக்காது என வைகுண்டராஜன் நம்பினார். ஆனால், மார்ச் 23-ம் தேதி வியாழக்கிழமை மாலை, தூத்துக்குடி மாவட்டத்தில் 14 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி இந்த குடோன்கள் செயல்பட்டதாகச் சொல்லியே சீல் வைத்தனர். இது வைகுண்டராஜன் தரப்பை நிம்மதி இழக்கச் செய்துள்ளது.