Published:Updated:

‘‘தற்கொலை செய்ய மொட்டை அடித்துக்கொண்டா கிணற்றில் குதிப்பாள்?’’

‘‘தற்கொலை செய்ய மொட்டை அடித்துக்கொண்டா கிணற்றில் குதிப்பாள்?’’
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘தற்கொலை செய்ய மொட்டை அடித்துக்கொண்டா கிணற்றில் குதிப்பாள்?’’

தொடரும் கலப்புக் காதல் மரணங்கள்

ரியலூர் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த நந்தினி என்ற சிறுமி, கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி விலகாத நிலையில், பக்கத்து மாவட்டமான பெரம்பலூரிலும் அதே போன்ற கொடுமை தற்போது நிகழ்ந்துள்ளது.

பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்ததால் கொலை செய்யப்பட்டுள்ளார். மகளைப் பறிகொடுத்த துயரில் இருந்த ஐஸ்வர்யாவின் தாய் மல்லிகாவிடம் பேசினோம்.

‘‘தற்கொலை செய்ய மொட்டை அடித்துக்கொண்டா கிணற்றில் குதிப்பாள்?’’

‘‘எனக்கு மூன்று பொண்ணுங்க. என் கணவருக்கு உடம்பு  முடியாது.  பொண்ணுங்கதான் வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாத்துறாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னால, என் மக ஐஸ்வர்யா, பெரம்பலூர்ல ஒரு ஜவுளிக் கடையில வேலை பார்த்தா. அப்போ, நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என் மகளைக் காதலிச்சிருக்கார். அவர், வேற சாதி. எங்களுக்கு விஷயம் தெரிஞ்சதும், ‘எங்க வீட்டுப் பெண்ணுங்க இப்படி உயர் சாதிப்பையனைக் காதலிச்சா வாழவிட மாட்டாங்கப்பா’னு சொன்னோம். அதுக்கு, ‘எங்க அப்பாகிட்ட பேசுறேன்’னு அவர் சொன்னாரு. ஊர்த் தலைவர்கள் முன்னிலையில பஞ்சாயத்துக்குக் கூப்பிட்டாங்க. ‘எங்க வீட்டுல  ஒரு  தலித்  பொண்ணு வாழக் கூடாது’னு பஞ்சாயத்துல சொன்னாங்க. நாங்க, ஐஸ்வர்யாவை கோயமுத்தூர்ல ஒரு துணிக்கடையில வேலைக்கு அனுப்பிட்டோம். அந்தப் பையனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிட்டாங்க. கடந்த 11-ம் தேதி என் மகள் தங்கியிருந்த இடத்திலிருந்து போன் வந்தது. ‘உங்க பொண்ணு கையை அறுத்துக்கிடுச்சு. வந்து கூட்டிட்டுப் போங்க’னு சொன்னாங்க. நாங்க பதறிப்போய், ஐஸ்வர்யாவை வீட்டுக்குக் கூட்டி வந்துட்டோம். மறுநாள் காலையில என் பொண்ணைக் காணோம். எங்க தேடியும்  கிடைக்கல. 16-ம் தேதி மதியம் ஒருவர் போன் பண்ணி, ‘உங்க பொண்ணு கிணத்துல செத்துக்கிடக்கிறா’னு சொன்னார்.  ஓடிப்போய் பார்த்தோம். தலை மொட்டையடிக்கப்பட்டு இருந்துச்சு. உடம்பு முழுக்க காயங்கள். கிணத்துல செத்து மிதந்துக்கிட்டு இருந்தா என் பொண்ணு. பார்த்திபன் வீட்டுக்குப் போய், ‘உங்க பையனோடு என்னைச் சேர்த்து வைங்க’னு ரெண்டு மணி நேரத்துக்கும் மேல பேசிக்கிட்டு இருந்திருக்கா. அதுக்கப்புறம்தான் இந்த நிலைமை’’ என்று வயிற்றில் அடித்தவாறு கதறினார் மல்லிகா.

ஐஸ்வர்யா மரணத்துக்கு நீதி கேட்டு விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் மண்டல அமைப்புச் செயலாளர் கிட்டு, “பார்த்திபன், விடுமுறையில் ஊருக்கு வருவது தெரிந்து, அவரைப் பார்க்க ஐஸ்வர்யா சென்றுள்ளார். அப்போதுதான், அவரைக் கொலை செய்துள்ளனர். பார்த்திபனைப் பார்க்க முடியாத கவலையில் தற்கொலை செய்து கொண்டார் என போலீஸ் சொல்கிறது. தற்கொலை செய்பவர் எதற்காக மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும்? கிணற்றிலிருந்து இருபது அடி தூரத்தில் ஐஸ்வர்யாவின் தலைமுடி கிடக்கிறது. அவருக்கு மொட்டை அடித்தது யார்? அவருடைய துப்பட்டா மடித்து வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கிணற்றில் ஐந்து அடிக்குக் குறைவாகத்தான் தண்ணீர் உள்ளது. அதில் எப்படி மூழ்கி சாகமுடியும்? சம்பவத்துக்கு முதல் நாள் இரவு  விமான டிக்கெட் புக் பண்ணி வெளிநாடு சென்றுள்ளார் பார்த்திபன். இதில் பல சந்தேகங்கள் உள்ளன. அ.தி.மு.க-வினரின் தலையீடு காரணமாக, முக்கியக் குற்றவாளிகளை  போலீஸார் கைது செய்யவில்லை’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘‘தற்கொலை செய்ய மொட்டை அடித்துக்கொண்டா கிணற்றில் குதிப்பாள்?’’

இந்த சம்பவத்தில் சரண்ராஜ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரின் வழக்கறிஞர் ஜெயசீலன், ‘‘சரண்ராஜிடம் பார்த்திபனைப் பற்றி ஐஸ்வர்யா விசாரித்துள்ளார். சரண்ராஜிடம் மட்டுமல்ல, 13 பேரிடம் உதவி கேட்டு ஐஸ்வர்யா பேசியுள்ளார். மற்ற அனைவரையும் போலீஸார்  விசாரிக்காதது ஏன்? பார்த்திபனின் தந்தை அ.தி.மு.க-வினருக்கு நெருக்கமானவர்.அ.தி.மு.க பிரமுகர்கள் பலரும் தலையிட்ட பிறகுதான், வழக்கு விசாரணையே மாறியிருக்கிறது. சரண்ராஜ் அப்பாவி’’ என்றார்.

பார்த்திபனின் தந்தையை பல முறை தொடர்புகொண்டோம். அவர், நம்மிடம் பேச மறுத்துவிட்டார். இந்த வழக்கை விசாரித்துவரும் டி.எஸ்.பி கார்த்தி, ‘‘யாருக்கும் ஆதரவாகச் செயல்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சில கட்சியினர், அந்தப் பெண்ணின் உடலைக் கிணற்றிலிருந்து வெளியே எடுக்கும்போதே இதைக் கொலை வழக்காகப் பதிவுசெய்யுமாறு நெருக்கடி கொடுக்கிறார்கள். பிரேதப் பரிசோதனையில் தற்கொலை என்று வருகிறது. சரண்ராஜ் அந்தப் பெண்ணிடம் தற்கொலைக்குத் தூண்டும்வகையில் பேசியுள்ளார். அதனால், அவரைக் கைது செய்துள்ளோம். பார்த்திபன் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவரை இந்தியா வரவைக்க நெருக்கடி கொடுத்துவருகிறோம். வந்ததும் கைதுசெய்வோம்’’ என்றார்.

சாதியின் கொலைப்பசி தீர, இன்னும் எத்தனை உயிர்கள் தேவைப்படுகிறதோ!

- எம்.திலீபன், படங்கள்: ராபர்ட்