Published:Updated:

கடனில் தத்தளிக்கும் தமிழகம்!

கடனில் தத்தளிக்கும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடனில் தத்தளிக்கும் தமிழகம்!

கடனில் தத்தளிக்கும் தமிழகம்!

தினசரி செய்ய வேண்டிய அவசியமான செலவுகளுக்கே கடன் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பம், எப்படி நல்ல நிலைமைக்கு வர முடியும்? அப்படிப்பட்ட ஒரு குடும்பம் மாதிரிதான், தமிழக அரசின் நிலைமை இப்போது இருக்கிறது. வருவாய் குறைந்ததால், பட்ஜெட்டுக்கு முன்னதாகவே பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வாட் வரியை உயர்த்தினார்கள். பஸ் கட்டணமும் சத்தமின்றி உயர்த்தப்பட்டது. ஆனாலும், வணிக வரி, கலால் வரி, முத்திரைத்தாள் வரி, பத்திரப்பதிவு வருமானம், மோட்டார் வாகனங்கள் பதிவு மூலமாகக் கிடைக்கும் வருமானம் என எல்லாமே வீழ்ச்சி அடைந்திருக்க... செலவுகள் மட்டும் எகிறிக்கொண்டிருக்கின்றன. ‘வரும் 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், தமிழக அரசின் கடன் 3 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்’ என அபாய மணி அடித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. தனது வருமானத்தில் 20 சதவிகிதத்தை வட்டி கட்டவே செலவிட வேண்டிய பரிதாபம். இதனால், தமிழக அரசின் கஜானா திவாலாகும் நிலையில் உள்ளது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.     

கடனில் தத்தளிக்கும் தமிழகம்!

சரிவின் ஆரம்பம்!

கடந்த 2012-13-ம் நிதியாண்டு வரைகூட தமிழக அரசுக்கு வருவாய் உபரி இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில்தான் நிதி நிலை மிக மோசமாகியுள்ளது. 2017-18-ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் கூறியுள்ளபடி, வருவாய் வரவு 1,59,363 கோடி ரூபாய். ஒட்டுமொத்த தமிழகத்தின் நிர்வாகமும் இந்த வருவாய் மூலம்தான் செயல்பட முடியும். இதே நேரம், வருவாய் செலவு 1,75,293 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது, வருவாயை விட செலவுத் தொகை அதிகரித்து, வருவாய் பற்றாக்குறை 15,930 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. தமிழக வருவாயில் பத்து சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. அரசு இயந்திரம் இயல்பாக இயங்குவதற்கே கடன் வாங்கவேண்டும் என்ற நெருக்கடியில்தான் தமிழகத்தின் நிலைமை உள்ளது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கடனில் தத்தளிக்கும் தமிழகம்!

நிதிச் சிக்கலுக்குக் காரணம் என்ன?

தமிழக அரசின் இந்த நிதிச் சிக்கலின் ஆரம்ப காரணமே, தி.மு.க அரசு கொண்டு வந்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி திட்டம்தான் என்கிறார்கள் நிதி மேலாண்மையாளர்கள். இலவசப்பொருட்களும் மானியங்களும், அரசின் வருவாயின் பெரும்பகுதியை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து இந்த இலவசங்களின் பட்டியல் நீளமானதும், செலவுக்கணக்கும் எகிறியது. பத்தாண்டுகள் கழித்து அதன் வீரியத்தை தமிழகம் இப்போது உணரத் துவங்கியுள்ளது. கடந்த 2011-12-ம் நிதியாண்டில் மானியங்கள் மற்றும் இலவசங்களுக்காக ஒதுக்கப்பட்டத் தொகை, 29,726 கோடி ரூபாய். 2017-18-ம் நிதியாண்டில் இது 72,615 கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் சொல்லியிருக்கிறார்கள்.

வளங்களை வருமானம் ஆக்கலாம்!

நிதிச் சிக்கலில் தமிழக அரசு தள்ளாடி வரும்வேளையில், வருவாயைப் பெருக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்பதுதான் வேதனை. குறிப்பாக வரி வசூலை அரசு இறுக்கிப் பிடித்தாலே, வரி வருவாயை இன்னும் அதிகரிக்கலாம். அதேபோல் இயற்கை வளங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசு பெருக்க வேண்டும் என்கிறார்கள். குறிப்பாக ஆற்றுமணல் மூலம் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் புரளுகிறது. ஆனால் அதில் சொற்பத் தொகை மட்டுமே அரசுக்கு வருகிறது. அதே போல் கிரானைட் குவாரி, தாதுமணல் உள்ளிட்டவற்றையும் அரசு முழுமையாகக் கையிலெடுத்து செய்திருந்தாலே இந்த நிதிச்சுமையை தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள்.

தொழில் வளர்ச்சியே இல்லை!


காலியாகி வரும் கஜானாவை சரி செய்ய என்ன வழி? “சமூக நலத்திற்கு பணம் செலவிடுவது அவசியம்தான். ஆனால், அதைவிட அதிகமான பணத்தை வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவு செய்தால்தான், இனி வருவாயைப் பெருக்க முடியும். அரசு செய்யும் முதலீடுகள் குறைந்த கொண்டே வருகின்றன. நம்மை விட சிறிய மாநிலங்கள், நம்மை விட அதிக அளவில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு, ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லை. இங்கே இருக்கிற தொழில்களை வைத்து அரசுக்கு எப்படி வருவாய் ஈட்டலாம் என்ற திட்டங்களே இல்லை. முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியும் பெரிய அளவில் தொழில் முதலீட்டை நாம் பெறவில்லை. இந்த அடிப்படைகளை முதலில் சரி செய்ய வேண்டும். என்னுடைய கணிப்பின்படி, இதையெல்லாம் செய்யாவிட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் மிக மோசமான நிலைக்குச் சென்று விடும்’’ என்று கூறுகிறார், பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர்.

தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை, கடந்த நான்கு மாதங்களாகக் கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. ரேஷன் பொருள்கள் கிடைக்காமல், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முடங்கியிருந்தன. இப்படி பல விஷயங்களுக்கு நிதிப் பற்றாக்குறையைத்தான் காரணம் சொல்கிறார்கள். 

கடனில் தத்தளிக்கும் தமிழகம்!

காலை வாரும் வரிகள்!

தமிழகத்தின் வருவாயில் முக்கியப் பங்கு வகிப்பது வரிகள்தான். இந்த முறை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தது வரியில்லாத பட்ஜெட். இப்படி தமிழக அரசு பெருமையோடு சொல்லிக்கொள்ளக் காரணம், மத்திய அரசுதான். சரக்கு மற்றும் சேவை வரிமுறையில் இனி வரிவசூல் நடைபெற இருப்பதால், தமிழக அரசு வரி நிர்ணயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதுவும் தமிழக அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வழக்குகளால் பத்திரப் பதிவுகள் குறைந்துவிட்டன. அதன் மூலம் அரசுக்கு வந்த வருவாயும் குறைந்துவிட்டது. மந்தமான பொருளாதார வளர்ச்சி, பணமதிப்பிழப்பு போன்றவையும் நிதி நிலைமை மோசமாவதற்குக் காரணிகளாக அமைந்துவிட்டன.

தமிழகம் இப்படி கடனில் சிக்கித் தவிக்கும் நிலையில், மத்திய அரசும் தமிழகத்தைப் பாராமுகமாக நடத்துவதாக தமிழக ஆளும் தரப்பு புலம்புகிறது.  தமிழகத்திற்கு கூடுதல் நிதிவேண்டும் என்று கேட்டும், அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசின் பல திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக தமிழக அரசு செலவு செய்த தொகையை மத்திய அரசு இன்னும் தரவில்லை. 5,000 கோடி ரூபாய் இப்படி பாக்கி உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த ‘உதய்’ திட்டத்தில் தமிழகம் இணைந்ததால், தமிழக மின் வாரியத்தின் 22,815 கோடி ரூபாய் கடனையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. இதனால் கடன் சுமை இன்னும் அதிகமாகிவிட்டது.   

கடனில் தத்தளிக்கும் தமிழகம்!

தொலையப் போகும் தொலைநோக்குத் திட்டம்!

‘‘இந்த நிலை நீடித்தால் அ.தி.மு.க. அரசு கனவு காணும் ‘விஷன் 2023’ திட்டத்தில் ஐம்பது சதவிகிதத்தைக்கூட செயல்படுத்த முடியாது. அதற்கான நிதி ஆதாரமே இங்கு இல்லை. முதலீடுகள் சரிந்துவிட்டன. தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 6500 ரூபாய் கடன் உள்ளது. இதைச் சமாளிக்க முடியாமல்தான் பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி விலையை ஏற்றினார்கள். ஆனால், இது மீண்டும் பொருளாதாரத்தை பாதிக்கப்போகிறது. காரணம், அடிமட்ட மக்களைத்தான் விலைவாசி உயர்வு அதிகம் பாதிக்கும்’’ என்று கடுமையாக விமர்சிக்கிறார் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன்.

இலவசங்கள் மட்டும் காரணமல்ல!

ஆனால், ‘‘தமிழக அரசு கடனில் மூழ்கியதற்கு இலவசங்கள் மட்டுமே காரணமல்ல’’ என்கிறார், பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா. “இன்றைக்குக் கடுமையான வறட்சி நிலவுகிறது. விவசாயம் பொய்த்துப் போனது. இப்படிப்பட்ட சூழலில், வரிவசூலை பலப்படுத்தி இருக்க வேண்டும். இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தாமல் விட்டது பெரிய தவறு. இலவசங்களால் மட்டுமே பற்றாக்குறை ஏற்படவில்லை. பல தனியார் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்களுக்குச் சலுகை அளித்துவிட்டு, ‘வருவாய் வரவில்லை’ என்று கூறுவது நியாயமற்றது. இந்த ஆண்டிலே வருமானத்தைக் கூட்டாமல் விட்டால், அடுத்த ஆண்டு இந்த நிலை இன்னும் மோசமாகிவிடும்’’ என எச்சரிக்கிறார் அவர்.

அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி தமிழகம் கடனில் மூழ்காமல் காக்க வேண்டிய பொறுப்பு எல்லா கட்சிகளுக்குமே இருக்கிறது.

- அ.சையது அபுதாஹிர்
ஓவியம்: ஹாசிப்கான்

இந்த ஆண்டு இன்னும் அதிகமாகும்!

‘‘வா
னிலை அறிக்கை போல தமிழகத்தின் இந்த ஆண்டு சூழலைப் பற்றி கணிப்பு சொல்வதாக இருந்தால், அது அச்சம் தருவதாக இருக்கிறது’’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்:

• சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி), ஜூலை முதல் அமலுக்கு வருவதால், அதன்பிறகு தமிழகத்துக்கு வரி வருமானம் கணிசமாகக் குறையும்.

• ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்போது, செலவு கணிசமாக அதிகமாகும்.

• பொது வினியோகத் திட்டத்துக்கான மானியங்களை மத்திய அரசு குறைத்துவிட்டது. அரிசி, சர்க்கரை என எல்லாவற்றையும் தொடர்ந்து இதே அளவில் தர வேண்டும் என்றால், இந்தச் சுமை தமிழக அரசின் தலையில்தான் விடியும்.

• பெண்களுக்கு ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் திட்டத்துக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல ‘தாலிக்குத் தங்கம்’ உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கும் கணிசமான அளவில் நிதியை ஒதுக்கியுள்ளார்கள்.

• டாஸ்மாக் மூலம் அரசுக்குக் கணிசமான வருவாய் வந்தது. ஆனால் சமீபத்தில் ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூடியதால் 2000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக வருத்தம் காட்டுகிறது தமிழக அரசு.

இது எல்லாமே கடன் சுமையை இன்னும் அதிகமாக்கும்!