Published:Updated:

“சின்ன வயசு கலைச்செல்வன் முகமும் தனுஷ் முகமும் ஒரே மாதிரி இருக்கு!”

“சின்ன வயசு கலைச்செல்வன் முகமும் தனுஷ் முகமும் ஒரே மாதிரி இருக்கு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சின்ன வயசு கலைச்செல்வன் முகமும் தனுஷ் முகமும் ஒரே மாதிரி இருக்கு!”

“சின்ன வயசு கலைச்செல்வன் முகமும் தனுஷ் முகமும் ஒரே மாதிரி இருக்கு!”

‘நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக, நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என வெளியான செய்தியால் தனுஷ் வழக்குச் சூடு பிடித்திருக்கிறது. 

 ‘நடிகர் தனுஷ் எங்கள் மகன்’ என்று மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்துவருகிறது. கடந்த முறை விசாரணைக்கு நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜரானபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ‘‘தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்று கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ் கூறினார். ‘‘அப்படியெல்லாம் இல்லை. கதிரேசன் தரப்பினர் சொன்ன அங்க அடையாளங்கள் தனுஷ் உடலில் இல்லை என்றுதான் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணம் பறிப்பதற்காகத் தவறான தகவலைப் பரப்புகிறார்கள்’’ என்று தனுஷின் வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் இதை மறுத்தார். இதனால் பரபரப்புப் பற்றியது.

“சின்ன வயசு கலைச்செல்வன் முகமும் தனுஷ் முகமும் ஒரே மாதிரி இருக்கு!”

‘சிறு வயதில் காணாமல்போன எங்களுடைய மகன் கலைச்செல்வன்தான் தனுஷ்’ என்று சொல்லும் கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சொல்வதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதை அறிய, அவர்கள் வசித்த ஊர்களில் விசாரணையைத் தொடங்கினோம்.

மேலூரிலிருந்து சிவகங்கைச் செல்லும் வழியில் இருக்கிறது மலம்பட்டி. அங்கு பெட்டிக்கடைக்காரர் ஒருவரிடம், தனுஷ் பற்றி கேட்டோம். “ஆமாங்க. தனுஷ் இந்த ஊரு பையன்தான். சின்ன வயசுல படிக்கப் பிடிக்காம மெட்ராஸ் போயிட்டாப்ல. அந்தக் குடும்பம் ரொம்ப பாவம்ங்க. ‘தனுஷ்தான் எங்கள் மகன் கலைச்செல்வன்னு சொல்லிட்டு மெட்ராஸுக்கு அலையா அலைஞ்சாங்க. நடந்தது நடந்து போச்சு. இப்பாவாச்சும் இவங்கதான் என்னோட அப்பா அம்மான்னு அவர் சொல்லலாம்ல. ரஜினி மகளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால அப்படிச் சொல்றதுக்கு சங்கடப்படுறாப்ல போல’’ என்றார்.

ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே உள்ள ஒரு வீட்டில்தான் கதிரேசன் குடும்பம் நீண்ட காலம் வசித்துள்ளது. அவர்கள் வசித்த வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரனிடம் பேசினோம். “கலைச்செல்வனை எனக்கு நல்லா தெரியும். ஸ்கூல் விட்டு வந்ததும் விளையாட்டு, டான்ஸுன்னு இருப்பான். நான் சின்ன வயசுல பார்த்த கலைச்செல்வன் முகமும், தனுஷோட முகமும் ஒரே மாதிரியா இருக்கு. உண்மை என்னனு கோர்ட்டுதான் சொல்லணும்’’ என்றார்.

2002-ம் ஆண்டு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் ஒன் வகுப்பில் கலைச்செல்வன் சேர்ந்துள்ளார். விடுதியில் தங்கிப் படித்துள்ளார். அப்போதுதான், அவர் காணாமல்போனார் என்று சொல்கிறார்கள். அங்கு வார்டனாகப் பணியாற்றிய சீதாபதியிடம் பேசினோம். “நான் 1989 முதல் 2008 வரை அங்கு பணியாற்றினேன். கலைச்செல்வனின் தந்தை கதிரேசன் என் கிராமத்தைச் சேர்ந்தவர். அந்தப் பழக்கத்தில்தான், கலைச்செல்வனை அங்கு படிக்க வைத்தார். முதலில் அவனுக்கு ஹாஸ்டலில் ரூம் கிடைக்காததால், என் ரூம்ல தங்க வெச்சிருந்தேன். அப்புறம் ரூம் கிடைச்சது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைன்னா வீட்டுக்குப் போயிருவான். அப்படி ஒருநாள் போனவன்தான், எங்கேயோ போயிட்டான். ரொம்ப நாள் தேடி அலைஞ்சோம். அப்புறம், நடிகர் தனுஷ்தான் கலைச்செல்வன்னு சொன்னாங்க, ஆனா எனக்கு அது உறுதியா தெரியலை’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“சின்ன வயசு கலைச்செல்வன் முகமும் தனுஷ் முகமும் ஒரே மாதிரி இருக்கு!”

மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படித்தார் கலைச்செல்வன். அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம். “கலைச்செல்வன் இங்கு படித்ததற்கான ஆவணங்கள் எங்கள் பள்ளியில் உள்ளன. கலைச்செல்வனின் தந்தை இங்கு வந்து சில சான்றிதழ்களின் நகல்களைப் பெற்றுச் சென்றார். அவை தனுஷோடதா என்பது எங்களுக்குத் தெரியாது’’ என்றனர்.

 கலைச்செல்வன் 8-ம் வகுப்புவரை படித்த மேலூர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் விசாரித்தோம். தற்போதுள்ள தலைமை ஆசிரியர், “சத்தியமாக எங்களுக்கு எதுவும் தெரியாது. இங்குதான் கலைச்செல்வன் படித்தார் எனச் சொல்கிறார்கள். நிறைய பேர் வந்து விசாரிக்கிறார்கள். பழைய ஆவணங்களைத் தேடிப்பார்த்தால்தான் தெரியும்’’ என்றார்.

 தனுஷ் தங்கள் மகன்தான் என்பதற்கு இயக்குநர் கஸ்தூரிராஜா நீதிமன்றத்தில் கொடுத்துள்ள ஆவணங்கள், பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன. கடந்த 20-ம் தேதி,  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில் உள்ள விஷயங்களை, இரு தரப்புமே தங்களுக்குச் சாதகமானதாகச் சொல்லிக்கொண்டிருக் கிறார்கள். இதற்கிடையில் தனுஷ் தரப்பிடம் ஒரு கும்பல் டீலிங் பேசுவதாகத் தகவல் வெளியானது.

“சின்ன வயசு கலைச்செல்வன் முகமும் தனுஷ் முகமும் ஒரே மாதிரி இருக்கு!”

பாதுகாப்புக் கருதி திருப்புவனம் அருகே வசித்து வரும் கதிரேசன் குடும்பத்தினரிடம் பேசினோம். “எங்கள் மகன் கலைச்செல்வன்தான் தனுஷ். இதற்கான அத்தனை ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம். நாயக்கர் சாதியான கஸ்தூரிராஜா, தனுஷ் சர்டிஃபிகேட்டில் எஸ்.சி என்று போட்டுள்ளார். இதன் மூலம் அவர் பொய்யான ஆதாரங்களைக் காட்டுகிறார் என்பது அம்பலமாகியுள்ளது. ரேஷன் கார்டில் வெங்கடேஷ்பிரபு என்கிற தனுஷுக்கு 2005-ல் 29 வயது என்று போட்டுள்ளனர். அப்படியென்றால், தனுஷுக்கு இப்போது 43 வயது ஆகிறது. இது எப்படி சரியா இருக்கும்? இவ்வளவு நாள் சும்மா இருந்துட்டு இப்போது கேஸ் போட என்ன காரணம் என்று எங்களை சிலர் கேட்கிறார்கள். நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே தேடி வருகிறோம். முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினோம். அதை, சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்தார்கள். கலைச்செல்வன் சினிமாவில் நடிக்கிறான்னு கேள்விப்பட்டு சென்னைக்குப் போனோம். கஸ்தூரிராஜா வீட்டில் எங்களை உள்ளே விடவில்லை. பல தடவை போனோம். எங்கள் பிள்ளையைப் பார்க்க முடியலை. கோர்ட்டுக்கு வந்தபோதுகூட, எங்களைப் பார்க்க விடாமல் தடுத்துவிட்டார்கள். தனுஷ் எங்கள் மகன்தான் என்பதற்கு இன்னும் நிறைய ஆதாரங்களைக் காட்ட முடியும். டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கட்டும். அதன் பிறகு கோர்ட் சொல்வதைக் கேட்டுக்கொள்கிறோம். ஒரு டி.வி நிகழ்ச்சிக்காக குஷ்பு எங்களைப் பேட்டி எடுத்தார். அப்போதுதான் தனுஷ் உடம்பில் உள்ள மச்சம், தழும்பு பற்றி சொன்னோம். அதன் பிறகுதான் அதையெல்லாம் தனுஷ் உடம்பில் இருந்து அழித்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்” என்றனர்.

 இந்த வழக்கு மார்ச் 27-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

- செ.சல்மான். சே.சின்னதுரை
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

“இது, தனுஷின் சாதி பற்றிய வழக்கு அல்ல!”

தனுஷ் தரப்பு வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் பேசினோம். “கதிரேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யவும், அங்க அடையாளங்களைத் தொழில்நுட்பத்தை வைத்து அழிக்கமுடியுமா என்பதையும் தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தனுஷ் உடலில் சோதனை நடத்திய மருத்துவர்கள் தங்களது மருத்துவ அறிக்கையில், கதிரேசன் தரப்பு குறிப்பிட்ட அங்க அடையாளங்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். உடனே, தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் மூலம் அழிக்கப்பட்டுள்ளன என்று கதிரேசனின் வழக்கறிஞர் தரப்பில் தவறான தகவலைப் பரப்பியுள்ளனர்.

`நாயக்கர் சாதியைச் சேர்ந்த கஸ்தூரிராஜா, எதற்காக தன் மகன் எஸ்.சி என்று பள்ளி டி.சி-யில் குறிப்பிட வேண்டும்’ என்று கேட்கிறீர்கள். தனுஷ் படித்த பள்ளியில் அப்படி எழுதியிருக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் கவனிக்கவில்லை. தனுஷ் யாருடைய மகன் என்பதுதான் வழக்கு. சாதி பற்றியோ, ஆவணங்கள் பற்றியோ இல்லை. 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் இவர்களின் மகன் காணாமல் போனதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதே ஆண்டு மே மாதத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த ‘துள்ளுவதோ இளமை’ படம் ரீலிஸ் ஆகிவிட்டது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ஆறு மாதங்கள் ஷூட்டிங் எடுத்திருப்பார்களே. அப்படி பார்க்கும்போது இவர்கள் சொல்கிற கணக்கு இடிக்கிறது” என்றார்.

‘‘டி.என்.ஏ டெஸ்ட் நடத்த வேண்டும்!”

கதிரேசனின் வழக்கறிஞர் டைட்டஸிடம் பேசினோம். “தனுஷ் தன் மகன் என்று காட்டுவதற்காக கஸ்தூரிராஜா தரப்பில் சமர்ப்பித்த ஆவணங்கள் நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளன. தனுஷின் பள்ளிச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிக்கப்படவில்லை. அதனால், இந்தச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்பட வேண்டும். இதை வழங்கியவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இன்னும் பல ஆதாரங்களை கோர்ட்டின் கவனத்துக்குக் கொண்டுவரப்போகிறோம்.

 கஸ்தூரிராஜா என்ற பெயரில் நீண்ட காலமாக அவர் சினிமா எடுத்து வந்துள்ளார். ஆனாலும், கிருஷ்ணமூர்த்தி என்ற தன் ஒரிஜினல் பெயரை கஸ்தூரிராஜா என்று அதிகாரபூர்வமாக கெஸட்டில் வெளியிட்டது 2015-ல்தான். அதற்கு சில வருடங்களுக்கு முன்பே, வெங்கடேஷ்பிரபு என்ற பெயரை தனுஷ் என்று கெஸட்டில் மாற்றியதாகக் காட்டும் ஆவணத்தில், தந்தை பெயராக கஸ்தூரிராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்? ரேஷன் கார்டு கணக்குப்படி, வெங்கடேஷ் பிரபுவின் வயது 43. கஸ்தூரிராஜாவின் வயது 73. இப்படி பல முரண்பாடுகள் உள்ளன. அவர்கள் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் நம்பகத்தன்மை பற்றி தனியாக வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். டி.என்.ஏ டெஸ்ட் நடத்த வேண்டும் என்றும் மனு செய்துள்ளோம். அதுவும் விரைவில் விசாரணைக்கு வரும்” என்றார்.